போராட்ட கலைஞன் லெப். கேணல் சங்கர்

lt-col-sankarதாயகத்தின் கலையுலகில் குறிப்பாக வன்னியில் நன்கு அறியப்பட்டவர் லெப்.கேணல் சங்கர். மிகக் கம்பீரமான குரல் வளம் கொண்ட சங்கர் பதினைந்து ஆண்டுகளுக்கு கூடிய காலம் தமிழீழ விடுதலைப் போராட்டத்தோடு தன்னை முழுமையாக இணைத்துப் பயணித்தவர்.

கலைத்துறை சார்ந்த செயற்பாடுகளில் கூடுதல் பங்குவகித்த சங்கர் ஆரம்பத்தில் முல்லைத்தீவு மாவட்ட கலைபண்பாட்டுக்கழகத்தின் பொறுப்பாளராக நன்கு அறியப்பட்டவர். தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் பக்கங்களில் கலைத் துறை அம்சங்களுடன் கூடுதலான அல்லது பிரிக்கப்பட முடியாத ஒரு அம்சம் தெருவெளி நாடக நிகழ்வுகளாகும். இந்த நாடக நிகழ்வுகளினை வன்னியில் மக்கள் மத்தியில் கொண்டு சேர்த்த முக்கியமானவர்களில் லெப்.கேணல் சங்கர் அவர்கள் மிகவும் குறிப்பிடத்தக்கவர்.

முல்லைத்தீவு மாவட்டத்தின் முள்ளியவளைக் கிராமத்தினைச் சேர்ந்த திரு சங்கர் தெருவெளி நாடகக் கலைஞர்கள் பலரது தோற்றத்திற்கும் அவர்களது வளர்ச்சிக்கும் மிக முக்கியமானவராக விளங்கியவர். இவரது தேடல் ஊடாக வெளிவந்தவர்களில் பலர் தமிழீழ தேசியத் தலைவர் அவர்களால் மதிப்பளிக்கப்பட்ட பெருமைக்குரியவர்களாக மாறியிருந்தனர். என்பது அவரது ஆளுமைக்கு சிறந்த எடுத்துக் காட்டாகும். மிகக் குறைந்த வயதில் தாயகத்தின் கலை உலகில் தனக்கென இடம் பிடித்த கப்டன் குட்டிக்கண்ணன் வெளிவரவும் அந்தக் கலைஞனது கலையுலக வாழ்வின் ஆரம்ப அடித்தளங்களை இட்டபெருமையும் லெப்.கேணல் சங்கர் அவர்களையே சாரும்.

தெருவெளி நாடகங்கள் வன்னிப்பெருநிலத்திலுள்ள அனைத்து மக்களுக்கும் போராட்டகால நிகழ்வுகளையும் கருத்துக்களையும் பரப்பக்கூடிய எளிமையான ஊடகமாக இருந்தது. வன்னியின் மூலைமுடுக்குகள் எல்லாம் விரைந்துசென்ற கலைஞர்கள் விடுதலைப் போராட்ட பயணத்தில் தமது பங்களிப்பை சிறப்போடு செய்திருந்தார்கள்.

இதேபோன்று தெருவெளிக் கலைஞர்களின் முழுமையான பங்களிப்புடன் அவர்களின் திறமைகளை வெளிப்படுத்தும் வகையில் வெளியிடப்பட்ட போர்ப்பறை, வெற்றி முரசு ஆகிய பாடல் இறுவட்டுக்கள் உருவாக்கத்திலும் இவரது பங்கு குறிப்பிடத்தக்கது. போர்ப்பறை இறுவட்டில் அவரது குரலில் அறிமுகம் இடம்பெற்றுள்ளது.

ஆரம்பம் முதல் இறுதிவரையில் வன்னியில் குறிப்பாக முல்லைத்தீவு மாவட்டத்தில் பாயும் புலி பண்டாரவன்னியன் நாடகத்தில் பண்டாரவன்னியன் கதாபாத்திரத்தை தானே ஏற்று நாடகத்தில் பாத்திரமாகவே வாழ்ந்து காட்டும் சிறப்புடையவர்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் திரைப்பட உருவாக்கல் பிரிவின் பொறுப்பாளராக கடமை ஏற்றதன் பின்னர் நிதர்சனம் நிறுவனத்துடன் இணைந்து பெருமளவான குறும்படங்களை வெளியிடுவதற்கு கடுமையாக உழைத்தார்.

தமிழீழ தேசிய விடுதலைப் போராட்டத்தில் கலையூடான பணியினை முன்னெடுத்த லெப்.கேணல் சங்கர் முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பு ஆனந்தபுரம் என்ற கிராமத்தில் 14.03.2009 அன்று களப் பணியில் ஈடுபட்டிருந்த போது வீரச்சாவை எய்தினார்.

இன்னமும் நீண்ட வரலாற்றுப் பக்கங்களைக் கொண்ட லெப்.கேணல் சங்கர் வாழ்வோடும் கலையோடும் விடுதலைப் போரோடும் தன்னை இணைத்துக் கொண்டு வீழ்ந்த போதிலும் அம் மாவீரனது நினைவுகளுடன் பயணிப்போம்…

——————————————————————————————————————————-

தெருவெளி கலைஞர்களின் உருவாக்கத்தில் உருவான போர்ப்பறை மற்றும் வெற்றிமுரசு இறுவட்டின் பாடல்கள் சிலவற்றை இங்கு கேட்கலாம்

போர்ப்பறை அறிமுகம்

அடிபணிந்து வாழ்வதோ

வெற்றிமுரசு இங்கு முழங்கட்டும்

புலியாட்டம் ஆடு

டப்பாங்கூத்து பாட்டுத்தான்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s