உயிரைத் தந்து உறுதியைக் காத்த கேணல் கிட்டு!

தமிழீழ விடுதலைப் போராட்டம் பல ஆற்றல்மிகு போராளிகளை இனங்காட்டி இருக்கின்றது. சிறந்த இராஜதந்திரிகளை உருவாக்கியிருக்கின்றது.

தலைமைத்துவப் பண்புள்ளவர்களை இனங்ககண்டு அவர்களைப் பயன்படுத்திப் பெருமை சேர்த்திருக்கின்றது. இந்த வரிசையில் அனைத்துத் துறைகளிலும் ஒரு சேரப் பிரகாசித்தோர் ஒரு சிலரே. அவர்களுள் ஒருவர் கேணல் கிட்டு.


‘எதனைச் செய்வதானாலும் நேர்த்தியாகச் செய்ய வேண்டும்” என்ற கோட்பாட்டைக் கொண்ட அவர், வாழ்ந்த போதும் தனது வாழ்வை முடித்துக்கொண்ட இறுதிக் கட்டத்திலும் தனக்குத் தரப்பட்ட பணியை நேர்த்தியாகச் செய்து முடித்தவர்.

அடிமட்டப் போராளியாக தனது 18 ஆவது வயதில் விடுதலைப் பயணத்தை ஆரம்பித்த அவர் ஒரு பயிற்சி ஆசிரியராக, யாழ். மாவட்ட கட்டளைத் தளபதியாக என ஒரு குறுகிய காலத்திலேயே தனது திறமையை நிரூபித்துக் கொண்டார்.

விடுதலைப் போராட்டம் பரிணாம வளர்ச்சி கண்ட காலத்தில் கேணல் கிட்டு ஆற்றிய பங்களிப்பு அளப்பரியது.


பல்வேறு கெரில்லாத் தாக்குதல்களில் பங்கு கொண்டு தனது மன உறுதியையும், திறமையையும் நிரூபித்த அவர், 1985 இல் திம்புப் பேச்சுவார்த்தை நடைபெற்ற காலகட்டத்தில் தனது மதிநுட்பமான செயற்பாடுகளால் குடாநாட்டில் நிலைகொண்டிருந்த படையினரை முகாம்களுக்குள் முடக்குவதில் வெற்றி கண்டார்.

சகோதர இயக்கங்கள் மீதான தாக்குதல்கள் அவரது போராட்ட வாழ்வில் விமர்சனத்துக்குரிய ஒரு அத்தியாயமாக அமைந்திருந்த போதிலும் முன்னாள் போராளிக் குழுக்களின் பிற்காலச் செயற்பாடுகள் அவரின் நடவடிக்கைகளை நியாயப்படுத்துவதாக அமைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

சிங்களப் படையினரை முகாம்களுக்குள் முடக்கியமை தமிழர் போராட்டத்தில் மக்களைப் பாதுகாக்கக்கூடிய திறன் போராளிகளுக்கும் உள்ளது என்ற செய்தியைக் கூறியதென்றால் அதனைத் தொடர்ந்து அவரால் அறிமுகம் செய்து வைக்கப்பட்ட நிர்வாகம் போராளிகளால் ஒரு தனியரசை நிர்வகிக்க முடியும் என்ற நம்பிக்கையை உருவாக்கியது.

தொடர்ந்து வந்த காலங்களில் அவர் வித்திட்ட போராளிகளுக்கும் பொதுமக்களுக்கும் இடையிலான சிநேகபூர்வமான உறவு இன்று வரை பிரிக்க முடியாத ஒரு உறவாக இருப்பதைக் காணலாம்.

