வந்தோருக்கெல்லாம் உணவு படைத்து வாழ்ந்த வன்னி மக்கள் பட்டினியில்

வன்னி நிலப்பரப்பின் வளமான பகுதி முல்லைத்தீவு மாவட்டம். வயல்வெளிகள், வாழைத்தோப்புகள், தென்னைமரச்சோலைகள், கனிமரங்கள், நந்திக் கடல இவற்றோடு மனசு நிறைந்த மக்கள் என செழுமை போர்த்திய நிலப்பரப்பு. மண்வளம் சிறப்பா, மக்களின் மன வளம் சிறப்பா என்று பட்டிமன்றமே நடத்தும் அளவுக்கு

நமது கொங்கு மண்டல மக்களைப்போல் விருந்தோம்பலில் சிறந்த மக்கள் முல்லைத்தீவு மக்கள்.

வீட்டில் மொத்தம் மூன்று பேர் என்றாலும் ஆறு பேருக்கு அடுப்பில் அரிசி வைக்கும் மக்கள். மிச்சமென்றால் ஆடு, மாடுகளுக்கு வைக்கலாம். வீணாபோனாலும் பரவாயில்லை, ஆனால் பசியோடு யாரேனும் வர நேர்ந்தால் உணவின்றிப் போகக்கூடாதென்ற உயர்ந்த பண்பாடுடைத்த மக்கள்.

இதனை இங்கு நான் எழுதக் காரணம் சற்று முன்னர் கொழும்பிலிருந்து நண்பரொருவர் தொலைபேசியில் அழைத்து ஓவென்று அழுதார்.

“”முல்லைத்தீவு கடற்கரையில் இப்போதும் சுமார் 70,000 மக்கள் நிற்கிறார்கள். அவர்களுக்கான உணவுப் பொருட்கள் முற்றிலுமாய் தீர்ந்துவிட்டன. நேற்றைய தினம் சில நூறு உணவுப் பொட்டலங்களை விடுதலைப் புலிகள் எடுத்துச் சென்றபோது, அவற்றைப் பெறுவதில் ஏற்பட்ட நெரிசலில் மூன்றுபேர் பலியாகியுள்ளனர்.

வந்தோருக்கெல்லாம் உணவு படைத்து வாழ்ந்த எங்கள் மக்கள் கால் வயிறு நிரப்பும் சாப்பாட்டுப் பொட்டலங்களுக்காய் சாகவேண் டிய நிலைக்கு கடவுள் எங்களை ஆளாக்கிவிட்டாரே”

என்று கதறினார்.

சுவிட்சர்லாந்து நாட்டு ஜெனிவா நகரில் இருந்து கொண்டு ஐ.நா. அமைப்பு களுடன் செயல்பட்டு வரும் சில நண்பர்களிடம் பேசினேன். “”பசி, பட்டினியால் அப்பாவி மக்கள் சாகிறார்கள். குறைந்தபட்சம் உணவு, மருந்துப் பொருட்களையாவது அவசரகதியில் அம்மக்களுக்கு கொண்டு சேர்க்க ஐ.நா. அவை நடவடிக்கைகள் மேற்கொள்ளக்கூடாதா?” என்றேன். அவர்கள் எனக்குத் தந்த பதில் அதிர்ச்சிக்குரியது.

“”ஐ.நா. பொதுச்செய லர் பான் கி மூன் சீன நாட்டின் ஏஜெண்ட் என்ற சந்தேகம் உள்ளது. சீனாவின் உளவு அமைப்பு தான் திட்டமிட்டு, பெரும்பணம் செலவழித்து அப்பதவிக்கு அவரை கொண்டு வந்ததாக பலரும் இங்கு பேசிக்கொள்கிறார்கள். இலங்கை தொடர்பான விஷயங்களில் சீனா சொல்கிறபடிதான் பான் கி மூன் இயங்குகிறார். பெரும் மனித அழிவின் விளிம்பில் பல்லாயிரம் மக்கள் நிற்கிறார்கள் என்பது இங்குள்ள எல்லோருக்கும் தெரியும். ஆனால், அது தொடர்பான அதி காரபூர்வ அறிக்கைகளையும், கோப்புகளையும் வேண்டு மென்றே தாமதப்படுத்துகிறார்” என்றனர்.

இந்துமத அமைப்பின் தலைவர் ஒருவர் அனைத் துலக மனி தாபிமான உதவிகளேனும் விரைவாக அம்மக்களுக்கு கிடைத்திட வேண்டி பாடுபட்டு வருகிறார். ஜெயவர்தனே அதிபராக இருந்தபோது யாழ்குடா ராணுவ முற்றுகைக்கு உள்ளான காலத்தில் இந்திய ராணுவ விமானங்கள் உணவுப் பொட்டலங்களை வானிலிருந்து பொழிந்தன. அவ்வாறு ஐ.நா. அனுமதியோடு அமெரிக்கா இப்போது செய்யலாமே என்ற யோசனை முன்வைக்கப்பட்டதாகவும், ஆனால் இந்தியா அதனை உறுதியாக எதிர்த்து நிராகரித்து விட்டதாகவும் கூறப்படுகிறது.

