ஓயாத அலைகள் மூன்று- 13.

06/11/1999

விடிந்துவிட்டது. எட்டுமணிக்குள் எல்லோரையும் புறப்படத் தயாராகும்படி அறிவித்தல் வந்தது. பக்கத்திலிருந்த இரண்டு வீடுகளைப் பயன்படுத்திக் கொண்டோம். ஏழுமணிக்கே காலையுணவுக்குரிய பொதிகள் வந்துவிட்டன. எல்லாம் முடித்துவிட்டு எட்டுமணிக்குள் எல்லோரும் தயாராகியிருந்தோம். நாமிருந்த இடத்திலிருந்து சற்றுத் தள்ளியிருந்த ஒரு வீட்டுக்கு எல்லோரையும் வரும்படி அழைப்பு வந்தது. எல்லோரும் அங்குச் சென்றபோது தளபதிகள், கடாபி அண்ணையும் சொர்ணம் அண்ணையும் எமக்காகக் காத்திருந்தனர்.

கரும்புலி அணியினர் அமர்ந்திருக்க நாமெல்லாம் சுற்றி நின்றுகொண்டோம். சொர்ணம் அண்ணன்தான் முதலில் கதைத்தார். ஓயாத அலைகள் மூன்று வெற்றிகரமாக நடந்துகொண்டிருப்பதையும், இது தொடர்ந்தும் நடைபெறப்போகும் ஓர் இராணுவ நடவடிக்கையென்பதையும் தெளிவுபடுத்தினார். இதுவரை கிடைத்த வெற்றிக்கு ஏற்கனவே ஊடுருவியிருந்த கரும்புலியணிகள் எவ்வளவு முக்கிய பங்காற்றினர் என்பதையும் மேலோட்டமாகத் தெரிவித்தார். உண்மையில் இவ்வளவு வேகமாக நிலங்கள் மீட்கப்படுமென்ற எதிர்வுகூறல் இயக்கத்திடம் இருக்கவில்லை என்பதை சொர்ணம் அண்ணையின் பேச்சில் அறிய முடிந்தது. எதிரிக்குத் திகைப்பாகவும் எமக்கு வியப்பாகவும் அமைந்திருந்தது அந்த வெற்றி.
BT1
தொடர்ந்து நடக்கப்போகும் சமர்பற்றியும் கரும்புலியணிகளின் பங்கு என்னவென்றும் மேலோட்டமாக ஒரு திட்டத்தை விளங்கப்படுத்தினார் சொர்ணம் அண்ணன். கண்டிவீதியிலே ஓமந்தை வரை கைப்பற்றப்பட்ட பின்பு எமது முன்னணிக் காப்பரண் வரிசை நேர்கோடாக இருக்கப்போவதில்லை. மன்னார்க்கரைப் பக்கமாகவும் மணலாற்றுக் கரைப்பக்கமாகவும் இராணுவத்தினர் மேவி நிற்க, நாம் இடையிலே ஊடுருவி நிற்பதுபோன்றே களநிலைவரம் அமையப் போகிறது. எனவே மணலாற்றுப்பக்கத்தில் இராணுவத்தினரை ஒதுக்கிப் பின்தள்ளி ஒரு நேர்கோடாக எமது காப்பரண் வரிசையை அமைத்துக் கொள்வது முதற்கட்டம். அதன் தொடர்ச்சியாக, எதிரியை இன்னும் பின்னுக்குத் தள்ளி கொக்குத்தொடுவாய் நீரேரியின் மறுபக்கத்துக்குத் துரத்திவிடுவது அடுத்த கட்டம். அப்படி நடக்கும் பட்சத்தில் நீரேரியைக் கடந்து எதிரி முன்னேற்ற முயற்சி செய்யும் சாத்தியக்கூறுகள் குறைவு என்பதோடு, எமது பகுதிகளைக் காப்பதும் இலகுவாக அமையும்.

இந்த மணலாற்று மண்ணை மீட்கும் அடுத்தகட்ட நகர்வுக்கு எஞ்சியிருக்கும் கரும்புலியணிகள் முழுமையாக இறக்கப்படப் போகின்றன, அதேநேரம் ஏற்கனவே ஊடுருவியிருக்கும் அணிகளும் வெளியேற்றப்பட்டு தேவைக்கேற்ப புதிய களமுனைக்கு அனுப்பப்படும் எனவும் சொர்ணம் அண்ணன் திட்டத்தை விளக்கினார். இத்திட்டத்தின்படி மணலாற்றுக் காட்டில் இருக்கும் எதிரியின் முக்கிய தளங்களான கொக்குத்தொடுவாய், மண்கிண்டிமலை, பராக்கிரமபுர போன்ற தளங்களுள் கரும்புலிகள் ஊடுருவி எமது ஆட்லறிகளின் உதவியோடு அத்தளங்களைத் தாக்கியழிக்க வேண்டுமென்பது அடிப்படைத் திட்டமாக அமைந்திருந்தது.

ஊடுருவலும் நகர்வுகளும் முன்பைப் போல் இலகுவாக இருக்கப் போவதில்லை. ஏனென்றால் ஏற்கனவே சண்டை தொடங்கிவிட்டபடியாலும் இராணுவத்தினர் காடுகள் வழியே சிதறுண்டு அலைவதாலும் எமது அணிகள் எதிரியிடம் முட்டுப்படாமல் நகர்வதென்பது சிரமமானதே. அத்தோடு, சிலோன் தியேட்டர், கென்ற்பாம், டொலர்பாம் என்பன கைப்பற்றப்பட்டதால் மணலாற்றுப்பகுதி முன்னணிக் காப்பரண்களும் முதன்மைத் தளங்களும் முழுமையான எச்சரிக்கையோடு இருந்தன. எனவே நகர்வுகள் அவதானமாக அமையவேண்டுமென சொர்ணம் அண்ணன் குறிப்பிட்டார். விளக்கமான திட்டமும் அறிவுறுத்தல்களும் கடாபி அண்ணை தருவார் என்றுகூறி அவர் தனது விளக்கத்தை முடித்துக் கொண்டார்.