தாக்குதல் சம்பவங்களே ஊடகங்களின் கவனத்தைப் பெரிதும் கவர்ந்து வந்த காலகட்டத்தில் நடிகர் விஜய குமாரதுங்க உள்ளிட்ட குழுவினரின் யாழ். வருகை, கைதிகள் பரிமாற்றம் என பல விடயங்களூடாகவும் ஊடக அவதானத்தைப் பெறுவதில் கிட்டு வெற்றி கண்டார். அது மட்டுமன்றி, இத்தகைய செயற்பாடுகள் ஊடாக தமிழர் போராட்டத்தின் நியாயத்தை சிங்கள மக்களுக்கு விளக்குவதற்கான வாய்ப்பும் அவருக்குக் கிட்டியது.

இந்தியப் படையினர் இலங்கையில் நிலை கொண்டிருந்த காலகட்டத்தில் சிகிச்சைக்காக
இந்தியா சென்றிருந்த அவர், மோதல்கள் உருவானதன் பின்னர் மோதலுக்கான காரணத்தையும் தமிழர் தரப்பு நியாயத்தையும் வெளிக்கொணர மிகவும் பாடுபட்டார். இந்தச் செயற்பாடுகளின் போது இந்திய நடுவண் அரசு அவரை மிகவும் துன்புறுத்திய போதிலும் கூட அவற்றை மிகவும் இலாவகமாக எதிர்கொண்டு தன்னுடைய குறியை அடைவதில் சிரத்தையுடன் செயற்பட்டார்.

90 இல் இலண்டனுக்குச் செல்ல வேண்டிய பணி தரப்பட்ட போது அதனைக்கூட சிறப்பாக ஏற்று தனது திறமையை வெளிப்படுத்தினார். அதிகம் படித்திராத போதிலும் வாசிப்புக்கு ஊடாகத் தன்னை வெகுவாக வளர்த்துக் கொண்டிருந்த அவர் சர்வதேசப் பரப்புரைகளின் போது எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் எனக் கூறியிருந்தவற்றை அவரோடு இணைந்து பணியாற்றியவர்கள் இன்றும் கூட நினைவில் இருத்திச் செயற்படுவதை அவதானிக்க முடிகின்றது.

தனது வாழ்நாள் முழுவதும் ஈழத் தமிழ் மக்களுக்காகவே செலவிடப்பட வேண்டும் என்ற எண்ணம் கொண்டிருந்தவருக்கு அந்த வாய்ப்பும் கிட்டியது.

;~குவேக்கர் பீஸ்| என்ற அமைப்பின் செய்தியோடு சமாதானத் தூதுவனாக தாயகம் திரும்பிக்கொண்டிருந்த போது அவரது கப்பல் சர்வதேசக் கடற்பரப்பில் இந்தியக் கடற்படையால் வழிமறிக்கப்பட்டது. தான் எதற்காகச் செல்கிறேன் என்பதை அவர் விளக்கிய போதிலும் கூட அதனை ஏற்றுக் கொள்ளாத இந்தியா நயவஞ்சகமாகக் கப்பலையும் அதில் பயணம் செய்த பத்துப் போராளிகளையும் கைது செய்ய முயன்றது.

உயிரைவிட மானத்தைப் பெரிதாக நினைக்கும் போராளிகள் தமது கப்பலை வெடித்துச் சிதறச் செய்து தமது உயிர்களைத் தியாகம் செய்து கொண்டனர். இதற்கூடாக தமது உறுதியை வெளிப்படுத்தியது மட்டுமன்றி இந்தியாவின் இரட்டை வேடத்தையும் அம்பலப்படுத்தினார்.

ஒரு போராளியாக, நல்ல நண்பனாக, சகோதரனாக, மக்கள் நலனில் அக்கறை கொண்ட சமூக சேவகனாக, இராசதந்திரியாக, புகைப்படக் கலைஞனாக, இறுதி வரை உறுதி குலையாதவனாக கேணல் கிட்டு வாழ்ந்த வாழ்க்கை ஒவ்வொரு போராளிக்கும் முன் மாதிரியானது எனக் கூறினால் மிகையாகாது.

-சண் தவராஜா-

நிலவரம் (09.11.09)

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s