வன்னி அவலம்

மறக்க முடியுமா? அழகான இருசொற் கேள்வி. நக்கீரன் தந்த இத்தலைப்பிற்கு ஆழமான பண்பாட்டுக் குணாதிசயங்கள் உண்டு. பைபிளில் கடவுள் சொல்வதாய் வரும் சொற்களில் மிக அதிகமாய் மீண்டும் மீண்டும் பதிவு பெறும் சொற்கள் இரண்டு. “”மறவாதீர்கள்”, “”நினைவில் கொள்ளுங்கள்” என்ற இரு சொற்கள். ஆங்கில மொழியில் மிகவும் பிடித்த, சொலவடைகளில் ஒன்று:

The burden and bliss of memory தமிழில் நினைவுகளின் சுமையும், சுகமும் என சுமாராக மொழிபெயர்க்கலாம்.

இன்று பாலஸ்தீன மக்கள் மீது சொல்லொணா அட்டூழியங்களை நிகழ்த்தி வரும் யூதர்கள் ஒரு காலத்தில், பல்வேறு அடிமைத்தனங்களை அனுபவித்தவர்கள். சற்றேறக்குறைய 5000 ஆண்டு காலம் பூமியின் பல்வேறு பரப்புகளில் அடிமைகளாயும் நாடோடிகளாயும் அவலமுற்று வாழ்ந்தவர்கள். வரலாறு முழுதும் வலிகளையே சுமந்து நடந்த யூதர்களால் எப்படி இன்று பாலஸ்தீன இசுலாமிய மக்கள் மீது இத்துணை கொடூரம் காட்ட முடிகிறதென்பது மானுட இயல்பின் புரிய இயலாத புதிர்களில் ஒன்று. ஆனால் 5000 ஆண்டு கால அடிமைத்தனத்தை அவர்களால் தாக்குப்பிடித்து, தப்பிப் பிழைத்திருந்து 1948-ல் இஸ்ரேல் என்ற நாட்டையும் பெற உதவியது அவர்களது “”மறவோம்” என்ற உறுதியும் “”நினைவில் கொண்டிருப்போம்” என்ற வைராக்கியமும்.

பட்ட துன்பங்களை அவர்கள் மறக்க வில்லை. அனுபவித்த அவலங்கள் அனைத்தை யும் பாடங்களில், பிரார்த்தனைகளில், உரை யாடல்களில், சமூக நிகழ்வுகளில், கதைகளில், காப்பியங்களில் என தமக்கும் தலைமுறை களுக்கும் நினைவுபடுத்திக் கொண்டே இருந்தார்கள்.

நமக்கு பொங்கல், கிறிஸ்து பிறப்பு, ரம்ஜான் போல் யூதர்களுக்கும் ஆண்டு தோறும் ஒரு திருவிழா உண்டு. அந்நாளில் எல்லா யூத வீடுகளிலும் பெரு விருந்து நடக்கும். அவ்விருந்தின் மிக முக்கியமான ஓர் அம்சம் என்னவென்றால் வேப்பங்காயை விட ஆயிரம் மடங்கு கசக்கும் ரசம் ஒன்றை குழந்தைகள் முதல் முதியோர் வரை எல்லோரும் குடித்தாக வேண்டும். அக்கசந்த காடியை குடித்தபின் குடும்பத்தலைவர் யூத இனத்தின் துன்ப வரலாற்றை நெடுங்கதையாக வருணிப்பார். நெஞ்சம் கனத்தவர்களாய் தம் இனம் கடந்து வந்த பாதையின் பாடுகளை உள் வாங்குவார்கள். எக்காலத்திலும் எம் இனம் மீண்டும் அத்தகு துன்பங்களை எதிர் கொள்ள வேண்டிய நிலை வராதபடி நாம் இடைவிடா விழிப்புணர்வோடு ஒன்றுபட்டு உழைக்க வேண்டுமென்ற உறுதியையும் ஏற்பார்கள்.

1948-ல் தமக்கென இஸ்ரேல் நாடு கிடைக்கும் வரை சமூக நிகழ்வுகளிலெல்லாம் தமது இனத்தின் அவலங்களை புனிதத்தன்மை சார்த்தி நினைவு கூர்ந்தார்கள். உதாரணமாக அமெரிக்காவில் வாழ்ந்த கோடீசுவர யூதர் வீட்டுத் திருமண வைபவமானாலும் ஒரு சடங்கு உண்டு. மணமகன் தன் பாதத்தால் கண்ணாடிக் குமிழ் ஒன்றை மிதித்து உடைக்க வேண்டும். மங்கலமான மணவிழாவில் மணமகனின் காலிலிருந்து ரத்தம் பீறிடும். அப்போது யூத மத குரு அவன் காலில் கட்டுப் போட்டுக் கொண்டே சொல்வார்: “”மகனே, மணமகனே! இன்று உனக்கும் நமக்கும் மகிழ்ச்சியான நாள் என்பது உண்மைதான். ஆனாலும் உன் காலில் இப்போது நீ உணரும் வலிபோல நமது யூத இனம் நாடற்று அடிமைத் தனங்களை அனுபவித்து வருகிறதென்பதை நினைவில் கொள்வாயாக!”.

