மாவிலாற்றில் இருந்து முள்ளிவாய்க்கால் வரை – 09

திருகோணமலையில் இருந்துகொண்டு தமிழ் மக்களின் பிரச்சனையை நாடாளுமன்றத்திற்கு எடுத்துரைத்து பல செயற்பாடுகளை காண்பித்தவர் நாடாளுமன்ற உறுப்பினர் துரைரட்ணசிங்கம்.

ஒவ்வொரு நாடாளுமன்ற அமர்விலும் திருமலையின் பிரச்சனைகள் பூதாகரமாகும். தமிழ் உறுப்பினர்கள் தமிழ் மக்களின் பிரச்சனைகளை கதைக்கும் போது சிங்கள நாடாளுமன்ற உறுப்பினர்கள் அதனைச் சத்தம்போட்டு, மேசைகளில் அடித்து பேசவிடாமல் குழப்புவார்கள். ஆனாலும், தமிழ் உணர்வாளர்கள் சிங்களத்தின் இந்தக் கெடுபிடிகளுக்குள் இருந்து கொண்டும் தமிழர் பிரச்சனைக்கு குரல் கொடுத்தார்கள். ஆனால், எல்லாம் செவிடன் காதில் ஊதிய சங்குதான். இவ்வாறுதான் தமிழ் மக்கள் பேரவைத் தலைவர் விக்னேஸ்வரன் அவர்கள் தமிழ் கடற்தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்தும், திருகோணமலையில் சிறீலங்காப் படையினரின் கடல் வலைய தடைச்சட்டம் தொடர்பாகவும் வன்னியில் உள்ள ஊடகம் ஒன்றிற்கு 06.04.2006 அன்று இரவு செவ்வியளித்திருந்தார்.

செவ்வியளித்த மறுநாள் காலை திருமலை துறைமுக சிறீலங்காவின் காவல் நிலையத்திற்கும் காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்திற்குமிடையில் உட்துறைமுக வீதியில் அமைந்துள்ள இலங்கை வங்கியின் மத்திய கிளையினுள் விக்கினேஸ்வரன் நுழையும்போது ஒட்டுக் குழுவினரால் சுட்டுக் கொல்லப்படுகின்றார். இவரின் இழப்பு திருகோணமலையில் தமிழ் மக்கள் மத்தியில் பாரிய இழப்பாக கருதப்பட்டது. இந்தப் படுகொலையானது, ஜெனீவா பேச்சுக்களிலிருந்து விடுதலைப் புலிகளை விலகச் செய்யும் முயற்சியயன தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் கண்டனம் வெளியிட்டிருந்தனர். இவரது தமிழ் உணர்வு செயற்பாட்டினை கெளரவித்து தமிழீழ தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்கள் மாமனிதர் என்ற உயர் விருதை வழங்கி கெளரவித்திருந்தார்.

‘இவரது வாழ்வு திருமலை மண்ணோடும் மக்களோடும் ஒன்றியதாக இருந்தது. இவர் திருமலை மண்ணையும் மக்களையும் ஆழமாக நேசித்தார். அங்கு தலைவிரித்தாடும் இராணுவ ஒடுக்குமுறையையும் நில ஆக்கிரமிப்பையும் முழுமூச்சாக எதிர்த்து நின்றார். எமது மண் எமக்கே சொந்தம் என்று உரிமைக் குரலை ஆக்கிரமிப்பு இராணுவத்திற்கு மத்தியில் நின்றுகொண்டே உலகுக்கு உரத்துக் கூறினார்’ என தமிழீழ தேசியத் தலைவர் இவரது தேசத்திற்கான பங்களிப்பையும் அதற்காக துணித்து செயற்பட்ட அவரது வீரத்தையும் தனது அறிக்கையில் எடுத்துக் கூறியிருந்தார். இவரின் உடலம் வன்னிக்கு எடுத்துவரப்பட்டு பல இடங்களில் பெருமளவான மக்களினதும் போராளிகளினதும் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பின்பு திருகோணமலையில் அடக்கம் செய்யப்படுகிறது.

