உயிரம்புகள் கதை மற்றும் திரைப்படம்


அணு ஆயுதங்கள் போன்ற பேரழிவாயுதங்களைக் கொண்டும் அதி நவீன இராணுவ தொழில்நுட்பங்களாலும் உலகையே அச்சுறுத்தும் வல்லாதிக்க சக்திகளைக் கூட அச்சமடையச் செய்திருக்கும், தமிழீழ மக்களின் போரியல் முறைகளில் ஒன்றான உயிராயுதம் தாக்கி இருக்கும், மானுட ஆத்மாவை பிறருக்காய் உவந்தளிக்கும் மகோன்னத தியாகிகளை மையப்படுத்தி உருவாக்கப்பட்ட முழு நீளத் திரைப்படமே.. உயிரம்புகள்..!

தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் உயிராயுதமாக திகழும் கரும்புலிகளை மையப்படுத்தி ஒரு வலுவான திரைக்கதை அமைத்து நெறிப்படுத்தி –

அனைவரும் உட்காச்ந்திருந்து பார்க்கக் கூடிய ஒரு விறுவிறுப்பான திரைப்படமாக உயிரம்புகள் வெளிவந்துள்ளது. வாழ்த்துக்கள்.

எமது மண்ணின் திரைப்பட வரலாற்றில் உயிரம்புகள் சற்று வித்தியாசமான முயற்சி எனலாம். இதுவரை இதுபோன்றதொரு திரைப்படம் இதுவரை வெளிவரவில்லை. என்ற நிலை இருந்தது. இத்திரைப்படம் மூலம் அக்குறை தீர்ந்துள்ளது என உணரப்படுகிறது.

நீண்டகாலப் பெருமுயற்சியின் வெளிப்பாடாகக்கூட இது இருக்கலாம். முதலில் சிறந்த வலுவான கதையை தெரிவு செய்த குழுவிற்குப் பாராட்டு தெரிவிக்க வேண்டும். உயிரம்புகள் மூலம் வீடியோத் திரைப்பட உலகிற்குள் முதன்முதலாக ஊடக இல்லம் நுழைந்துள்ளதும் அவர்கள் முதல் முயற்சியிலேயே வெற்றி பெற்றுள்ளதும் பாராட்டுக்குரியது.

இவ்வீடியோ திரைப்படத்திற்கு திரைக்கதை அமைத்து நெறியாள்கை செய்திருக்கும் அல்பேட் பவுலசின் முயற்சி சாதனைக்குரியது. ஏனெனில் ஒரு இளைஞன் தன் வீடியோக் கமரா மூலம் அற்புதங்களை நிகழ்த்தலாம் என்பதற்கு அடையாளமாக உயிரம்புகள் வீடியோத் திரைப்படத்தை இயக்கியுள்ளார். ஒளிப்பதிவு, படத்தொகுப்பு, பாடல், திரைக்கதை இயக்கம் எனப் பல்துறை நிபுணராக நின்று படத்தை வெற்றிகரமாக இயக்கி தான் ஒரு சிறந்த இயக்குனர் என நிரூபித்துள்ளார். அது நிச்சயமாகப் பாராட்டப்பட வேண்டியதுதான்.

சராசரி சினிமா உலகம் அல்லது திரைப்பட உலகம் என்பது விசாலமானது அதற்குள் தாக்குப்பிடிப்பது என்பது கடினமானது தான். இதில் பலர் மூழ்கிப் போனவரலாறுகளே நிறையவுண்டு. இது உலகம் பூராகவும் பொருந்தும். இந்நிலையில் ஈழத்தமிழர்களின் சினிமா என்பது எவ்வளவு கரடுமுரடான பாதைகளால் கடக்கப்பட வேண்டியது என்பது சம்மந்தப்பட்டவர்கள் அறிந்திருப்பார்கள். ஆயினும் இந்தக் கடின முயற்சியில் ஈழத்தமிழ்த் திரைப்பட உலகினர் ஈடுபட்டு வருகின்றனர். என்பது பாராட்டுக்குரியது. என்பதோடு இத்தகைய முயற்சிகளுக்கு ஈழத்தமிழர்கள் திரைப்பட இரசிகர்கள் போன்றோர் ஆதரவளிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு ஈழத்திரைப்பட உலகின் மத்தியில் உண்டு. அந்த வகையில் ஆதரவளிக்கப்பட வேண்டிய திரைப்படம் உயிரம்புகள் ஆகும்.

இப்போது நாங்கள் உயிரம்புகள் திரைப்படத்தில் மனதில் நின்ற சில காட்சிகள் உங்களையும் கவரும் என்பதற்காக ஒரு சில காட்சிகளைத் தருகின்றேன்.