1980-களில் உலகைக் கலக்கிய இசைக்குழு போனி எம்- இர்ய்ங்ஹ்ம் அவர்களது பாடல்களில் மிகவும் புகழ் பெற்றது “”பாபிலோன் நதிக்கரை களிலே… இஹ் ற்ட்ங் தண்ஸ்ங்ழ்ள் ர்ச் இஹக்ஷஹ்ப்ர்ய் என்ற பாடல். உண்மையில் அப்பாடலின் வரலாறு யூதர்களுக் குரியது. பாபிலோனியப் பேரரசர் நெபுகத்நெசார் யூதர்களை வெற்றிகொண்டு அடிமைகளாய் தன் நாட்டிற்கு அழைத்துச் செல்கிறார். அடிமை வேலைக்கிடையே கிடைக்கும் ஓய்வின்போது தமது கடவுளைப் பற்றி பாடல் பாடும்படி சக பாபிலோனியர்கள் கேட்கிறார்கள். அப்போது அவர்கள் மனதின் உணர்வுகளாய் பதிவு பெற்ற வரிகள்தான் அப்பாடல். “”பாபிலோன் நதியின் கரையினில் நாங்கள் அமர்ந்து எங்கள் தந்தையர் தேசத்தை நினைத்தபோது அழுதோம். எம்மை அடிமைப்படுத்தியவர்களோ எங்கள் கடவுளைப் பற்றிப் பாடச் சொன்னார்கள். அடிமைப்படுத்தி யவர்களின் மண்ணில் நின்று கொண்டு எங்கள் கடவுளின் பெயரை எப்படி நாங்கள் உச்சரிப்போம்?” என்பதாக வளரும் மறக்க முடியாத அந்தப் பாடல்.

வேரித்தாஸ் வானொலி நாட்களில் எமக்கு கடிதமெழுதும் பெண்களில் இருவர் சிவசங்கரி மற்றும் அங்கயற்கண்ணி. அங்கயற்கண்ணி முதற்கடிதம் எழுதியது 1996 செப்டம்பர் 16-ம் தேதி. முதற்கடிதத்தின் சில வரிகள் இவை: “”சொந்த மண்ணில் அகதியாய் வயதான பெற்றோருடனும், கணவர் பிள்ளைகளு டனும், உறவினருடனும் பரந்தனிலிருந்து பத்து மைல் தூரத்தில் ஸ்கந்த புரத்தில் குடிசை கட்டி தஞ்சம் புகுந்திருக்கிறோம். மர நிழலிலும் குளக்கரைகளிலும் பசியும் பட்டினியுமாய் கூட்டம் கூட்டமாய் வாழ்கின்ற எம் மக்களின் பரிதாப நிலை நெஞ்சை உலுக்கு கிறது. ஒரு சமூகத்தை வேரோடு பிடுங்கிவிட்ட வரலாறு இங்கே நடந்து முடிகிறது. எங்களின் எதிர்காலம் என்ன? இன்றைய சந்தோஷங்களோ நாளைய நம்பிக்கைகளோ இல்லாத எங்கள் வாழ்க்கை எப்படி முடியப் போகிறது? எங்கள் துயரங்கள் யாராலுமே புரிந்து கொள்ளப்படப் போவதில்லையா? நாங்கள் ஏன் நேசிக்கப் படத்தகாதவர்கள் ஆனோம்?” என்ற கேள்விகளோடு அக்கடிதம் வந்தது. 2002 வரை தொடர்ந்து எழுதிக் கொண்டிருந்தார். பின்னர் நானும் வேரித்தாஸ் வானொலியை விட்டு அகல, தொடர்பறுந்தது.

