மாவீரர் நீங்களே! மறப்போமா நாங்களே!

தமிழ் மண்ணின் விடுதலைக்காக களம் ஆடி விழுப்புண்பட்டு வீழ்ந்து நடுகல்லாகிவிட்ட மாவீரர்களின் அளப்பரிய தற்கொடையை நினைவு கூறுமுகமாக மாவீரர் எழுச்சி விழா உலகெங்கும் பரந்துபட்டு வாழும் தமிழ் மக்களால் சீரோடும் சிறப்போடும் புகழோடும் பெருமிதத்தோடும் முன்னைய ஆண்டுகள் போலவே இந்த ஆண்டும் கொண்டாடப்படுகிறது.

mdayஇந்த ஆண்டு வன்னியில் நடந்த போரில் மட்டும் பல்லாயிரக்கணக்கான போராளிகள் களத்தில் விழுப்புண்பட்டு வீழ்ந்தார்கள். இதுவரை தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் முப்பதினாயிரத்துக்கும் அதிகமான மாவீரர்களும் வீராங்கனைகளும் கடற்புலிகளும் கரும்புலிகளும் வான்புலிகளும் களமாடி கடலில் கரைந்தும் காற்றில் கலந்தும் தீயில் எரிந்தும் மண்ணில் புதைந்தும் போயிருக்கிறார்கள்.

அந்த மறைந்தும் மறையாத மாவீரர்களுக்கு வாழ்த்தும் வீர வணக்கமும் வழிபாடும் செய்யும் இந்நாள் தமிழ் மக்களுக்கு ஒரு திருநாள். தமிழினத்தின் தேசிய நாள்.

மானம் பெரிதென ஊன உடல் விழ
மாண்டார் தமிழ் வீரர்! - ஆவி
தானம் எனத் தந்த மானத் தமிழன் தோள்
தங்கம் தங்கமடா!

எனக் கல்லறையில் துயில் கொள்ளும் எங்கள் மாவீரர்களைப் போற்றிப் பாடுவோம். தோள்தட்டி ஆடுவோம்.

களத்தில் விழுப்புண் பட்டு வீரச்சாவினைத் தழுவிக் கொண்ட முதல் வி.புலிப் போராளி சங்கர் என்ற லெப்டினன்ட் சத்தியநாதன் களத்தில் வீழ்ந்து வீரச் சாவைத் தழுவிக் கொண்ட நொவெம்பர் 27ஆம் நாளையே இன்று உலகெங்கும் மாவீரர் நாளாகக் கொண்டாடி வருகிறோம்.

லெப்டினன்ட் சத்தியநாதன் அச்சம் என்றால் என்னவென்று அறியாத அடலேறு. இருபது அகவையிலேயே தலைமறைவு வாழ்க்கையை மேற்கொண்ட கெரில்லா வீரன்.

உலக வரலாற்றில் விடுதலைக்குப் போராடிய மக்கள் எல்லோரும் குருதி, கண்ணீர், வியர்வை இவற்றை விலையாகக் கொடுத்தே விடுதலையைப் பெற்றிருக்கிறார்கள். அய்ரிஷ் தொடங்கி எரித்திரியா வரை, கிழக்குத் திமோர் தொடங்கி கொசோவோ தீமோர் வரை இடம்பெற்ற வீரம் செறிந்த விடுதலைப் போராட்டங்கள் நீண்ட காலத்தின் பின்னரே வெற்றியடைந்தன. அதன் பின்னரே அந்த மக்கள சுதந்திரக் காற்றை சுவாசிக்கமுடிந்தது என்ற உண்மையை நாம் மறந்துவிடக் கூடாது.

கிழக்கு தீமோர் மக்கள் விடுதலைக்காக ஆண்டுக் கணக்கில் ஆயுதம் ஏந்தி, குருதி சிந்திப் போராடி கண்ணினும் இனிய தங்கள் பொன்னாட்டை அன்னிய நாட்டின் பிடியிலிருந்து மீட்டு எடுத்தார்கள். இன்று கிழக்கு திமோர் அய்க்கிய நாடுகள் அவையின் 191ஆவது உறுப்பு நாடாக அனுமதிக்கப்பட்டு அந்த நாட்டின் கொடி அய்க்கிய நாடுகள் சபை முன்றலில் பட்டொளி வீசிப் பறக்கிறது!

வி.புலிகள் போர்வெறிபிடித்த மனநோயாளிகள் அல்லர். துப்பாக்கியை ஏதோ விளையாட்டுக்குத் தூக்கியவர்களும் அல்லர். வாழு வாழவிடு என்ற உரிமைக் குரல் எழுப்பி அடக்கு முறைக்கு எதிராகத் துப்பாக்கி ஏந்தியவர்கள். துப்பாக்கிகளை இன்று அவர்கள் மவுனித்து இருக்கிறார்கள். ஆனால் விடுதலைகான போராட்டம் அரசியல் மற்றும் அரசதந்திர மட்டத்தில் தொடர்கிறது.