சிறிலங்கா இராணுவம் எங்கள் மண்ணை ஆக்கிரமித்து நிலைகொண்டுள்ள பகுதியில் 250 போராளிகள்; சிங்கள் இராணுவத்தின் முற்றுகைக்குள் சிக்கி விடுகின்றனர். இதுகுறித்து படைத்துறைத் தலைமை ஆலோசித்து எதிரியின் முற்றுகைக்குள்ளாகிய போராளிகளை மீட்பதற்கு தாக்குதல் கட்டளைப் பீடத்தில் தந்திரோபாயமான திட்டம் தயாரிக்கப்பட்டு அதற்கு மூன்று பேர் கொண்ட கரும்புலிகள் அணி தெரிவு செய்து அனுப்பப்பட்டு வெற்றிகரமான தாக்குதல் மூலம் இராணுவமுகாம் அழிக்கப்பட்டு 250 போராளிகளும் காப்பாற்றப்படுகின்றனர். இதுவே திரைப்படத்தின் கரு. படம் தொடங்கி முடியும் வரை விட்டுச் செல்ல முடியாதவாறு விறுவிறுப்புடன் நகர்கிறது.

காலையில் அந்தக் கரும்புலிகள் அணி புறப்படுகிறது. அந்த இராணுவ முகாம் மதியம் 12 மணிக்குத் தாக்கப்பட வேண்டுமென இலக்குவைக்கப்படுகிறது. சுமார் 25 கிலோமீற்றர் தூரத்தை இவர்கள் கடக்கவேண்டும் அதற்கு இவர்கள் கால் நடையாகவே நடந்து சென்று எதிரியின் இலக்கை அடைகிறார்கள். காலையில் இருந்து தாக்குதல் இலக்கு விரையும் வரையும் நடைபெறும் சுவாரஸ்யமான சம்பவங்கள் படத்திற்கு மெருகூட்டுகின்றன. அந்தக் கரும்புலி அணியில் இடம்பெற்றுள்ள மூவரின் இயல்பான நடிப்பு அனைவர் மனங்களையும் தொட்டுவிடுகின்றது. மூவரும் படத்திற்கு புதிய வரவுகள் தான் ஆயினும் தாங்கள் அறிமுக நடிகர்கள் என்று நம்பமுடியாதவாறு அவர்களின் நடிப்பு உரையாடல்கள் என்பன அமைந்திருக்கின்றன.

படத்தில் முக்கியமாகக் கணேஸ்மாமாவைக் குறிப்பிடவேண்டும். அவரது பாத்திரம் எல்லோர் மனங்களிலும் ஒருசுமையை ஏற்படுத்திவிட்டது. கரும்புலிகள் அணி இராணுவக்கட்டுப்பாட்டுப் பிரதேசத்துக்குள் நுழைந்து சந்திக்கும் ஆள் கணேஸ்மாமாவே. (அவர் ஒரு நகைச்சுவை நடிகர்) போராளிகளை இராணுவத்திற்குத் தெரியாமல் அழைத்துச் சென்று மறைத்துவைத்திருந்த ஆயுதங்களை எடு;த்துக் கொடுப்பதும், ஆயுதங்களை எடுக்க ஆலமர உச்சிக்கு ஏறுவதும், இடையில் களைத்துப் போய் இருப்பதும் ஏலாமல் வீழ்ந்து விடுவாரோ என எண்ணும் நேரத்தில் பாய்ந்து பாய்ந்து ஏறுவதும் சுவாரசியமான காட்சியாகும். அவர் ஒரு வயது முதிர்ந்த மனிதராக இருந்தபோதும் மனத்துணிவோடு ஏறுவது இந்தப் போராட்டத்தின் மீது கொண்டிருக்கும் உணர்வைக் காட்டுகிறது.

ஒரு இராணுவ ஆக்கிரமிப்புக்குள் இருக்கும் ஒருவர் எவ்வாறு போராளிகளுக்கு உதவுவதும் அது விடுதலை வேட்கையின் வெளிப்பாடாக இருப்பதும் மிகச் சிறப்பாக சித்தரிக்கப்பட்டிருக்கிறது. ஆலமர உச்சியில் மறைந்திருந்த ஆயுதங்களை போராளிகளிடம் கொடுத்துவிட்டு அவர் அடையும் ஆனந்தம் உணர்வாக வெளிப்படுகிறது. கரும்புலி அணி அதனைப் பெற்றுச் செல்வதும் மனதைவிட்டு அகலாதவை. அவரது நடத்தை போராடும் தேசமக்களின் பற்றுணர்வை வெளிக்காட்டும் சம்பவமாகவும் அதுபடத்தைத் தூக்கி நிறுத்தும் காட்சியமைப்பாகவும் வெளிப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