ஏழு ஆண்டுகளுக்குப் பின் அங்கயற்கண்ணியிடமிருந்து மீண்டும் ஒரு மடல். முல்லைத்தீவு முற்றுகை நிகழுமுன்னரே தப்பி வந்து எழுதியிருக்கிறார். யார் மூலமாகவோ அக்கடிதம் கொழும்புக்கு வந்து, அங்கிருந்து பிரான்சு நாட்டுக் குப் போய், பிரான்சிலிருந்து நான் முன்பு தங்கியிருந்த தோமையார்மலை முகவரிக்கு வந்து, கடந்த புதனன்று தமிழ்மையம் வந்து சேர்ந்தது. ஏப்ரல் 19-ம் தேதியிட்டு எழுதப்பட்ட கடிதம்:

“”எமக்கு ஒன்று மட்டும் புரியவில்லை. இத்தனை துன்பங்களும் வதைகளும் பட எம் இனம் என்ன பாவம் செய்தது? உங்களுக்கு நான் கடிதம் எழுதிய அந்நாட் களை விட நூறு மடங்கு துன்பங்களை அனுபவித்து எல்லாமே இழந்து போன நிலை வர என்ன பிழை செய்தோம்? தமிழராய் பிறந்தது அவ்வளவு பெரிய குற்றமா?

மரணத்தின் விளிம்பில் வந்து நிற்கிறோம். வன்னி மக்கள் இயல்பில் எளிமை யானவர்கள். சக மனிதர்களை நேசிப்பவர்கள். சூது, வாது தெரியாதவர்கள். ஏழ்மை யிலும் விருந்தினரை உபசரிக் கும் இனிய பண்புடையவர் கள். அம்மக்கள் ஒருவேளை கஞ்சிக்கு பாத்திரமேந்தி மணிக்கணக்கில் காத்திருப்பது காணப் பொறுக்க வில்லை. எதிரி நடுவில் ஆடு மாடுகள் போல் அடைபட்டுக் கிடக்கிறோம்.

ஏதேனும் ஒரு அதிசயம் நிகழ்ந்து நாங்கள் காப்பாற்றப்பட மாட்டோமா எனத் தவிக்கிறோம். கவலைப்படாதீர்கள் என்று எம் கண்ணீர் துடைக்க ஒரு கரமாவது நீளாதா என அங்குமிங்கும் பார்க்கிறோம். யாரோடு நோவோம், யாருக் கெடுத்துரைப்போம்? துயரங்களைப் பகிர்ந்து கொள்ளக் கூட எமக்கு எவரும் இல்லை. எனவேதான் எப்படியாவது தங்கள் கரம் எட்டும் என்ற நம்பிக்கையில் இக்கடிதம் எழுதுகிறேன். என் மன ஆறுதலுக்காக”.

அங்கயற்கண்ணி எழுதியிருந்த நீண்ட கடிதத்தின் ஒரு பகுதி இது.

கடந்த வியாழன்கூட சவேரா விருந்தினர் விடுதியின் மேல்தள உணவகத்தில் மனச்சுமை குறைக்க நண்பர்களோடு உரையாடிக் கொண்டிருந்தபோது, ராய் என்ற வங்காளத்து நண்பர் கேட்டார்: “”எல்லாம்தான் முடிந்துவிட்டதே… ஏன் தேவையில்லாமல் பெயரைக் கெடுத்துக் கொள்கிறீர்கள்? திருவாசகம், சென்னை சங்கமம் போல் செய்வதற்கு எவ்வளவோ நல்ல காரியங்கள் இருக்கின்றனவே…” என்றார். நான் அவருக்குச் சொன்னேன்:

“”மே 18-ம் தேதி மட்டுமே 20,000 தமிழ் மக்கள் முல்லைத்தீவில் உயிரோடு புதைக்கப்பட்டார்கள். பதுங்கு குழிகளுக்குள் துப்பாக்கியால் சுடப்பட்டு குற்றுயிராய் துடித்துக் கிடக்கையிலே புதைக்கப்படுகையில் இயலாமையின் அந்தரிப்பொன்று அம்மக்களை ஆட் கொண்டிருக்குமே… அதற்கு அந்தக் கடவுள் மட்டுமே சாட்சியாய் நின்றிருக்க முடியும். அவர் சாட்சியாய் நின்றிருந்த காரணத்தினால் மட்டுமே நான் பேசுகிறேன். நான் பேசும் மொழியை பேசியவர்கள் என்பதால் அம்மக்கள் கொல்லப்பட்டார்கள். ஏன் கொன்றீர்கள் என்றுகூட நான் இப்போது கேட்கவில்லை. மிகக் குறைந்தபட்சம் என் சடலத்தையேனும் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கையில் சேர்த்துக் கொள்ளுங்கள் என்றுதான் கேட்கிறேன்” என்றேன்.

(நினைவுகள் சுழலும்)

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s