இலங்கையில் தமிழ்த் தேசிய இனத்தின் இருப்பைப் பாதுகாக்கும் பொருட்டு தமிழ்மக்களுக்குள்ள தன்னாட்சி உரிமையின் அடிப்படையில் சுதந்திரமான இறைமை பொருந்திய சமய சார்பற்ற, சமவுடமை தமிழீழ அரசை மீட்டெடுத்தலும் மீள உருவாக்குதலும் தவிர்க்க முடியாதென்ற முடிவே வட்டுக் கோட்டைத் தீர்மானமாகும்.

தமிழர்களின் தாயகம், தேசியம், தன்னாட்சி உரிமை ஆகிய கோட்பாடுகள் வட்டுக்கோட்டைத் தீர்மானம் மூலமாகவே முதல்முதலாக முழு வடிவம் பெற்றன.

காலம் காமாக சிங்கள அரசியல்வாதிகளால் தமிழ்த்தலைவர்கள் ஏமாற்றப்பட்டார்கள். கொடுத்த வாக்குறுதிகள் காற்றில் பறந்தன. எழுதிய ஒப்பந்தங்கள் கிழித்தெறியப்பட்டன. அகிம்சை வழிப் போராட்டங்கள் இராணுவ பலம் கொண்டு அடக்கப்பட்டன. தமிழர்கள் மீது முறைக்கு முறை வன்முறை கட்டவுழ்த்து விடப்பட்டன. தமிழர்களது மொழியுரிமை, உயர்கல்வி வாய்ப்பு, வேலை வாயப்பு மறுக்கப்பட்டன. அடக்குமுறைக்கும் ஒடுக்கு முறைக்கும் எதிராகப் போராடியபோது சிறை, சித்திரவதை பரிசாக அளிக்கப்பட்டன. இதன் பிரதி பலிப்பே வட்டுக் கோட்டைத் தீர்மானம் ஆகும்.

தமிழினத்தின் தாகமான தமிழீழத்தை மீள்கட்டியெழுப்பவும் மீள் உருவாக்கவும் வட்டுக்கோட்டையில் பிரகடனப்படுத்தப்பட்ட தீர்மானம் மீது வாக்குக் கணிப்பு (Referendum) நடத்த உலகளாவிய அளவில் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதே சமயம் மக்களாட்சி விழுமியங்களுக்கு அமைய புலம்பெயர் நாடுகளில் மக்கள் அவைகளுக்கு நேரடித் தேர்தல் நடைபெற இருக்கிறது. நோர்வே நாட்டு புலம்பெயர் தமிழர்கள் இந்தத் தேர்தலை நடத்தி முடித்துள்ளார்கள்.

தாயகத்தில் இன்று அரசியல் செயல்பாடுகளைச் சுதந்திரமாகவும் பாதுகாப்பாகவும் மேற்கொள்ளுவதற்குரிய ஒரு அரசியல் இடைவெளி (political space) இல்லாத சூழல் இருக்கிறது. எனவே புலம்பெயர் தமிழர்கள்தான் இந்த இடைவெளியை நிரப்ப வேண்டும். அவர்களால்தான் விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்ல முடியும்.

அதற்கான முயற்சியே நாடுகடந்த தமிழீழ அரசாகும். இதற்கு முன் எடுத்துக்காட்டு இல்லை. எனவே இந்த முயற்சியை அறிவியல் அரசியல் துறைக்கு தமிழர்களது நன்கொடை என்று கூடச் சொல்லலாம்.

இந்த அரசு ஆட்புலம், படை இல்லாத அரசு. புலம்பெயர் மக்களால் மக்களாட்சி முறைமைக்கு அமைய வெளிப்படையான தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கும் சார்பாளர்கள் உலக ஒழுங்குக்கும் பன்னாட்டுச் சட்ட நெறிமுறைகளுக்கும் இசைவாக உருவாக்குவார்கள்.. இதற்கான தேர்தல் அடுத்த ஆண்டு ஏப்பிரல் மாதத்தில் புலம்பெயர் நாடுகளில் நடைபெற இருக்கிறது.

தேர்தல் மூலம் தெரிவு செய்யப்படும் சார்பாளர்களே நாடுகடந்த தமிழீழ அரசுக்குரிய அரசியல் யாப்பை வரைவார்கள். அந்த யாப்பில் மக்களது உரிமைகள் அரசுக்குரிய நடைமுறை விதிகள் யாவும் இடம்பெறும்.

ஈழத்தமிழ் மக்களின் சிக்கலுக்குத் தமிழர் தேசியம், தாயகம், தன்னாட்சியுரிமை என்ற கோட்பாடுகளின் அடிப்படையிலேயே அரசியல் தீர்வு காணப்பட வேண்டும் என்ற அரசியல் நிலைப்பாட்டை ஏற்றுக் கொண்டவர்கள் எல்லோரும் நாடுகடந்த அரசில் பங்கு கொள்ளலாம். புலம் பெயர்ந்து வாழும் தமிழீழத்தைப் பிறப்பிடமாகக் கொண்டவர்கள் அல்லது அவர்களது கொடிவழியினர் இதில் உறுப்புரிமை வகிக்க உரித்துடையவர் ஆவர்.