இவரது படுகொலை தொடர்பிலான அறிக்கையை திருமலை கண்காணிப்புக் குழுவினர் கொழும்பு தலைமையகத்துக்கு அனுப்பி வைத்தது. படுகொலை செய்யப்பட்டதற்கு முதல்நாள் கடல்வலயத் தடைச் சட்டத்தை நீக்குவது தொடர்பாக கடற்றொழிலாளர்கள் அமைப்புடன் கண்காணிப்புக் குழுவினரைச் சந்தித்து நீண்டநேரம் விவாதித்திருந்தார். இப்படுகொலை தொடர்பில் பலரிடம் விசாரணை நடத்திய கண்காணிப்புக் குழுவினர் சம்பவம் நடைபெற்ற இடத்தின் நிழற்படங்களையும் இணைத்து அறிக்கை தயாரித்து கொழும்புக்கு அனுப்பி வைத்தது. தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக கண்காணிப்புக் குழுவிடம் விக்னேஸ்வரன் பலமுறை முறைப்பாடு செய்திருந்தமையும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டியிருந்தது. இவரது படுகொலையின் தொடர்ச்சியாக திருகோணமலையில் சில வன்முறை சம்பவங்கள் வெடிக்கின்றன.

சிங்கள காடையர்களால் தமிழ் மக்கள் மீது துப்பாக்கிச்சூடு, கைக்குண்டுத் தாக்குதல்கள் என தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன. பாடசாலை மாணவர்கள் கூட சுட்டுக் கொல்லப்படுகிறார்கள். படையினரால் வல்வளைக்கப்பட்ட சம்பூர் பிரதேசம் அதியுயர் பாதுகாப்பு வலையமாக படையினரால் அறிவிக்கப்படுகின்றது.

இதன்பின்பு மூதூர் கிழக்குப் பிரதேசத்தில் சிங்கள கடல் தொழிலாளர்கள் தொழிலில் ஈடுபடுகின்றார்கள். இன்னொரு பக்கம் பெளத்த மதத்தை கட்டியயழுப்புவதில் சிறீலங்கா இராணுவம் ஈடுபடுகின்றது. வெருகல், 45ம் கட்டை, வாழைத்தோட்டம், கல்லடி, புன்னையடி, இலங்கை துறைமுகத்துவாரம் போன்ற பகுதிகளில் பெளத்தமதம் வளர்ந்த வரலாற்று சின்னங்கள் இருப்பதாக சிறீலங்கா படையால் அறிவிக்கப்படுகிறது.

(இக்கிராமங்கள் வெருகல் 18 பிரதேச சபைக்குள் அடங்குபவை) 45ம் கட்டை எனப்படும் இடத்தில் பெரிய பெரிய பாறை கற்கள் மலைகள் உள்ளன. இவற்றில் கோயில்களும் உள்ளன. அவ்வாறான சில பாறைகளின் உச்சியில் புத்தர் சிலை நாட்டப்படுகிறது. கல்லடி எனப்படும் இடத்தில் 120 அடி உயரம் கொண்ட மலை காணப்படுகிறது. அதன் உச்சியில் முருகன் ஆலயம் உள்ளது. சில விசித்திரமான எழுத்துக்கள் அந்த மலையில் பொறிக்கப்பட்டிருக்கின்றன. இதனை சிங்கள மூதாதையர்களைக்கொண்டு சிறீலங்கா அரசு ஆய்வு செய்து, தொன்மையான பெளத்தமதம் இருந்ததற்கான சான்றுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்று அறிக்கை வெளியிடுகின்றது.

