ஓயாத அலைகள் மூன்று- 14

07/11/1999

அதிகாலை வேளையில் மல்லாவிக்கு நாம் விரைந்தோம். அங்குத்தான் கரும்புலி மேஜர் அருளனின் குடும்பத்தினர் இருந்தனர். ஓர் ஓலைக்குடிசையில் தங்கியிருந்த அக்குடும்பத்தில் அருளனின் தாயும் தங்கையும் மட்டுமே இருந்தனர். வழமைபோலன்றி இம்முறை கரும்புலிகளின் வித்துடல்களைக் கொண்டுவந்து வீரவணக்க நிகழ்வுகள் நடைபெற்றுக்கொண்டிருந்தது. மழைக்காலமாகையால் அந்த வளவு சேறாகியிருந்தது. முற்றத்தில் பந்தல்போட்டு அருளனின் வித்துடல் வைக்கப்பட்டிருந்தது. ஏராளமான போராளிகளும் பொதுமக்களும் வந்து அஞ்சலி செலுத்திச் சென்றனர்.

அருளன் பற்றி ஏற்கனவே இத்தொடரில் குறிப்பிடப்பட்டுள்ளது. தனிப்பட்டளவில் எனக்கு மிகமிக நெருங்கிய ஒருவராயிருந்தார். சிலமாதங்களே பழகியிருந்தாலும் நாம் மிகநெருக்கமாக ஒன்றித்திருந்தோம். கலை, இலக்கியம் தொடர்பாகவும் போராட்டத்துக்கு வெளியேயான பொதுவிடயங்கள் குறித்தும் கதைக்க என்னிடமும் அவரிடமும் பொதுவான விடயங்கள் பலவிருந்தன. நிறைய வாசிப்பும், எதையும் ஆவலோடு அறிந்துகொள்ளும் துடிப்பும் அவரிடமிருந்தன. இவரது மிகைதிறன் காரணமாக இம்ரான்-பாண்டியன் படையணியில் மாதந்தோறும் நடத்தப்படும் பொது அறிவுப் போட்டியில் பங்குபற்றாமலிருக்கும்படி அறிவுறுத்தப்பட்டார் என்பது இவரது பரந்த அறிவுக்கு ஓர் எடுத்துக்காட்டு. (தொடர்ச்சியாகப் பரிசு வென்ற காரணத்தால் வேறும் சிலர் இவ்வாறு போட்டியில் பங்குபற்றாமலிருக்கும்படி அறிவுறுத்தப்பட்டனர்).

கரும்புலி மேஜர் சசி, மாலதி படையணியிலிருந்து கரும்புலியணிக்கு வந்து சேர்திருந்தா. சிறிய உருவம், ஆனால் மிகுந்த செயல்திறன் அவவிடமிருந்தது. ஏற்கனவே மாலதிபடையணியின் சிறப்பு அதிரடிப்படைப் பயிற்சியைப் பெற்றிருந்த காரணத்தால் நீச்சல் பயிற்சியுட்பட அனேகமாக சிறப்புப் பயிற்சிகளை மிக இலகுவாகவே செய்து முடித்தா. அதிலும் நீச்சலில் மிகத்திறமையாகச் செயற்பட்டா. யுத்தநிறுத்த காலத்தில் வெளிநாட்டு ஊடகவியலாளர் தயாரித்த ஓர் ஆவணப்படத்தில் கரும்புலி மேஜர் சசியின் தாயார் செவ்வி வழங்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

arulan

அருளனும் சசியும் கரும்புலியாகப் போய் நடத்தவிருந்த முதல் தாக்குதல் நடக்கவேயில்லை. இடையிலேயே எதிரியின் தாக்குதலில் அவர்கள் வீரச்சாவடைந்துவிட்டனர். ஆனாலும் அவர்கள் தாக்குதல் நடத்தவென இருந்த இலக்கு பின்னர் வேறொரு நாளில் கரும்புலிகள் அணியின் துணையோடு தாக்கி நிர்மூலமாக்கப்பட்டது.

கரும்புலி மேஜர் அருளின் குடும்பத்தினர் இருந்த இடத்திற்கு அருகில்தான் கிளி ஃபாதர் என அழைக்கப்படும் அருட்தந்தை கருணாரத்தினம் அடிகளார் இருந்தார். (பின்னர் சிறிலங்காப் படையினரின் ஆழ ஊடுருவும் அணியினரின் தாக்குதலில் கொல்லப்பட்டார்.) ஏற்கனவே அவரோடு எமக்குப் பரிச்சயமிருந்தது. குறிப்பாக அவரை எனக்கு யாழ்ப்பாணத்திலேயே பழக்கமிருந்தது. நானும் செல்வனும் கிளி ஃபாதரைப் போய்ப் பார்த்தோம். மிகுந்த உற்சாகத்தோடு ஓடியாடி வேலை செய்துகொண்டிருந்தார். களத்திலே எமது வெற்றிகள் அவருக்கு அளவிலா மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் கொடுத்திருந்தது.