தாக்குதலுக்குத் தயார்படுத்தப்பட்ட கரும்புலிகள் அணியில் இடம்பெற்ற சசி, நிலவன், கீதன் ஆகியோரின் நடிப்பு அற்புதம். தாக்குதலுக்குத் தயாராக மூன்று கரும்புலிகள் படைத்துறைத் தளபதியால் தெரிவு செய்யப்பட்டு அழைத்துச் செல்லப்படுகின்றனர். அப்போது பெண் கரும்புலிப் போராளிகளில் ஒருவரான சசி பேராடுகிறார். இந்தமுறை எனக்கு அந்த வாய்ப்பை தருவதாகக் கூறினீர்கள் இப்போது ஏன் என்னை விட்டுவிட்டீர்கள் என கூறுகின்றாள். அதற்கு இது சற்றுக் கடினமான பணி நீங்கள் கஸ்ரப்படுவீங்கள் எனக் கூறுகிறார் படைத்தளபதி. அப்போது இல்லை எங்களால் முடியும் தானும் தாக்குதல் அணியில் இடம்பெறப் போவதாக வலியுறுத்தி அதில் இணைந்து கொள்கிறாள்.

கரும்புலிப் போராளிகள் பயிற்சிப் பாசறையில் மிகவும் மகிழ்ச்சியோடு பயிற்சி பெறுவதும் தேசவிடுதலைக்காகத் தமது இன்னுயிரை ஈகம் செய்ய தயாராக இருப்பதும் எந்தச் சவால்களைச் சந்திக்கும் திறனுள்ளவர்களாக இருப்பதும் இத்திரைப்படம் மூலம் எம் கண்முன்னே கொண்டு வரப்படுகிறது. கரும்புலி அணிக்குச் சசி தெரிவுசெய்யப்பட்டதுடன் அடையும் மகிழ்ச்சி பெண்களாலும் பெரும் தாக்குதல்களை நடாத்த முடியும் எனவாதிடுவதும் அவரது நடிப்பால் மேலும் வெளிப்படுத்தப்படுகிறது.

250 போராளிகள் காப்பாற்றப்பட வேண்டும் என்ற கட்டளைப்பீடத்தின் பணிப்பை நிறைவேற்ற வேகமாக நடந்து ஒரு இடிந்து போன வீட்டில் களைப்பாற நுழைகிறார்கள் அது இராணுவத்தாக்குதலால் சிதறிப்போயிருந்தது. அங்கே கூடிக்கதைக்கிறார்கள். நிலவன் சொல்கிறான் இதுதான் எங்கட வீடு இந்த முற்றத்தில் தான் ஓடி விளையாடுறனாங்கள். ஒரு நாள் விளையாடும் போது தங்கையோடு சண்டை பிடித்து அவள் பல்லுடைந்து போய்விட்டது. அம்மா அடிக்க ஓடிப்போய் இந்த மாமரத்தில ஏறிவிட்டன். என தன் இளமைக்கால வாழ்க்கையை நினைவு கூர்ந்த போது யதார்த்தமாக இருந்தது. அது எல்லோர் வீட்டிலும் நிகழும் ஒரு சம்பவமாக மனக்கண் முன்வந்து மோதியது. இராணுவத் தாக்குதல்களால் வீடு வாசல்களை இழந்து போன ஆயிரமாயிரம் தமிழ்மக்களின் யதார்த்த நிலையைப் பிரதிபலிப்பதாகவும் அந்தக் காட்சி அமைந்திருக்கிறது. அனைவரையும் நெகிழவைத்தது அதுபோன்ற மரத்தடியில் இருந்து சாத்திரம் பார்ப்பதும் பிஸ்கட் சாப்பிடுவதும் கதை அளப்பதும் என எல்லாம் மனதில் நிற்கின்ற சம்பவங்களாக நம் மனதில் ஆழமாகப் பதிந்து விடுகின்றன.

படத்தின் உச்ச கட்டமாக இராணுவத்தின் ஆட்லறித்தளம் முகாம் மீது கரும்புலிகள் அணி தாக்குதலை தொடர்கின்றனர். இந்த வெற்றிகரமான தாக்குதலைக் கண்டு சிங்களப்படை முகாம் கட்டளையதிகாரி துள்ளுவதும், குதிப்பதும் தன் வீரர்களிடம் புலிகளை அழிக்கும் படியும் கூறி கட்டுப்பாட்டுக்குள் வீரவசனம் பேசுவதும் முளிபிதுங்கி பூனைக்குட்டி மாதிரி சுத்தி ஓடுவதும் இறுதியில் சூடு வாங்குவதும் படை முகாம்கள் புலிகளிடம் வீழ்ச்சியடையும் போதும் நடைபெறும் நிகழ்வை அப்படியே கண்முன் கொண்டு வருகிறது.

