பாலை திரைப்படமும் ஈழத்தமிழினமும்

அண்மையில் `பாலை’ திரைப்படம் பார்த்தேன். இரண்டாயிரம் வருடத்திற்கு முன் வாழ்ந்த தமிழர்களின் வரலாற்றின் ஊடாக ஈழத்தில் அழிக்கப்பட்ட எமது  இனத்தின் கதையை பேசுகிறது இப் படம்.   ஈழத்தமிழர்  கூட இப்படத்தை கண்டுக்காமல் விட்டது வெட்கட் கேடான விடயம் தான்.

படத்தின் இயக்குநர் தோழர் ம.செந்தமிழன்  தமிழ்நாட்டு உரிமைப் போராட்டம், ஈழ விடுதலைப் போராட்டம் என பல போராட்டங்களிலும் பங்கெடுத்து சிறைகளுக்கும் சென்றவர்.

ஆனாலும் இத்திரைப்படம் வசூலுக்காக எடுக்கப்படாத போதும் இத்திரைப்படத்திற்காகப் பலரும் தமது வேறு பணியை விலகி அர்பணித்திருக்கின்றார்கள் .  அப்படியிருந்தும் இத்திரைப்படத்தை தமிழ் மக்கள் வெற்றியளிக்கச் செய்யவில்லை என்றே தெரிகின்றது

இத்திரைப்படம் திரையரங்குகளில் மறுக்கப்பட்டதாகவும் தெரிகின்றது, உச்சிதனை முகர்ந்தால் திரைப்படத்திற்கு நேர்ந்தது தான் இதற்கும் நடைபெற்றிருக்கின்றது போலும்

அதன் இயக்குனர் ம. செந்தமிழன் ////23 April 2012

இந்தப் படத்துக்காக தனது பல ஆண்டுகள் அனுபவம் மிக்க பத்திரிகைப் பணியை, குமுதம் இதழ் பணியை, விட்டு விலகினார் துணை இயக்குனர் வெற்றிவேல். மேலும் பலர் தம் வேலைகளை உதறினர். அந்தப் பட்டியல் பெரிது. இன்றும் நாங்கள் அதே உறுதியுடன் நிற்கிறோம்.

திரையரங்குகளில் இடம் மறுக்கப்பட்ட பின்னரும் நாங்கள் ஓயவில்லை. குறுவட்டுகளை வெளியிட்டோம். ஆயிரக் கணக்கில் விற்கின்றன. இதோ இப்போது அடுத்த கட்டமாக தர மேம்பாடு செய்யப்பட்ட குறுவட்டுகளை, பாலையின் தயாரிப்புக் காட்சிகள் அடங்கிய ஆவணப் படம் ஒன்றுடன் சேர்த்து வெளியிட உள்ளோம்.

இந்த விற்பனையின் வருவாயின் ஒரு பங்கைத்தான், சறுக்கல் பாறை தொல் தமிழர்களுக்கான கிராமம் உருவாக்கப் பயன்படுத்துகிறோம்.

*********

பாலை திரைப்படத்தை ஆயுதமாக்குவோம்! -கீற்று

உரைவீச்சுகளின் வழியே நடத்தப்படும் பொதுக் கூட்டங்கள், ஆர்ப்பாட்டங்களை விட மிக வலிமையான பரப்புரை ஊடகம் தான் திரையுலகம். இத்திரையுலகின் வழியே, தமது வரலாற்றைத் தாமே அறியாத தமிழ் இனத்திற்கு, தம் கடந்தகால வாழ்வியல் பெருமிதங்களையும், வரலாற்றையும் எடுத்துரைக்க வந்திருக்கிறது ‘பாலை’ திரைப்படம்.