இதன்பின்பு அங்கும் பெளத்த விகாரை அமைக்கப்படுகின்றது. அதேபோல் இலங்கைத்துறை முகத்துவாரத்தில் 70 அடி உயரம்கொண்ட கடற்கரை அருகில் கல்லுமலை ஒன்று உள்ளதாக இதன் உச்சியில் வேளாங்கன்னி மாதா கோவில் உள்ளது. அருகில் பெரிய ஆற்று தொடுவாய் உள்ளது. இதனை எல்லாம் ஆராய்ந்துவிட்டு பெளத்த மதம் சிங்கள மக்கள் வாழ்ந்ததற்கான ஆதாரங்கள் உண்டு எனத் தெரிவிக்கின்றார்கள். இவ்வாறு சம்பூர் பிரதேசத்தில் மலைகளிலும் ஆற்று மரங்களின் கீழும் புத்த விகாரைகள் கட்டப்பட்டு பெளத்த மதம் பரப்பப்படுகின்றது. தமிழர்கள் வாழ்ந்ததற்கான ஆதாரங்கள் அழிக்கப்படுகின்றன. இது ஒருபுறம் இருக்க, இந்தியாவுடன் அனல்மின் நிலையம் அமைப்பதற்கு ஒப்பந்தம் எழுதப்படுகிறது. தமிழ் மக்கள் பூர்வீகமாக வாழ்ந்த இடம் சம்பூர்.

சொந்த வீடுகள், விவசாயக் காணிகள் இங்குள்ளன. தமிழ் மக்களின் பூமிமை அயல்நாட்டிற்கு தாரை வார்க்கின்றது சிறீலங்கா. தமிழர்கள் நிலத்தையும் இழந்து சுற்றுச் சூழல் பாதிப்பையும் சுகாதாரச் சீர்கேட்டை எதிர்கொள்ள வேண்டிய நிலையில் இதன்மூலம் சிங்கள மக்களே பெருமளவு பயன் அடைய இருக்கின்றார்கள். அதாவது இந்தியாவின் அனல்மின் நிலையம் நிறுவப்பட்டால் அங்கு வேலை செய்பவர்கள் சிங்களவர்கள். பின்பு அவர்களின் குடும்பங்கள் அருகில் உள்ள தமிழ் கிராமங்களில் குடியேற்றப்படுவார்கள். இவ்வாறு ஒட்டுமொத்தமான தமிழின அழிப்பினை சிறீலங்கா அரசு நீண்டகால திட்டமிடலின் அடிப்படையில் மேற்கொள்கின்றது. இதன் முதற்கட்டமே திருகோணமலையில் இருந்து விடுதலைப் புலிகள் வெளியேற்றப்பட்டு, தமிழின உணர்வாளர்கள் அழிக்கப்பட்டு, தமிழ்மக்களின் நிலங்கள் அபகரிக்கப்பட்டு தமிழர்கள் அனாதைகள் ஆக்கப்பட்டார்கள்.

(தொடரும்…)

நன்றி்:ஈழமுரசு

————
தலைமைச் செயலகம்
தமிழீழ விடுதலைப்புலிகள்
தமிழீழம்
08.04.2006

தாயக விடுதலையைத் தனது வாழ்வின் அதியுயர் இலட்சியமாக வரித்து, அந்த உயரிய இலட்சியத்துக்காக அயராது உழைத்த உன்னத மனிதரை தமிழீழ தேசம் இன்று இழந்துவிட்டது. எமது தாயகத்தின் தலைநகரில் விடுதலைக்காக ஒளிர்ந்த ஒரு சுதந்திரச் சுடர் இன்று அணைந்து விட்டது. தமிழர் தேசியத்தின் ஒற்றுமைக்காகவும் ஒருமைப்பாட்டிற்காகவும் ஓயாது ஒலித்த ஒரு பெரும் குரல் இன்று ஒடுங்கிவிட்டது. தமிழ்த் தேசியத்தின் எழுச்சிக்கும் வளர்ச்சிக்கும் முதுகெலும்பாக நின்று முனைப்புடன் செயற்பட்ட ஒரு தமிழினப் பற்றாளர் எதிரியின் கோரமான தாக்குதலுக்குப் பலியாகிவிட்டார். இந்த உன்னத மனிதரை இழந்து இன்று எமது தேசம் ஆறாத்துயரில் மூழ்கிக்கிடக்கின்றது.

திரு வ.விக்கினேஸ்வரன் அவர்கள் ஒரு அற்புதமான மனிதர். உயர்ந்த குணவியல்புகள் கொண்டவர். அனைவரையும் கவர்ந்து கொள்ளும் ஆளுமை படைத்தவர். தமிழ் மக்களால் பெரிதும் போற்றப்பட்ட ஒரு தேசப்பற்றாளர். இவரது இழப்பு தமிழர் தேசத்துக்கு என்றுமே ஈடுசெய்யமுடியாத ஒரு பேரிழப்பு.

