உலக இராணுவ மேதைகளின் புரியாத புதிராய் விரியும் தேசியத்தலைவர் பிரபாகரன்

இன்று உலகின் கண்களுக்கு புலப்படாத – புரிபடாத பல விடயங்கள் இப்பரந்த பூமியெங்கும் இறைந்து கிடக்கிறது. அவற்றுள் போரியல் சார்ந்து முக்கியமானதும் முதன்மையானதாகவும் தமிழர் சேனைகளான தமிழீழ விடுதலைப் புலிகளின் வீரம் பார்க்கப்படுகிறது. உலகின் படைத்துறை ஆய்வாளர்கள், இராணுவ மேதைகள், உளவுத்துறையினர், இராணுவ கோட்பாட்டாளர்கள் பலரின் போரியல் சமன்பாடுகளுக்குள் புலிகளை அடக்க முடியவில்லை.  அவர்களின் கணிப்பீடுகள், மதிப்பீடுகள் இன்று தமிழீழத்தில் கலைத்துப் போடப்பட்டுள்ளன.

உலக இராணுவ மேதைகளினதும் படைவரலாற்றாளர்களினதும் சமன்பாடுகளுக்குள் அடங்க முடியாமல் திமிறிக்கொண்டு நிற்கிறது புலிகள் சேனை. புலிகளின் வீரத்தை உணரமுடிகிறதேயழிய உற்றுப்பார்க்க முடியவில்லை. காற்றைப்போல் அலையும் மையமாகியிருக்கிறது அவர்கள் போர்த்திறனும் வீரமும். ‘இப்படித்தான்  இருப்பார்கள்’ என்று எல்லோராலும் கணிக்கப்படுகிறபோது புலிகள் அந்த கட்டத்திலிருந்து வேறொரு கட்டத்திற்கு சத்தமின்றி பாய்ந்து விடுகிறார்கள். முடிவில் மீண்டும் அறுபடமுடியாத புதிராய் புலிகள்.

புலிகளின் இந்த வீரம் எதிரிகளை கிலி கொள்ளச்செய்கிறது. தமிழனை தலை நிமிரச் செய்கிறது. தொடரும் இராணுவ வெற்றிகளின் வரிசையில் குடாரப்பு தரையிறக்கம் உலக இராணுவ பயிற்சிக் கல்லூரிகளில் பாடத்திட்டமாகியது. தீச்சுவாலை எதிர் நடவடிக்கை அடுத்த அத்தியாயமாகியது.  உலகம் பயந்தது. தமது இராணுவக் கல்லூரிகளின் பாடத்திட்டங்களை தமிழர் சேனையின் இராணுவ நகர்வுகள் நிரப்பப்போகும் அபாயத்தை உணர்ந்தன. முடிவு இலங்கை அரசை சமாதானப் பேச்சுவார்த்தைக்குப் பணித்தது.

தமிழர் சேனை தனது அசுர பலத்தின்மூலம் பேச்சுவார்த்தை மேசையில் அமர்ந்தது. எல்லாம் பலத்தில் தீர்மானிக்கப்பட்டது. எல்லாமுமே… தமிழர் சேனையின் படை பலம் குறித்த முக்கிய பகுதிகளை நாம் விவாதிக்கும் முன்பு இன்றைய சூழலில் புலிகள் பற்றி பொத்தாம் பொதுவாக உள்ள புரிதலை நாம் உணர்ந்தாக வேண்டும்.

இன்று உலகம் புலிகள் மீதான தமது முன்னைய பார்வையைப் புறந்தள்ளிவிட்டு புதிய கோணத்துடன் புலிகளை அணுகுகின்றது. இதற்கு ஆயிரம் காரணங்கள் சொல்லப்பட்டாலும் (தமிழ் மக்கள் ஒட்டுமொத்தமாக புலிகளை ஏகப் பிரதிநிதித்துவப்படுத்தியமை, புலிகளின் அமைதிப் பேச்சுவார்த்தை – இன்னும் பிற) உண்மை அதுவல்ல. புலிகளின் படைத்துறை வளர்ச்சியும் இராணுவச் சமநிலையுமேயாகும். தமிழ்ச்சேனை தனது அசுர பலத்தின் மூலம் இந்த நிலையை வந்தடைந்திருக்கிறது. இதைத் தக்கவைக்க வேண்டியது காலத்தின் கட்டாயம்.

போரில்லாத ஒரு சமுதாயம்  சாத்தியமா! எந்தக் கோணத்தில் ஆராய்ந்தாலும் பதில் இல்லை என்பதாகவே இருக்கிறது. இது ஒரு கசப்பான எதார்த்தம். உலகெங்கும் உற்று நோக்கினால் அமைதி சமாதானம் என்ற சொல்லாடல்கள் பேச்சளவிலேயே தங்கிவிடுகின்றன. செயலளவில் தனிமனிதன் தொடங்கி நிறுவனங்கள்வரை எந்தக் கணமும் வன்முறையை கட்டவிழ்த்துவிடும் நிலையிலேயே இருக்கின்றன. இது ஒரு விசித்திரமான எதார்த்தம்.

