தேசியப் பூ காந்தாள்

தேசியத்தின் தேசத்தின் அடையாளச் சின்னமாக பூக்கள் இலங்குவது யாவரும் அறிந்ததே. அந்தந்த தேசியத்தினதும், தேசத்தினதும் வரலாற்று சமூக பண்பாட்டின் பால் பின்னிப்பிணைந்துள்ள தொடர்புபட்டுள்ள மலர்கள் தேசியப் பூக்களாக பிரகடனப்படுத்தப்பட்டு அந்தந்த தேசியங்களால் கௌரவிக்கப்படுவதும், தேசியக்கொடிக்கு சமமாக பேணப்படுவதும், தொன்றுதொட்டு நிலவிவரும் மரபு.

இந்த வகையிலேயே தழிழர்களின் தேசியப்பூவாக, தமிழீழத்தின் தேசியப் பூவாக கார்காலத்தில் மலர்ந்திடுவதும், தமிழீழ தேசியக்கொடியின் வர்ணங்களைத் தன்னகத்தே கொண்டுள்ளதும், தமிழீழத் தேசியத் திருநாளாம் மாவீரர் நாள் வருகின்ற நாட்களில் கொடிபரப்பி பூத்துக் குலுங்குவதும், தமிழீழ தேசமெங்ஙனம் பரவி முகிழ் விடுவதுமான காந்தாள் (கார்த்திகை) பூ பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.


மலர்கள்; தரணியில் இலங்கிடும் தேசங்களைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற வழமை தொன்றுதொட்டு வேதாகமக் காலத்திலிருந்து நிலவி வருகின்றது. கிறித்தவ வேதாகம நூலின் பழைய ஏற்பாட்டிலிலே சாலமனின் பாடல் என்ற அத்தியாயத்தில் (Song of Solomon) பண்டைய எகிப்திய தேசத்தினை தாமரையும், நீலோற்பலமும் பிரதிநிதித்துவப்படுத்தின என்ற செய்தி குறிப்பிடப்பட்டுள்ளது.

பண்டைய தமிழ் மன்னர்கள் தத்தமக்கென தனித்தனியான மலர்களைக் கொண்டிருந்தனர் என்பது வரலாற்றிலிருந்து அறியக்கூடியதாக உள்ளது. அதாவது சோழருக்கு அத்திப் பூவும், சேரருக்கு பனம் பூவும், பாண்டியர்க்கு வேப்;பம் பூவும் தேசிய மலர்களாக இருந்ததுள்ளன.


மேற்குறிப்பிட்ட பூக்களின் மாலைகளையே அவர்கள் களமுனைகளுக்கு செல்லும் போது அணிந்து சென்றதாக அ. தட்சிணாமூர்த்தி என்பார் யாத்த ~தமிழர் நாகரிகமும் பண்பாடும் என்ற நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் அந்நூலில் குறுநில மன்னர்களும் தத்தமக்கு சொந்தமாக மலர்கள் கொண்டுள்ளனர் என்பதும் குறிப்பிடப்படுகின்றது. வீரத்தில் சிறந்தவர்களாம் வேளிர் மன்னர்களில் ஆய் அண்டிரன் என்பார்.

சிறுபுன்னைப் பூவின் மாலையையும், ஏறைக்கோன் என்பார் காந்தள் மாலையும் அணிந்ததாக மேற்படி நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது. இங்கே காந்தள் என்பது கார்த்திகைப் பூவின் பாரம்பரியத் தமிழ்ப் பெயராகும். இவ்வரலாற்றுச் சான்றாதாரத்தினூடாக கார்த்திகை மலருக்கும் தமிழர் வரலாற்றுக்கும் உள்ள தொடர்பு உள்ளங்கை நெல்லிக்கனியாகத் தெட்டத்தெளிவாகின்றது.

தேசத்தோடு மாத்திரமின்றி தேசத்தில் வாழுகின்ற மக்களின் இறை நம்பிக்கைளிலும் பூக்கள் பங்கு வகிக்கின்றன குறிப்பாக இந்துக்களினதும், பௌத்தர்களினதும் அன்றாட வாழ்வில் இறை வணக்கத்திற்கு பூக்கள் பயன்படுகின்றன. இஸ்லாமியர்களின் ஐதீகத்தின் பிரகாரம் வெள்ளை றோசாக்கள் மொகமட் ஆனவர் சொர்க்கத்திற்கு செல்கின்ற வழியில் அவரது இனிமைப்பாட்டின் வெளிப்பாடாக மலர்வதாகக் குறிப்பிடுவர். முருக ஆராய்ச்சியாளரும் கவிஞருமான அறிவுமதியவர்கள் பண்டைத் தமிழர்களின் போர்க்கடவுளாம் முருகனது மலரும் கார்த்திகைப் பூவே என்று குறிப்பிட்டுள்ளார்கள்.


