கடற்புலி மேஜர் தமிழ்வேந்தினி

கந்தையா விஜய கலா

வீரஜனனம் : 20-05-1982 வீரமரணம் : 24-05-2007

நிரந்தர முகவரி : வண்ணான்கேணி பளை. தற்காலிக முகவரி : புன்னை நீராவி, விசுவமடு.

பங்குபற்றிய இறுதித்தாக்குதல்: நெடுந்தீவு கடற்படைத்தளம் மீதான தாக்குதல் 24.05.2007 தமிழீழ விடுதலையை நோக்கி இயக்கத்தில் இணைந்தது 1996 இல், ஒரு இலட்சிய நெருப்பாய் சென்றவள், கடற்புலியாக உருவெடுத்து களம் பல கண்ட சிறந்த போராளி..!!

நெடுந்தீவு கடற்படைத்தளம் மீதான தாக்குதலுக்கு முன்பாகத்தான் தன் குடும்பத்தினரோடு விடுமுறையில் வந்து குதூகலமாக இருந்து சென்றாள். அம்மாவின் கையால் உணவுண்டு, அண்ணனோடும் தம்பியோடும் சண்டை பிடித்து விளையாடி.. சின்னச் சின்ன சந்தோஷங்களில் மகிழ்ந்திருந்தாள். வீட்டின் முன்புறம் அண்ணனின் முழு நீள உருவப்படம் ஒன்று வைக்கப் பட்டு இருந்தது. அதன் அருகில் சென்று “எனக்கும் இப்படி ஒரு படம் சொல்லி அண்ணனுக்கு பக்கத்தில் வையடா, தம்பி” என்று கூறிவிட்டு அம்மாக்குச் சொல்லாதே, இப்போ இல்லை பிறகு..” என்றாளாம்.

அம்மாவின் ஆசைப்படி சேலை உடுத்து, பொட்டிட்டு, தலையில் பூமாலை சூடி புகைப்படங்கள் எடுக்கப்பட்டன. விடைபெறும் நாளும் வந்தது. கண்ணீருடன் கண்கள் விடைபெற, அம்மா கேட்டாள் “குஞ்சு எப்ப இனி வருவாய்?” புன்னகையுடன் “ம்ம்ம்.. இனி வந்தால் புதுக்குடியிருப்பு பேஸ் இற்கு பக்கத்தில வீடு எடுத்துத் தருவன். அங்கு தான் இருக்க வேண்டும். விசுவமடு வேண்டாம்..” என்று விட்டு அன்னையை கட்டியணைத்து முத்தமிட்டுச் சென்றாள். பிறகு வரவில்லை.

நெடுந்தீவு சிறிலங்கா கடற்படைத் தளம் கடற்புலிகளால் தாக்கியழிப்பு: 34 கடற்படையினர் பலி

யாழ். தீவகம் நெடுந்தீவு சிறிலங்கா கடற்படைத்தளம் தமிழீழ விடுதலைப் புலிகளின் கடற்புலிகளால் வெற்றிகரமாக தாக்கியழிக்கப்பட்டது. யாழ்ப்பாணத்தின் மேற்குப்புறத் தீவுகளின் தொலைவில் உள்ள நெடுந்தீவின் தென்பகுதியில் சிறிலங்கா கடற்படையினர் 2006 இல் அமைத்த கடற்படைத்தளத்தின் மீது 24.05.2007 அதிகாலை கடற்புலிகள் தாக்குதலைத் தொடுத்தனர். கடற்புலிகளின் சிறப்பு கொமாண்டோ தாக்குதல் அணிகள் படகுகளில் சென்று அதிகாலை 12.45 மணிக்கு நெடுந்தீவுப்பகுதியின் தெற்குக்கரையில் தரையிறங்கின. நெடுந்தீவு தெற்கு வெல்லைப்பகுதியில் தரையிறங்கிய கடற்புலிகளின் தாக்குதல் அணிகள், அதிகாலை 1.05 மணிக்கு உயர்பாதுகாப்பு அமைப்புகளுடன் இருந்த கடற்படைத்தளத்தை முற்றுகையிட்டு தாக்குதலைத் தொடக்கினர்.

தொடர்ச்சியாக கடற்புலிகள், கடற்படைத் தளத்தின்மீது தீவிரமாக நடத்திய தாக்குதலையடுத்து அதிகாலை 2.45 மணிக்கு தளத்தை முற்றாக தாக்கியழித்தனர். அப்போது அப்பகுதி சிறிலங்கா கடற்படையினர் டோராப் பீரங்கிப்படகுகள், நீருந்து விசைப்படகுகளில் வந்தன. இவற்றுக்கு எதிராகவும் கடற்புலிகள் தாக்குதலை தொடுத்தனர். அந்த தாக்குதலின் போது டோராப் பீரங்கிப்படகு ஒன்று கரையோர முருகைக்கற்பாறைகளில் மோதி முற்றாக சேதமடைந்தது. மேலும் இரண்டு பீரங்கிப்படகுகள் சேதமாக்கப் பட்டன.

இதனையடுத்து தளத்தை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்த கடற்புலிகள் அங்கிருந்த கடற்படையினரின் 50 கலிபர் துப்பாக்கி – 01, பிகே எல்எம்ஜி துப்பாக்கிகள் – 02, ஆர்பிஜி – 01, ரி-56 ரக துப்பாக்கிகள்-2 உட்பட போர் ஆயுதங்கள் வெடிபொருட்கள் ஆகியவற்றை கைப்பற்றி வெற்றிகரமாக தளம் திரும்பியுள்ளனர். இந்தத் தாக்குதலில் கடற்படைத்தளத்தில் 34 கடற்படையினரைத் தாக்கி கொன்றழித்த கடற்புலிகள், சிறிலங்கா கடற்படையினரின் பெரும் பாதுகாப்புப்பகுதியில் உள்ள நெடுந்தீவு கடற்படைத் தென்பகுதித்தளத்தை வெற்றிகரமாக தகர்த்து அழித்தனர். இவ் வெற்றிகரத் தாக்குதலில் வீரச்சாவடைந்த கடற்புலிகள் 4 பேரில் மேஜர் தமிழ்வேந்தினியும் ஒருவர் ஆவார்.

வித்துடல் பெட்டி பூட்டப்பட்ட நிலையில் அவள் வீட்டிற்கு தமிழ்வேந்தினி…! கதறி அழுத சுற்றங்கள்… அன்னையின் கண்ணீர் என அவள் எதையும் பார்க்கவில்லை. வெற்றி பெற்ற சந்தோஷத்தோடு, தமிழீழக் கனவோடு, உறங்குகின்றாள். இல்லை, தமிழீழ மூச்சோடு மண்ணில் கலந்து, விருட்சமாகி, எம் நெஞ்சில் வாழும் மாவீரர்களில் ஒருவராய் சுடராகி விட்டாள். அவளின் அன்புத்தம்பி அண்ணனின் அருகில் அக்காவிற்கு படம் வைத்து, பூமாலை சூட்டினான். அக்காவின் வழி செல்ல மனம் துடித்தாலும் அன்னையின் உடல்நிலைக்காக கட்டுப்பட்டு, இன்று முகாமில் செய்வதறியாது தவிக்கும், ஒரு அப்பாவி இளைஞனாக.., அக்காவை எண்ணிப் பெருமைப்படும் ஒரு தம்பியாக.., அங்கு அல்லற்படுகின்றான்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s