சாணக்கியரின் சிறிய மீனை பெரிய மீன் விழுங்கும், டார்வினின் தகுதியுள்ளவை உயிர்வாழும் என்ற கதையாடல்களை நேரொத்தவை. இதையே சற்று நாகரீகமான மொழியில் சிக்மன்ட் ப்ராய்ட் சொல்கிறார் `தற்காப்பு என்பது ஓர் இயற்கையான உணர்வு என்பதுடன் நீடித்த வாழ்க்கைக்கு அது அவசியமுமாகும்’. இந்தக் கோட்பாடுகளை தமிழர்கள் புறக்கணிப்பார்களானால் அவர்களை செப்பேடுகளிலும் நாணயங்களிலும்தான் தேடவேண்டிவரும்.
தமிழர்களின் சுதந்திரமான வாழ்விற்கு தமது படைக் கட்டமைப்பையும் வீரத்தையும் தொடர்ந்து பேணுவது அவசியம். போரைத் துறந்த சமுதாயத்தை வரலாறு கண்டதில்லை என்பதும், வாள்கள் மோதும் ஓசையும், போர் முரசுகளின் ஒலியுமே வரலாற்றின் போக்கில் திருப்பு முனைகளாக இருந்திருக்கின்றன என்பதும் போர் அறிவியல் வரலாறு நமக்குச் சொல்லும் செய்தியாகிறது. இதற்குத் தமிழன் மட்டும் விதிவிலக்காக முடியுமா! தமிழர் மீது போர் கட்டவிழ்ந்ததும் தமிழர் சேனை அதை வெற்றிகரமாக எதிர்கொண்டதும் வரலாற்றின் பக்கங்களில் செறிந்து கிடக்கிறது.

உண்மையான வரலாற்று நிகழ்வுகளுடன் பல கட்டுக்கதைகளும் புனைவுகளும் கலந்திருப்பதாலும் சங்ககால வரலாற்றின் காலவரிசையை அறுதியிட்டுக் கூறமுடியாததாலும் –  சில சிறிய சமர்களை புறந்தள்ளிவிட்டுப் பார்த்தால் –  தமிழர் சேனை எதிர்கொண்ட முதல் முக்கிய போராக அதியன் மரபினனான எழினியை கோசர்களின் உதவியுடன் தோற்கடித்து துளுநாட்டைக் கைப்பற்றிய மௌரியர்கள் மீது சோழ மன்னன் இளஞ்சேற்சென்னி தொடுத்த போரே முதற்போர் எனலாம். (தனக்குக் கீழிருந்த சேரர், பாண்டியரையும் பிற சிற்றரசர்களையும் சேர்த்து ஒரு கூட்டணியாக போர்தொடுத்தான்.)  இப்போரை வரலாற்றறிஞர்கள் செருப்பாழிப்போர் என்று குறிப்பிடுகின்றனர்.

இவ்வாறாக நீண்டு தொடரும் தமிழர் போரியல் வரலாறு கட்டப்பொம்மன் தூக்கிலிடப்பட்டதுடன் முடிவுக்கு வருகிறது.  இது தமிழகப் போரியல் வரலாறு. ஈழத்தில் போரின் ஆரம்பம் சரியாகக் கணிக்கப்படமுடியாவிட்டாலும் எல்லாளன்,  சங்கிலியன் என்று நீண்டு பண்டாரவன்னியனுடன் ஒரு தற்காலிக முடிவுக்கு வருகிறது. பல புதிய சாத்தியங்களைத் திறப்பதற்காக போரியல் சமன்பாடுகளைக் கலைத்துப் போடுவதற்காக பிரபாகரன் என்ற மனிதனுக்காக வரலாறு வழிவிடுகிறது.

போர் அச்சுறுத்தல் இல்லாத நாடுகள் கூட தமது இராணுவக் கட்டமைப்பிற்காகவும், பாதுகாப்பிற்காகவும் பெருமளவு நிதியை ஒதுக்குவதை கண்கூடே காண்கின்றோம். ஒருகாலத்தில் உலக அதிகார அரசுகள் தமது இருப்பை உறுதி செய்வதற்காக சிறிய நாடுகள் மீது போர் தொடுத்து காலனித்துவ நாடுகளாக்கின. காலனிய நாடுகளின் வளங்கள் சுரண்டப்பட்டதுடன், அங்கிருந்த வேறுபட்ட சமூகங்களுக்குள் முரண்பாடுகளைத் தோற்றுவித்து இனச்சிக்கலையும் தோற்றுவித்தன. காலனிய நாடுகளில் இருந்து வெளியேறும்போது பெரும்பான்மை இனங்களுக்குள் சிறுபான்மை இனங்கள் அடங்கியிருக்கக்கூடியவாறு சட்டங்களை உருவாக்கிவிட்டுப் போயின.