போராளிகளின் நலன் பற்றி அக்கறையோடு விசாரித்தார். களமுனைப் போராளிகளுக்கான உலருணவுச் சேகரிப்பில் அவர் மும்முரமாக ஈடுபட்டிருந்தார். காயக்காரரைப் பராமரிக்கும் ஒழுங்கு, இரத்ததானம் வழங்க ஆட்களை ஏற்பாடு செய்தல் என்று எல்லாவற்றிலும் அவரின் ஈடுபாடும் உழைப்புமிருந்தது. நாங்கள் ஏதோ களமுனையிலிருந்து வந்ததுபோல் நினைத்துக்கொண்டு எம்மிடம் பலவிடயங்கள் விசாரித்தார். ஆனால் உண்மையில் கிளி ஃபாதர் போய்ப்பார்த்த களமுனைகளைக்கூட நாம் எட்டியும் பார்க்கவில்லை. ஒட்டுசுட்டான் வீழ்ந் மறுநாட்காலையே சிவிலுடையில் சென்று ஒட்டுசுட்டான் முகாமைப் பார்வையிட்டு வந்தவர், பின்னரும் கரிபட்டமுறிப்பு, மணவாளன்பட்டமுறிப்பு, ஒலமடு, மாங்குளம், கனகராயன்குளம் என அனைத்து முகாம்களையும் போய்ப்பார்வையிட்டுவிட்டுத்தான் வந்திருக்கிறார். அதுவும் கனகராயன்குள வெடிபொருட்களஞ்சியம் எரிந்துமுடியுமுன்பேயே போர்ப்பார்த்தவர்களுள் இவரும் ஒருவர். நாங்கள் இன்னும் அந்தப்பக்கம் கூட எட்டிப்பார்க்கவில்லை. இருந்தாலும் சில கதைகளைச் சொல்லிச் சமாளித்தோம்.

அன்று காலையிலிருந்துதான் புலிகளின் குரலில் வவுனியாப் பகுதி மக்களைப் பாதுகாப்பான இடங்களுக்கு நகரும்படி அறிவுறுத்தல் விடுக்கப்படத் தொடங்கியது. நாங்கள் கிளி ஃபாதரோடு கதைத்துக் கொண்டிருந்தபோதும் அந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுக் கொண்டிருந்தது. மக்களனைவரும் இயக்கம் வவுனியாவை அடித்துப் பிடிக்கப் போவதாகவே கதைத்துக் கொண்டிருந்தார்கள். எங்களோடு சொர்ணம் அண்ணன் கதைத்ததன்படி மணலாற்றுப்பகுதியைத்தான் நாம் அடுத்ததாக மீட்கப்போகிறோமென நினைத்திருந்தோம். அன்றைய நாளில் எதுவுமே சாத்தியமானது என்றே எல்லோரும் நம்பினர். ஏனென்றால் மிகமிகப் பலமான தளங்களெல்லாம் மிகச்சில நாட்களுள் வீழ்ந்ததுடன், மிகப்பெரும் நிலப்பரப்பும் எம்மால் மீட்கப்பட்டிருந்தது.

sasi

அறிவித்தலைக் கேட்டுக் கொண்டிருந்த ஃபாதர் சொன்னார், “உது ஆமியைக் குழப்பிறதுக்காகத்தான் இருக்கும். நாங்கள் பிடிக்க வேண்டிய இடங்கள் வேற”.

“ஓம் ஃபாதர். ஆனா இண்டையில் நிலையில எதையும் சொல்ல ஏலாது.”

“இல்லைத்தம்பி, அவன் வவுனிக்குள எதிர்க்கரை வரைக்கும் வந்து நிக்கிறான். இப்படியே விட்டிட்டு கண்டிறோட்டாலை நாங்கள் ஆழமாகப் போனால் எங்களுக்குத்தான் ஆபத்து. முதலில மேற்கு வன்னியையும் மீட்டு பக்கவாட்டு ஆபத்துக்களைக் களைஞ்சு கொண்டுதான் நாங்கள் மேற்கொண்டு போகவேணும்.”

எமக்கு மேற்குவன்னி பற்றி தோன்றவேயில்லை. எங்கள் எண்ணமெல்லாம் மணலாறு மீதுதான் இருந்தது. ஆனால் ஃபாதர் சொல்வதும் சரியாகத்தான் இருந்தது. இப்போது கண்டிவீதிக்கு ஒருபக்கமாக எதிரி எமக்குப் பக்கவாட்டாகத்தான் நிற்கிறான். அதுவும் முழுமையான படைப்பலத்தோடுதான் நிற்கிறான். இருந்தும் நாங்கள் மேற்கொண்டு இதுதொடர்பாக எதுவுமே கதைக்கவில்லை. எமக்கும் நேரமாகிவிட்டமையால் ஃபாதரிடம் விடைபெற்றுக்கொண்டுக் கிளம்பினோம். அருளனின் வீட்டுக்கு வந்து எல்லோருடனும் சேர்ந்து புறப்பட்டோம்.

மாலையில் புறப்பட்ட நாம் புதுக்குடியிருப்புக்கு வந்துசேர இருட்டிவிட்டது. கரும்புலி மேஜர் சசியின் குடும்பத்தினர் புதுக்குடியிருப்பில்தான் இருந்தனர். இதுவும் ஓர் ஓலைக்குடிசைதான். சசிக்கு தங்கைகள் மூவரும் தம்பி ஒருவனும் இருந்தனர். எல்லோரும் அன்போடு எம்மை வரவேற்றனர். நீண்டநேரம் அவர்களோடு இருந்து கதைத்துவிட்டு இரவு கரைச்சிக் குடியிருப்புத் தளத்துக்குத் திரும்பினோம்.

அன்றிரவே, கரும்புலி அணியைச் சேர்ந்த ஆண் போராளிகள் அனைவரையும் புறப்படும்படி அறிவுறுத்தல் வந்தது. இரவிரவாகவே அனைவரும் புறப்பட்டனர். ஆனால் இம்முறை ஊடுருவல் நடவடிக்கையில்லை. வேறொரு பணி காத்திருந்தது அவர்களுக்கு.

தொடரும்…

பகுதி-1 பகுதி-2 பகுதி-3 பகுதி-4 பகுதி-5 பகுதி-6 பகுதி-7 பகுதி-8 பகுதி-9 பகுதி-10 பகுதி-11 பகுதி-12 பகுதி-13

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s