100 கோடி ரூபாய் நிவாரண உதவிகளுக்கென இந்தியா இலங்கைக்கு அறிவித்துள்ளது. இந்த உதவிகள் ஐ.நா. நிறுவனங்கள் அல்லது இந்திய செஞ்சிலுவை சங்கம் ஊடாக யுத்த களப்பகுதிகளில் அல்லலுறும் மக்களுக்கு வழங்கப்படுமென்ற ஏற்பாடுகளை இந்தியா செய்திருந்தால் வணங்கி வரவேற்றிருக்கலாம். ஆனால் எவ்வித நிபந்தனையுமின்றி வழங்கப்படும் இந்த நிதி, தமிழ் மக்களை புனர்வாழ்வு முகாம்கள் என்ற பெயரில் திறந்தவெளிச் சிறையிலிட்டு, நடைபிணங்களாக்கி அவர்களின் தேசியத்தை யும் அரசியல் அடையாளத்தையும் அழித்தொழிக்கும் சிங்களப் பேரினவாத சதிக்கு துணைபோகும் செயலாகவே பார்க்கப்படும்.

பொத்தாம் பொதுவாக மொழி, இன அடிப்படையில் மனித சமூகங்களுக்கு எதிர்மறையான பொது குணாம்சங்கள் சார்த்துவதை ஏற்றுக்கொள்ள மறுத்து வந்திருக்கிறேன். வேரித்தாஸ் வானொலியில் நான் கடமையாற்றியபோது என் சக தமிழ் பணியாளர்களைவிட அதிகம் நட்பு பேணியது சிங்கள மொழி ஒலிபரப்பாளர்களுடன். எனக்கு சமைக்கிறவர் வரத் தவறினால் அன்போடு உணவு கொண்டு வந்து பரிமாறும் சிங்கள சகோதர, சகோதரிகளை மறக்க முடியவில்லை. இந்தியா வந்து தமிழ் மையம் நிறுவி, இளையராஜாவுடன் திருவாசகம் இசையாக்கி, சென்னை சங்கமமெல்லாம் நடத்தும்போது பிராமண நண்பர்களோடு அதிகம் இணைந்து பணியாற்றி னேன். “பிராமண எதிர்ப்பு’ என்ற பொத்தாம் பொதுவான எதிர் வரையறைகளுக்குள் சிக்கிவிடக்கூடாதென்பதில் பிரக்ஞையுடன் இயங்கி வருகிறேன்.

அதுபோலவே மலையாள மொழி பேசும் நண்பர்களும் நிறையபேர் எனக்குண்டு. இதனை நான் குறிப்பிடக் காரணம் தமிழ் உணர்வாளர்களின் சமகால உரையாடல் களை அருகிலிருந்து கவனித்து வருகிறவன் என்பதால் முக்கியமான ஒரு விஷயத்தை இங்கு குறிப்பிட வேண்டியுள்ளது.

தமிழ் உணர்வாளர்கள் மத்தியில் பிராமண எதிர்ப்பு தணிந்து மலையாளி எதிர்ப்பு கூர்மையாகி வருகிறது. ஏனென்றால் ஈழத்தமிழரின் தேசியத்தை மூர்க்கமாக அழித் தொழிக்கும் ராஜபக்சே சகோ தரர்களுக்கு துணை நிற்கும் இந்திய அதிகார அமைப் பிற்கு தலைமை தாங்குகிறவர்கள் மலையாளிகள் என்ற உணர்வு ஆழமாகப் பதிந்து வருகிறது. இந்தியா வின் பாதுகாப்பு செயலர் எம்.கே. நாராயணன் மலை யாளி, வெளியுறவுச் செயலர் சிவசங்கர் மேனன் மலையாளி, பாதுகாப்பு அமைச் சர் ஏ.கே.அந்தோணி மலையாளி, ஐ.நா. பொதுச்செயலரின் சிறப்புத் தூதுவர் விஜய் நம்பியார் மலையாளி. இவரது சகோதரர் சதீஷ் நம்பியார் இந்திய ராணுவத்தில் உயர் அதிகாரி. ராஜ பக்சே சகோதரர்களையும் இலங்கை ராணுவ தளபதி சரத் பொன்சேகாவையும் சமீபத்தில் இவர் புகழ்ந்து தள்ளியிருந்தார்.