கடாபி அண்ணன் கதைத்தபோது விளக்கமாக எதையும் குறிப்பிடவில்லை. தொடர்ந்து நடக்கப்போகும் எமது நடவடிக்கைகளுக்கு உறுதுணையாக, எதிரியின் ஆட்லறித் தளங்களைச் செயலிழக்கச் செய்யும் பணியை கரும்புலிகள் செய்ய வேண்டுமெனக் குறிப்பிட்டு மிகுதி விளங்கங்கள் பிறகு அளிக்கப்படுமெனச் சொல்லி முடித்துக் கொண்டார்.

இதற்கிடையில், கரும்புலியணியில் இருந்த பெண்போராளியான மாதவி அக்காவின் அண்ணன், முதல்நாள் நடந்த மோதலில் வீரச்சாவடைந்திருந்தார். இம்ரான்-பாண்டியன் படையணியில் பணியாற்றி அவர் வீரச்சாவடைந்திருந்தார். எனவே மாதவி அக்காவை அந்த நடவடிக்கையிலிருந்து நிறுத்தி வைக்கும்படி அறிவித்தல் வந்திருந்தது. ஆனாலும் தான் நிற்கப்போவதில்லை, இந்தச் சமர் முடியும்வரை நான் வீட்டுக்குப் போகப்போவதில்லை என்று மாதவி அக்கா பிடிவாதமாக நின்றிருந்தா. அன்று கடாபி அண்ணன் மாதவி அக்காவோடு நீண்டநேரம் கதைத்து அவவை அந்நடவடிக்கையிலிருந்து நிறுத்திவைத்தார்.

அன்று மதியமே நாங்கள் வேறிடம் சென்றோம். அது எவ்விடம் எனச் சரியாகத் தெரியாவிட்டாலும் ஓயாத அலைகள் மூன்றில் எதிரியிடமிருந்து கைப்பற்றப்பட்ட பகுதியே அது. கடாபி அண்ணனின் கட்டளைப் பணியகமும் எமது ஆட்லறி நிலைகளும் அவ்விடத்திலேயே இருந்தன. அன்று பிற்பகல் நடவடிக்கையில் ஈடுபட்ட கரும்புலியணிகள் அங்கே வந்து சேர்ந்தனர். எல்லோரையும் மகிழ்ச்சியோடு கட்டித் தழுவிக் கொண்டோம். எவருமே எதிர்பாராத பெரியதொரு திகைப்பை எதிரிக்குக் கொடுத்து பெருவெற்றிபெற உறுதுணையாய்ச் செயற்பட்ட அந்த வெற்றிவீரர்கள் மிகவும் களைத்திருந்தார்கள். கடந்த ஒரு கிழமையாக சரியான தூக்கமின்றி ஓட்டமும் நடையுமாகவே அவர்கள் காலம் கழிந்திருந்தது. சோபிதனுடைய முழங்கையில் (பின்னர் கரும்புலி மேஜர் சோபிதனாக யாழ்ப்பாணத்தில் வீரச்சாவு) எறிகணைச் சிதறுதுண்டொன்று கீறிச் சென்றதைத் தவிர வேறு எந்தச் சேதமுமில்லை. மயூரன் (கடற்கரும்புலி மேஜர் மயூரனாக வீரச்சாவு) மிகவும் சோர்ந்து போயிருந்தான். கால்கள் இரண்டும் பெரிதாக வீங்கியிருந்தன. முகம் அதைத்திருந்தது. அவனால் ஒழுங்காக நடக்கமுடியவில்லை.

எல்லோரோடும் கடாபி அண்ணை கதைத்துவிட்டு அன்றிரவே முல்லைத்தீவுக்குப் புறப்படும்படி சொன்னார். எல்லோரையும் அருளன், சசி ஆகியோரின் வீடுகளில் நடக்கும் வீரச்சாவு நிகழ்வுகளுக்குச் செல்லும்படியும் அறிவுறுத்தினார். எமக்குத் திகைப்பாக இருந்தது. ஏனென்றால், அன்றுகாலையில்தான் மணலாற்றுப்பகுதி முழுவதையும் மீட்கப்போவதாகவும், ஒருநிமிடமும் ஓய்வின்றி எல்லோரும் உழைக்க வேண்டுமென்றும் சொர்ணம் அண்ணன் கதைத்திருந்தார். ஆனால் இப்போது கரும்புலி அணி முழுவதையுமே வீரச்சாவு நிகழ்வுகளுக்குச் செல்லும்படி அறிவுறுத்தப்படுகிறது.

எதையும் கேட்காமல் ஏறிக்கிளம்பினோம். இரவு கரைச்சிக் குடியிருப்பு வந்துசேர்ந்து மறுநாள் அதிகாலையே ஒரு கன்ரர் வாகனத்திலும் ஒரு றோசா பஸ்ஸிலும் எல்லோரும் புறப்பட்டோம்.

-தொடரும்…

இளந்தீரன்
பகுதி-1 பகுதி-2 பகுதி-3 பகுதி-4 பகுதி-5 பகுதி-6 பகுதி-7 பகுதி-8 பகுதி-9 பகுதி-10 பகுதி-11 பகுதி-12

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s