இதில் குறிப்பாக சிங்களத்தில் படையதிகாரி பேசுவது தமிழ் திரைப்படத்திற்கு புதியமுயற்சி வித்தியாசமானதொன்றாக உள்ளது. அது பின்னிணைப்பாக தமிழில் வருகிறது. மொத்தத்தில் படையதிகாரியாக நடிக்கும் பரமநாதனின் நடிப்பு நன்றாகவிருந்தது.

இறுதிக்கட்ட தாக்குதல் ஓர் ஆங்கிலப்படம் போன்ற உணர்வை ஏற்படுத்தயது. ஒவ்வொரு காட்சியும் விறுவிறுப்பாக இருந்தது. அடுத்து என்ன நடக்கப்போகிறது என்ற எதிர்பார்பைத் தோற்றுவிப்பதாக இருந்தது. சராசரி ஒரு திரைக்கதை என்ன நோக்கில் செல்ல வேண்டுமோ அதுமாதிரி அமைந்திருந்தது.

இறுதியில் கரும்புலி அணி இராணுவ முகாமை முற்றுகையிட்டு தகர்த்தழிக்கிறது. நிலவன் வீரச்சாவு அப்போது சசி கீதனிடம் கேட்கிறாள் ஏன் நிலவன் போனவன்? எனக்குத் தானே அந்தச் சந்தர்ப்பம் என்றாள.; ஏன் என்பதை நீங்கள் படத்தைப் பார்த்துத் தெரிந்து கொள்ளுங்கள்.

இசைப்பிரியனின் இசை படத்தை மெருகூட்டுகிறது. எமது மண்ணின் வாசனையை ஒளிப்பதிவாக்கி தந்த உயிரம்புகள் கலைஞர்கள் பாராட்டப்பட வேண்டியவர்கள். ஒட்டுமொத்தமாக உயிரம்புகள் திரைப்படம் எமது மண் வரலாற்றில் ஒரு சிறந்த பதிவு. புதிய முயற்சியாக விடுதலைப் புலிகளின் படைப்பிரிவுகள் காவற்றுறை என்பவற்றின் துணையோடு காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும். போராளிகளின் போர்க்களச் செயற்பாடுகளையும் அவர்களது வீரம் தியாகம் போன்றவற்றையும் இனம் கண்டு கொள்ளக் கூடிய நேர்நிலையில் உருவாகவும் இதனைப் பார்க்கலாம்.

எமது மண்ணின் வீரத்தையும்; ஈகத்தையும் எண்ணி வியப்புற்றிருக்கும் உலகின் முன் இத்திரைப்படமும் ஒரு புதியபார்வையை வெளிப்படுத்தும் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை. இது போன்ற படைப்புக்கள் வெளிவரவேண்டும் இன்னும் இன்னும் வர வேண்டும். ஈழத்தமிழர் திரைப்பட வரலாற்றில் ஊடக இல்லத்தின் முயற்சி பயன் மிக்கது. இது போன்ற படைப்புக்களைத் தொடர்ந்து வெளிக் கொணர வேண்டும் அதற்குத் தமிழ்மக்கள் தங்கள் ஆதரவை வழங்குவர். நல்ல சிறந்த படைப்புக்கள் என்றும் வரவேற்றப்படும் என்ற யதார்த்த நிலைக்கு ஒருமைல் கல்லாக உயிரம்புகள் வெளிவந்திருக்கின்றன.

எமது மண்ணின் வாசனையும் எமது மண் எதிரியால் ஆக்கிரமிக்கப்பட்டு இருக்கலாம். அதிலிருந்து விடுபட எப்படியெல்லாம் போராட வேண்டியுள்ளது என்ற செய்தியும் இதில் சொல்லப்பட்டுள்ளது.

படத்தில் நடித்துள்ள அனைத்துக் கலைஞர்களும் பாராட்டப்பட வேண்டியவர்கள். ஒவ்வொரு நடிகரும் தன்பாத்திரத்தை புரிந்து சிறப்பாக நடித்துள்ளார்கள்.

குறிப்பாக கரும்புலியாக நடித்திருக்கும் சசி, நிலவன், கீதன் எல்லோர் மனதிலும் ஆழமாகப் பதிந்து விட்டனர். அவர்களது இயல்பான நடிப்பு மிகமிகத் தத்துரூபமாக அமைந்து விட்டது. நீண்ட காலமாக இதுபோன்றதொரு படத்தை பார்க்க வேண்டுமென்ற ஆசைக்கு வழி பிறந்துள்ளது.

தமிழ்ச் செய்திகள்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s