இந்த நாடுகடந்த தமிழீழ அரசின் வெற்றி புலம்பெயர் தமிழர்களின் ஆதரவில் (support) பங்களிப்பில் (contribution) ஈடுபாட்டில் (engagement) தங்கியுள்ளது.

மேற்கூறிய மூன்று அரசியல் முன்னெடுப்புக்களில் ஏதாவது ஒன்று குறைவுபடினும் அது எல்லாவற்றையும் பாதிப்பதாக அமையும். காரணம் இவை ஒன்றுக்கொன்று தொடர்பானவை. வட்டுக்கோட்டைத் தீர்மானத்தில் குறிப்பிட்டுள்ள தேசியம், தாயகம், தன்னாட்சியுரிமை ஆகியவையே நாடுகடந்த தமிழீழ அரசின் கட்டுமானங்கள் ஆகும்.

இன்றைய அரசியல் சூழலில் மற்றும் உலக ஒழுங்கில் தமிழ் மக்கள் தங்கள் அரசியல், பொருண்மிய, பண்பாட்டு உரிமைகளை வென்றெடுக்கத் தாமே முன்வந்து போராட வேண்டும். மக்களாட்சி முறைமையின் அடிப்படையில் போராடினால் முடியாதது என்பது ஒன்றும் இல்லை.

புலம்பெயர் தமிழர்களுக்குக் கடந்த காலத்தைப் போலவே இப்போதும் ஒரு வரலாற்றுக் கடமை இருக்கிறது. இன்னும் சொல்லப் போனால் இந்தக் கடமை இன்று அதிகரித்துள்ளது. அந்த வரலாற்றுக் கடமையை நாம் முழு அர்ப்பணிப்போடு தொடர்ந்து செய்ய வேண்டும். தமிழீழத்தில் உள்ள மக்கள் உரிமையோடும் சுதந்திரத்தோடும் பாதுகாப்போடும் நிம்மதியோடும் மகிழ்ச்சியோடும் வாழும் அரசியல், பொருண்மிய, கலை, பண்பாட்டு உரிமைகளை வென்றெடுக்கும் வரை நாம் தொடர்ந்து தொய்வோ, சோர்வோ இல்லாது அரசியல், அரசதந்திர மட்டத்தில் உலகில் உள்ள ஏழு கோடி தமிழ்மக்களையும் ஒன்றிணைத்துப் போராட வேண்டும்.

தாயக விடுதலைக்காக தமது இளைய இனிய உயிர்களை ஈகம் செய்த மாவீரர்களையும் அளப்பரிய தியாகங்கள் புரிந்த மக்களையும் எங்கள் மனங்களில் கொலுவிருத்தி தாயக வேட்கையுடன் விடுதலை பெறும்வரை ஒன்றிணைந்து ஓயாது ஒழியாது உழைத்தலே நடுகல்லாகிப் போன எம் மாவீரர்களுக்கு நாம் செலுத்தும் உண்மையான வணக்கமாகும். அந்த வரலாற்றுக் கடமையை நிறைவேற்ற முன்னரைவிட அதிக வேகத்தோடும் ஈடுபாட்டோடும் பாடுபடுவோம். தாயகக் கனவை நெஞ்சினில் சுமந்து கல்லறையில் துயில் கொள்ளும் எமது மறைந்த மாவீரர்களின் தாயகக் கனவை நினைவாக்குவோம்..

மாவீரர்களது தாயகக் கனவை நினைவாக்க எங்களுக்குள் இருக்கும் போர்க்குணத்தை மேலும் வளர்த்துக் கொள்வோம். ஆயுதம் ஏந்தாத போராளிகளாக களத்தில் நிற்போம் எனச் சூளுரைப்போம்! அடிமை விலங்கை உடைத்து எமது விடுதலையை வென்றெடுப்போம்.

மாவீரர்கள் நீங்களே மறப்போமா நாங்களே?
ஒளிமுகம் தோறும் புலிமுகம் காட்டு
குல தெய்வம் போல உம்மைக் கும்பிடுவோம் நாங்கள்
உலகம் தோறும் உள்ள சொந்தம் உங்கள் வீரம் நினைக்கும்
மழையும் கூட இறங்கி வந்து உங்கள் துயிலிடம் நனைக்கும்
அது பதுங்குகுழியில் இருக்கும் பிள்ளை என்று தாய்மை நினைக்கும்
அது பத்துமாதம் சுமந்த வயிற்றை தடவிப் பார்த்துச் சிரிக்கும்
இறந்தவர் என்றா மறப்போம்? உம்மை எத்தனை தலைமுறை நினைப்போம்
கோயில் மணிகள் உங்கள் புகழை ஊர்கள் தோறும் ஒலிக்கும்
அமைதி வணக்கம் முடிந்த நொடியில் ஈகைச் சுடர்கள் விரிக்கும்
தலைவன் உரையை எழுந்த உம்மைக் களங்கள் ஆட அழைக்கும்

மாவீரர் நீங்களே! மறப்போமா நாங்களே!
குலதெய்வம்போலே உம்மைக் கும்பிடுவோம் நாங்களே!

– நக்கீரன்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s