இவற்றை நான் இங்கு உள்நோக்க முடன் குறிப்பிடவில்லை. அக்கறையுடன் பதிவு செய்கிறேன். தமிழர்கள் இயல்பில் வன்முறை போக்குடையவர் அல்லர். யாவரோடும் ஒப்புரவில் வாழ விரும்புகிறவர்கள். ஆனால் கையறு நிலையின் எல் லையில் நிற்பதாக உணரும் போது தமிழன் வெடிப்பான். சமீபத்தில் கோவை பகுதியில் ராணுவ வாகனங்கள் மீது நடந்த தாக்குதல் முக்கிய மான ஒரு வெளிப்பாடு. திட்டமிட்ட ஒருங்கிணைப்பு ஏதுமின்றி நூற்றுக்கணக் கானோர் வீதிகளில் இறங்கி ராணுவ வாகனங்களை தடுத்து தாக்குகிறார் களென்றால், குறைந்தபட்சம் ஒரு சிறு தொகுதி இளைஞர்கள் மத்தியிலேனும் இந்திய அரசமைப்பு மீதான கோபமும் ஆத்திரமும் புயல்போல மாறிக்கொண்டிருக்கும் அடை யாளமாகவே நாம் பார்க்கவேண்டும். சிங்களப் பேரின வாதத்திற்கு துணைநின்று சொந்த மக்களை இழந்துவிடும் நிலையை அதிகாரத்தில் இருக்கிறவர்கள் உருவாக்கக்கூடாது. மத்தியில் அதிகாரத்தில் இருக்கிறவர்களின் இன்றைய பொறுப்பற்றத்தனம் சமூகங்களுக்கு இடையே யான நீண்டகால நல்லுறவை விஷப்படுத்திவிடக்கூடாதென்ற கரிசனையில் மட்டுமே இதனை எழுதத் தலைப்பட்டேன்.

இந்திய வெளியுறவு கொள்கையும் பாதுகாப்பு கொள்கையும் ஆங்கிலம் படித்த வெகுசில மேல்தட்டு வர்க்க மனிதர்களின் ஏகபோகமல்ல. அவை இந்திய ஜனநாயகத்திற்கு மட்டுமே கடமைப்பட்டவை. அதில் சிவசங்கர் மேனன் களுக்கு என்ன உரிமை உண்டோ, அதே உரிமை எனக்கும் எனது கிராமத்தின் கொச்சுபிள்ளைக்கும், வனஜாவுக்கும் எனது சேரியின் மாடசாமிக்கும் மல்லிகாவுக்கும் உண்டு. நமது ஜனநாயகத்தின் புனிதம் அதிகார மமதை கொண்டோரின் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளால் சிதைக்கப்படுவதை நாம் எந்நிலையிலும் ஏற்க முடியாது, கூடாது.

மிகக்குறுகிய நிலப்பரப்பில் இறுதிப் போருக்காய் நிற்கும் புலிகளின் அணிகள், நகர்வுகள் குறித்த சிறு விபரங்களைக்கூட இந்தியாவின் செயற்கை கோளும், ராடர்களும் படம்பிடித்து சிங்கள ராணுவத்திற்கு தினம் கொடுக்கின்றன.

ஆனால் வியப்புக்குரிய விஷயம் என்னவென்றால் நின்று பிடித்து உக்கிரமாகச் சண்டையிடும் மன வலு சிங்கள ராணுவத்தினருக்கு கடந்த முப்பது ஆண்டுகளில் ஒரு களத்தில்கூட இருந்ததில்லை. இப்போதைய சண்டைகளிலோ மூர்க்கமாக நிற்கிறார்கள். ராஜபக்சே என்ன மந்திரம் செய்தார் என்பதை அறிய முற்பட்டேன்.

இரண்டு காரியங்கள் நடப்பதாய் தெரிய வருகிறது. சண்டை தொடங்குமுன் ராணுவத்தினருக்கு கஞ்சா, அபின் போன்ற போதைப்பொருட்கள் கொடுக்கப்படுகிறதாம். மனிதப் படுகொலை செயல்களை வக்கிரமான இன்பக் கிளர்ச்சியாக்கும் போதை வஸ்துகள் இவை.

அவ்வாறே ராணுவத்தினர் யாரேனும் பின்வாங்கி தப்பியோட முயன்றால் அவர்களை சுட்டுக்கொல்வதற்கென்றே தனிப்படை அணி நிறுத்தப்பட்டுள்ளதாம். சண்டைக் களத்தில் நின்றாலும் மரணம், தப்பியோடினாலும் மரணம் என்ற நிலையில்தான் ராணுவத்தினரின் மூர்க்கம் வெளிப்படுவதாய் நம்பகமான தகவல்கள் கூறுகின்றன.

தனது ராணுவத்தினரின் உயிர்களையே மதிக்காத ராஜபக்சே சகோதரர்கள் தமிழ் மக்களின் உயிர்களுக்கு மதிப்பளிப்பார்கள் என எதிர்பார்ப்பது நியாயமில்லைதான்.

தமிழகத்தில் வாக்குப்பதிவு மே 13-ந் தேதி முடிந்ததுமே யுத்தம் அசுரத்தனமாக வெடிக்கும் என சொல்லப்படுகிறது. பிரபாகரன் அவர்கள் களத்தில் போராளிகளோடுதான் நிற்கிறார் என்பதும் உறுதி செய்யப்படுகிறது. புலிகள் சரணடைய வேண்டும், இல்லையேல் செத்து மடியவேண்டும் என ராஜபக்சே முழங்கியிருக்கிறார்.

என்ன நடக்கும் ?

(நினைவுகள் சுழலும்)

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s