தமிழீழத் தனியரசே தமிழரின் தேசியப் பிரச்சினைக்கு இறுதியான உறுதியான தீர்வு என்பதில் அசையாத நம்பிக்கை கொண்டவர். தமிழரின் உயிர்களையும் உடைமைகளையும் அழித்து, தமிழரின் நிலத்தையும் வளத்தையும் சூறையாடி, ஒட்டுமொத்தமாக தமிழரின் தேசிய அடையாளத்தையே சிதைத்துவிடும் நோக்குடன் சிங்கள அரசுகள் தொடர்ச்சியாக மேற்கொண்டு வரும் இனஅழிப்பு போரை இவர் முழுமையாக எதிர்த்து நின்றார். இந்த அழிவில் இருந்து தமிழீழ மக்கள் முழுமையாக விடுபட்டு, விடுதலை பெற்று, சுதந்திரமாக, கௌரவமாக, நிம்மதியாக வாழ்வதையே தனது குறிக்கோளாக வரித்துக்கொண்டார். வரித்துக்கொண்ட குறிக்கோளில் உறுதி தளராது, பாதை விலகாது பயணித்தார். தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தையும் அதன் இலட்சியத்தையும் முழுமையாக முழுமனதுடன் ஏற்று, தமிழீழ விடுதலைப் போராட்டதிற்குப் பல்வேறு வழிகளிலும் பங்களிப்புச் செய்தார்.

இவரது வாழ்வு திருமலை மண்ணோடும் மக்களோடும் ஒன்றியதாக இருந்தது. இவர் திருமலை மண்ணையும் மக்களையும் ஆழமாக நேசித்தார். அங்கு தலைவிரித்தாடும் இராணுவ ஒடுக்குமுறையையும் நில ஆக்கிரமிப்பையும் முழுமூச்சாக எதிர்த்து நின்றார். எமது மண் எமக்கே சொந்தம் என்று உரிமைக் குரலை ஆக்கிரமிப்பு இராணுவத்திற்கு மத்தியில் நின்றுகொண்டே உலகுக்கு உரத்துக் கூறினார். சிங்களப் பேரினவாதிகளின் கெடுபிடிச் செயல்கள் ஒருபுறமும் ஆக்கிரமிப்பு இராணுவத்தின் அடாவடித்தனங்கள் மறுபுறமுமாக தினம் தினம் எத்தனையோ நெருக்குதல்களையும் சோதனைகளையும் அச்சுறுத்தல்களையும் சந்தித்து நின்றபோதும் அஞ்சா நெஞ்சுடனும் அபாரமான துணிச்சலுடனும் அநீதியை எதிர்த்துப் போரிட்டார். திருகோணமலை மாவட்டத் தமிழ் மக்கள் பேரவையின் தலைவராக இருந்து அந்த மாவட்டத்தில் தமிழ்த் தேசிய இனக்கட்டமைப்பு இறுக்கம் பெற்று, பலம்பெற்று வளர அயராது உழைத்தார். இவரது பெரும் பணி என்றும் பாராட்டுக்குரியது.

திரு வ.விக்கினேஸ்வரன் அவர்களின் இனப்பற்றிற்கும் விடுதலைப் பற்றிற்கும் மதிப்பளித்து, அவரது விடுதலைப் பணியைக் கௌரவிக்கும் முகமாக மாமனிதர் என்ற அதியுயர் தேசிய விருதை அவருக்கு வழங்குவதில் நான் பெருமையடைகிறேன். சத்திய இலட்சியத்திற்காக வாழ்ந்த உயர்ந்த மனிதர்களைச் சாவு என்றும் அழித்து விடுவதில்லை. சரித்திர நாயகர்களாக எமது தேசத்தின் ஆன்மாவில் அவர்கள் என்றும் வாழ்வார்கள்.

புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்

வே.பிரபாகரன்
தலைவர்,
தமிழீழ விடுதலைப் புலிகள்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s