இதன் பின்னுள்ள அரசியல் ஆழமானது. இலங்கைத் தீவிலும் ஆங்கிலேய அதிகார வர்க்கத்தால் இத்தகைய ஒரு சூழல் உருவாக்கப்பட்டது வரலாறு. கீழை நாடுகளில் கட்டங்கட்டமாக பரவும் இன மொழி சமய முரண்பாடுகளை மேலைத்தேயம் உருவாக்குகிறது – ஊக்குவிக்கின்றது என்ற கதையாடல் மிகைப் படுத்தப்பட்டதல்ல. அறம் நீதியைப் பேசும் மனித சமுதாயத்தின் குரூரமான முகங்களில் இதுவும் ஒன்று. மனித விழுமியங்கள் உடைந்து சிதறுகின்றன நம் கண்முன்னே.

மற்றவர்களை பலவீனர்களாக வைத்திருப்பதன் மூலம் தம்மை பலமானவர்களாக்கி தமது இருப்பை உறுதிசெய்யும் உத்தி இது. சமகாலத்தில் நம்முன்னே விரியும் உலக அரசியல் நகர்வுகள் இவை.  தமது பின்கொல்லையில் அணுஆயுதங்களை அழகாக அடுக்கி வைத்துவிட்டு அணுஆயுத ஒழிப்புப் பற்றி ஒற்றை அறம்பேசும் முரணான மேற்கத்தேய உலகத்திற்கு ஈடுகொடுத்து எமது போராட்டம் முன்னெடுக்கப்படுவது அவ்வளவு இலகுவான விடயமல்ல.

இந்த முரண்பட்ட உலகத்தோடு போட்டிபோட்டு எமது விடுதலைக்கான எத்தனங்களைச் சாத்தியப் படுத்தக்கூடிய ஒரு தலைமை பிரபாகரன் மூலம் எமக்குக் கிடைத்திருக்கிறது. அவரது இராணுவ நகர்வுகளும், அரசியல் தந்திரங்களும் அசாதாரணமானவை. வளையவேண்டிய இடத்தில் வளைந்து நிமிரவேண்டிய இடத்தில் நிமிர்கிறார்.

பிரபாகரன் காலத்தில் அவர் தலைமையின் கீழ் எமது விடுதலை கிடைக்காவிடின் இனி ஒருபோதும் அது எமக்குக் கிடைக்கப்போவதில்லை. இது பிரபாகரன் என்ற மனிதன் மீதுள்ள பிரேமையினால் மொழியப்படுகின்ற உணர்ச்சி மிகுந்த கதையாடல் கிடையாது. உண்மை சார்ந்த உரையாடல் இது. தமிழர் வரலாற்றை மட்டுமின்றி இந்த பூமிப் பந்தெங்கும் அதிகார வர்க்கங்களுக் கெதிராகப் போராடும் ஒவ்வொரு இனத்தினதும் தலைவர்களது தோற்றத்தையும், வளர்ச்சியையும் தர்க்கரீதியாகவும் கோட்பாட்டு ரீதியாகவும் ஆய்வுக்குட்படுத்தும்போது பிரபாகரன் என்ற மனிதனின் தனித்துவம் எமக்கு வெளித்தெரியும்.

தமிழின விடுதலைவேட்கையின் ஒரு குறியீடாகத் திகழ்கிறார் பிரபாகரன். பிரபாகரன் காலத்தின் கட்டாயம். அவரை ஒரு சட்டகத்துக்குள் அடக்கிவைத்து மதிப்பிடுவது எமது விடுதலையை பின்னடையச் செய்யும். தமிழின விடுதலைக்காக எதையும் செய்யத் தயாராக இருக்கிறார். எதையுமே! உலகத்தின் முத்திரை குத்தலுக்கு அஞ்சவில்லை. தமிழர் படைக் கட்டமைப்பினை ஒரு சீரான முறையில் வளர்த்தெடுத்திருக்கிறார் பிரபாகரன்.

நீண்ட காலத்திற்குப் பிறகு இது தற்போது சாத்தியமாகி இருக்கிறது. இதையொருபோதும் நாம் சிதையவிட அனுமதிக்க முடியாது- கூடாது.   நாம் தற்போது வந்தடைந்துள்ள நிலை எமது பலத்தால் வந்து சேர்ந்து என்பதை நாம் ஒருபோதும் மறந்துவிடல் ஆகாது.