பண்டைய கிரேக்கத்தில் புன்னை ஆனது அப்பலோ தெய்வத்திற்கு அர்ப்பணிக்கப்படுவதோடு புலமையாளர்களை கௌரவிக்கப்படுவதற்கும் உரியதாக விளங்கியது. ஒலிவ் ஏதேன்ஸ் நகர தேவதைக்குரியதாகவும், மெய்வல்லுனர்களையும், களத்தினில் சாதனை படைத்தோரையும் கௌரவப்படுத்துவதற்கும் உரியதாக இருந்தது. ரோமானியர்கள் தங்களுடைய புகழ்பூத்த தளகர்த்தர்களுக்கு சிந்தூர மரத்தின் இலைகளாலும் பூக்களாலும் வனையப்பட்ட கிரீடங்களைச் சூட்டினர்.

இராணுவச் சின்னங்கள், நாடுகள், நகரங்கள், மாநிலங்கள் என்பனவும் தத்தமது இருப்பை, கௌரவத்தை வெளிப்படுத்த தமது சமூக கலாச்சார பண்பாடு பின்னிப் பிணைந்துள்ள பூக்களைப் பயன்படுத்துகின்றனர். அமெரிக்க ஐக்கிய நாடுகளின் ஒவ்வொரு குடியரசிற்கும் ஒவ்வொரு பூ குடியரசுப் பூவாய் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

தமிழீழத் தேசியப் பூவாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ள கார்த்திகைப் பூவைப் பற்றிய மூலாதார விடயங்களை அறிவோம்.

கார்த்திகைப் பூவினை பண்டைத் தமிழ் இலக்கியங்களிலே காந்தள் என்றே அழைப்பார். ஒற்றை விதையிலைத் தாவரங்களில் வெங்காயக் குடும்பமாகிய லில்லி ஆசியே (Lili aceae) எனப்படும் வகையினைத் சேர்ந்ததாகும்.

இக்கொடியின் தண்டு பசுமையானது. பலமில்லாதது. இலைகளின் நுனிகள் நீண்டு சுருண்டு பற்றுக்கம்பிகள் போல பக்கத்திலுள்ள மரஞ்செடி முதலிய ஆதாரங்களைப் பிடித்துக்கொண்டு இந்தத்தண்டு 10-20 அடி உயரம் வளரும்.

கிளை விட்டுப் படரும் ஆண்டுதோறும் புதிய கொடிகள் நிலத்தினுள்ளே இருக்கும் கிழங்கிலிருந்து வளரும். கிழங்கு சாதாரணமாக இரண்டு பிரிவுள்ளதாக இருக்கும். 6-12 அங்குல நீளமும் 1-1.5 அங்குலத் தடிப்பும் உள்ளது. இது கலப்பை போலத் தோன்றுவதால், இதனைக் கலப்பை எனவும் அழைப்பர்.

காந்தள் மொட்டு
கிழங்கின் ஒவ்வொரு பிரிவின் முனையிலும் புதிய கணு உண்டாகும். இலைகளுக்குக் காம்பில்லை எனலாம். 3 அங்குலம் தொடக்கம் 6 அங்குலம் வரையான நீளம், 0.75 அங்குலம் தொடக்கம் 1.75 அங்குலம் வரை அகலமிருக்கும். மாற்றொழுங்கில் அல்லது எதிரொழுங்கில் அமைந்திருக்கும். கணுவிடைகள் வளராமையால் வட்டவொழுங்கில் அமைந்திருப்பதுமுண்டு. இலை அகன்ற அடியுள்ள ஈட்டிவடிவில், நுனி கூராக நீண்டு பற்றுக்கொம்பு போலச் சுருண்டிருக்கும்.

பூக்கள் பெரியவை. இலைக்கக்கத்தில் தனியாக இருக்கும். அல்லது கிளைகளின் நுனியில் இலைகள் நெருங்கியிருப்பதால் சமதள மஞ்சரி போலத் தோன்றும். அகல் விளக்குப் போன்ற, ஆறு இதழ் கொண்ட இப்பெரிய பூக்கள் (6-7 செ.மீ நீளம்) செப்ரம்பர் தொடக்கம் ஜனவரியிலும், மார்ச்சிலும் மலர்கின்றன. பூக்காம்பு 3-6 அங்குல நீளமிருக்கும். முனையில் வளைந்திருக்கும். 2.5 அங்குல நீளம், 0.3-0.5 அங்குல அகலம் கொண்டதாகும். குறுகி நீண்டு ஓரங்கள் அலைபோல நெளிந்திருக்கும்.

தளை அவிழ்ந்த மலர் ஏழு நாட்கள் வாடாமல் இருக்கும். இதழ்களில் நிறம் முதலில் பச்சை, பிறகு வெண்மை கலந்த மஞ்சள். பிறகு மஞ்சள், பிறகு செம்மஞ்சள், பிறகு துலக்கமான சிவப்பு (Scarlet)இ நீலம் கலந்த சிவப்பாக மாறிக்கொண்டு போகும்.

இதழ்கள் விரிந்து அகன்றோ, பின்னுக்கு மடங்கிக் கொண்டோ இருக்கும். கேசரங்கள் 6 அங்குலம், தாள் 1.5- 1.75 அங்குலம், மரகதப்பை 0.5 அங்குலம். முதுகொட்டியது, இங்குமங்கும் திரும்பக் கூடியது. சூலகம்: 3 அறையுள்ளது. சூல் தண்டு 2அங்குலம் ஒரு புறம் மடங்கியிருக்கும்.

பூவின் நிறம் இருவேறாக மாறுபடுவதால் இதனை வெண்காந்தள்;, செங்காந்தள்; என்ற இரு வேறு வகைகளாக வருணிப்பார்கள். கிழங்கு பிரிந்து கணுக்கள் உள்ளதை ஆண்காந்தள் என்றும் கணுக்களில்லாததை பெண்காந்தள் என்றும் குறிப்பிடுவர்.

கார்த்திகைச் செடியின் கிழங்கு ஆயுர்வேதம், யுனானி முறைகளில் பலவிதமாகப் பயன்படுகின்றது. இக்கிழங்கில் காணப்படும் நச்சுப்பொருளான கொல்சிசைனே வைத்திய முறைகளில் பயன்படுகின்றது. மேற்கு வைத்தியத்திலும் கொல்சிசைன் பயன்படுத்தப்படுகின்றது. ஆனால் இரு வைத்திய முறைகளிலும் கொல்சிசைசின் பயன்பாடு வித்தியாசப்படுகின்றது. தோலைப்பற்றிய ஒட்டுண்ணி நோய்களுக்கு இதனைப் பற்றுப் போடுவார்கள். தேள் கடிக்கும் இதனைப் இழைத்துப் போடுவதுண்டு. நேரடியாக இக்கிழங்கினை உட்கொள்ளின் நஞ்சாகும். சிறதளவு உட்கொண்டாலும் முடி உதிரும்.

காந்தள் என அழைக்கப்படும் கார்த்திகைத் திங்களில் முகிழ்விடும் இம்மலர்க்; கொடி தமிழீழம் தவிர இந்தியா, சீனா, மலாக்கா தீபகற்பம், அயனமண்டல ஆபிரிக்கா முதலான பகுதிகளிலும் காணப்படும். இதன் பூ தீச்சுவாலை போலக் காணப்படுவதால் ~அக்கினிசலம் எனப்படும். இதன் கிழங்கு கலப்பை வடிவமானதாக இருப்பதால் கலப்பை எனவும் ~இலாங்கிலி எனவும் அழைக்கப்படும். இலைகளின் முனை சுருண்டு காணப்படுவதால் தலைச்சுருளி என்றும் அழைக்கப்படும்.

அவற்றால் இது பற்றி ஏறுவதால் பற்றியென்றும் அழைக்கப்படும். அவ்வாறு வளைந்து பற்றுவதால் கோடல், கோடை என்று அழைக்கப்படும். கார்;த்திகை மாதத்தில் மலர்வதால் கார்த்திகைப் பூ என்றும் அழைக்கப்படுகின்றது. மாரிகாலத்தில் முதலிலேயே வனப்பாய்த் தோன்றுவதால் ~தோன்றி என்றும் அழைக்கப்படும். சுதேச வைத்தியத்திலே இதiனை ~வெண்தோண்டி எனவும் அழைப்பர். இவ்வாறு தமிழ்மொழியில் பலபெயர்களால் அழைக்கப்படும்.

கார்த்திகைச் செடியானது வேலிகளிலும், பாதையோரங்களிலும், காட்டோரங்களிலும் இக்கொடி படர்ந்து நிமிர்ந்து அழகிய விரல்கள் போலவும், சுடர்கள் போலவும் தோன்றும். இதனாலேயே இச்செடிக்கு மிக மேலான மாட்சிமை பொருந்தியது எனும் பொருளில் புடழசழைளய ளுரிநசடிய என்ற பெயரில் அழைப்பர்.

கார்த்திகைப் பூவின் ஏனைய மொழிப் பெயர்கள் வருமாறு: சிங்களம்: நியன்கல, சமஸ்கிருதம்: லன்கலி, இந்தி: கரியாரி, மராட்டி: மெத்தொன்னி

தாவரவியற் பெயர்: லல்லி ஆசியே குளோறி லில்லி (Liliaceae Glory lily)

தேசத்தின் பூவாம் கார்த்திகைப் பூவினை இனிவரும் காலங்களில் தேசிய நிகழ்வுகள் அனைத்திலும் அணிந்து தேசியமாண்பினை வெளிப்படுத்துவோம். இல்லங்கள், பொதுக் கூடங்கள், வாணிப மையங்கள், கல்விச்சாலைகள் என எல்லாவிடங்களிலும் கார்த்திகைச் செடி வளர்த்துப் பேணி கார்த்திகைப் பூவால் தமிழர் தேசமதை நிறைத்திடுவோம்.

தொகுப்பு: வீரநாதன்

1) தமிழர் வரலாறு: தேவநேயப் பாவாணர் (கழக வெளியீடு)

2) தமிழர் நாகரிகமும் பண்பாடும்: அ.தட்சிணாமூர்த்தி (ஐந்திணைப் பதிப்பகம்)

3) சென்னைப் பல்கலைக்கழக கலைக் களஞ்சியம்

4) நர்மதாவின் தமிழ் அகராதி

5) Encarta Reference Library 2003

6) Sri lankan Flowers New edition 2003

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s