தொடரும் அமைதிச்சூழலிலும் புலிகளின் படைத்துறை கட்டமைப்பு குறித்து சரியாக கணிக்கமுடியவில்லை. ஒரு விடுதலைப் போராட்ட அமைப்பு எவ்வளவு காலத்திற்கு போரில் ஈடுபடாமல்  தமது படைக்கட்டமைப்பைப் பேணமுடியும் என்று கேள்வி எழுப்புகிறார்கள் படைத்துறை ஆய்வாளர்கள். அமைதிச்சூழலில் புலிகளின் போர்முனைப்பும் போர்த்தயார் நிலையும் சிதறடிக்கப்படும் என்றே கணிக்கப்பட்டது. கடந்த வருடம் அதுவும் கருணா விவகாரம்மூலம் பொய்யாகிப்போனது.

பிரபாகரன், சமாதான காலத்திலும் தமிழர் சேனையை மிக இறுக்கமாக கட்டமைத்திருப்பதை அவதானிக்க முடிகிறது. இந்த நிலையிலிருந்துதான் ஈழவிடுதலைப்போராட்டம் மீதான சிறந்ததொரு வாசிப்பை நிகழ்த்த முடியும். ஈழவிடுதலையின் தரிசனமாய் ஒரு சீரான அலைவரிசையில் தலைவர் பிரபாகரன் கடந்து செல்வதை காணமுடிகிறது.

தமிழர் சேனையிடமிருந்து எத்தனையோ போரியல் பாடங்களை கற்று பித்தம் தெளிந்த பின்னரும், சிங்களமும் சில அந்நியசக்திகளும் சமாதான காலத்தைப் பயன்படுத்தி தமிழீழ விடுதலைப் போராட்டத்தை சிதைக்க முனைப்புக் காட்டுகின்றன. ‘கெடுகிறேன் பிடி பந்தயம்’ என்ற கணக்காய் தமது அழிவுக்கு வழி கோலுகின்றன. அமைதிவழியில் தமிழர் பிரச்சினைக்கு தீர்வை தேடுவது அனைவருக்கும் நல்லது. இல்லையேல் தமிழர் சேனையால் போரியல் வரலாற்றில் புதிதாய் சில சமன்பாடுகளும் கோட்பாடுகளும் இலங்கைத்தீவில் எழுதப்படும்.

இரத்தத்தாலும் கண்ணீராலும் எழுதப்பட்ட ஒரு வீரஞ்செறிந்த உரிமைப்போரை எந்த காரணத்துக்காகவும் விட்டுக்கொடுக்கமுடியாது. இன்று ஈழவிடுதலைப்போராட்டம் என்றுமில்லாத ஒரு புதிய நெருக்கடிக்கு முகம் கொடுத்து நிற்கிறது. எதிரிகள் துரோகிகள் அந்நியசக்திகள் இணைந்த ஒரு புதிய வலைப்பின்னல் தமிழர்களுக் கெதிராக இறுக்கமாகப் பின்னப்பட்டுள்ளது. சமாதான காலத்தை தமக்கு சாதகமாக திசை திருப்பியுள்ளது இக் கூட்டணி.

கையறுநிலையில் தமிழினம், தலைவனை மட்டும் நம்பியபடி… பிரெஞ்சு தத்துவமேதை ழான் போத்ரியா  நியூயோர்க்கில் நடைபெற்ற செப்டெம்பர் 11  தாக்குதலை முன்னிறுத்தி பின்வருமாறு கூறினார். ‘அனைத்து சீட்டுக்களையும் தன்னிடம் வைத்துக்கொண்டு அதிகார அரசு நடத்திய விளையாட்டில் மறுதரப்பு விளையாட்டின் விதிகளை மாற்றவேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டது. அவ் விதிகள் கொடுரமானவை. ஏனெனில் அவை இறுதி யானவை என்பதால்’ இலங்கைத்தீவிலும் சிங்களம் அனைத்து சீட்டுக்களையும் தன்னகத்தே வைத்துக்கொண்டு எம்மை விளையாட்டுக்கு அழைக்கிறது.

சீட்டுக்களை சரியான விகிதத்தில் பகிர்ந்தளித்து விளையாட்டை தொடர்வது சிங்களத்துக்கு நல்லது. தொடர்ந்து மறுத்தால் தமிழர் தரப்பும் ழான் போத்ரியா குறிப்பிட்டது போல் விளையாட்டின் விதிகளை மாற்றவேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்படும்.  அவ் விதிகள் கொடூரமானவை. ஏனெனில் அவை இறுதியானவை என்பதால்.  ‘அவலத்தை தந்தவனுக்கே அதை திருப்பி கொடு’ – இது தலைவனின் வரிகள்.

பரணி
ஊடகவியலாளர்,
ஆய்வாளர்,
விமர்சகர்.
பிரான்ஸ்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s