படத்தின் இயக்குநர் தோழர் ம.செந்தமிழன் தமிழ் உலகிற்கு நன்கு அறிமுகமானவர். துடிப்பான ஓர் செய்தியாளராகவும், சின்னத்திரை நாடகங்களில் எழுத்தாளராகவும் வெற்றிகரமாக சென்னை நகரில் வலம் வந்த தோழர் ம.செந்தமிழன், இலட்சங்களை உதறிவிட்டு தனது சொந்த ஊரான ஆச்சாம்பட்டியில் உழவுப் பணியை மேற்கொண்ட போது எல்லோரும் அவரை ஆச்சர்யமாகப் பார்த்தனர். இயற்கை வேளாண்மை முறையில் தமது வேளாண் பண்ணையை வெற்றிகரமாக இயக்கி, ‘பசுமை விகடன்’ நாளிதழின் அட்டைப்படத்திலும் ஓர்முறை அவர் இடம் பிடித்தார். தமது கல்லூரிப் படிப்பின் காலகட்டங்களிலிருந்தே தமிழ்நாட்டு உரிமைப் போராட்டம், ஈழ விடுதலைப் போராட்டம் என பல போராட்டங்களிலும் பங்கெடுத்து சிறைகளுக்கும் சென்றவர்.

கடந்த 2009ஆம் ஆண்டு, ஈழப்போர் நடந்து கொண்டிருந்த போது, ‘முத்துக்குமார் யார்?’ என திமிருடனும், பகுத்தறிவுப் பகலவன் தந்தைப் பெரியாரை அவமதித்தும் பேசிய, தமிழினப் பகைவன் – காங்கிரஸ் ஓட்டுப் பொறுக்கி ஈ.வி.கேஸ்.இளங்கோவன் வீட்டை முற்றுகையிடும் போராட்டத்தை இளந்தமிழர் இயக்கம் நடத்திய போது, அதில் முன்னணியாக கைதாகி சிறை சென்றவர் செந்தமிழன்.

அவருடன், நான் உட்பட பல்வேறு அமைப்புத் தோழர்களும் சிறையில் இருந்ததை இந்நாளில் நினைவு கூர்கிறேன். அப்போது சிறைக்கு எங்களுடன் வந்த புதிய தோழர்கள் பலரும், தற்போது ‘பாலை’ படத்தில் முக்கியப் பாத்திரங்களை ஏற்று நடித்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்க செய்தி.

paalai_622

மக்கள் தம் துன்பங்களை மறந்துவிட்டு, ஆடிப்பாடி மகிழ்வதற்கு மட்டுமே பயன்படுவதாக ‘இலக்கிய’த்தை யாரேனும் கைகாட்டினால், அதனை தயக்கின்றி நான் ‘போதை வஸ்து’ என்பேன். ‘இலக்கியம்’ என்ற சொல்லை, மக்களை ஓர் இலக்கு நோக்கி திரட்டப் பயன்படும் ஓர் போராட்ட வடிவமாகத் தான் நான் காண்கிறேன். அவ்வகையில், ‘பாலை’ ஓர் போராட்ட இலக்கியமே! தமிழ்நாட்டு உரிமைப் போர், ஈழ விடுதலைப் போர் என பல போராட்டங்களிலும் முன்நின்ற தோழர் ம.செந்தமிழன் உள்ளிட்ட அவரது படக் குழுவினரிடம் இப்படிப்பட்ட போராட்ட இலக்கியம் வரவில்லை என்றால் தான் நாம் அதிர்ச்சி அடைந்திருக்க முடியும்!

புலி முத்திரை தாங்கிய முல்லைக் குடியினருக்கும், சிங்க முத்திரை தாங்கிய ஆயக்குடி வந்தேறிகளுக்கும் இடையேயான போர் தான் பாலை படத்தின் கரு. ஈழப்போரை நினைவுபடுத்தும் இக்கதைக்கருவை, சங்க இலக்கியங்களிலிருந்து ஆய்வு செய்து எடுத்தக் குறிப்புகளைக் கொண்டு, அம்மக்களின் அப்போதைய வாழ்வியல் பண்புகளோடு படமாக்கியிருக்கின்றனர்.

“வரலாற்றை அறிந்து கொள்ளாதவர்கள் வரலாற்றைப் படைக்க முடியாது” என்று சொன்னவர் தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன். தமிழீழ மக்களின் வரலாற்றையும், அம்மக்களின் விடுதலைப் போராட்ட வரலாற்றையும் தம் ஆட்சிப்பகுதியில் வாழ்ந்த தமிழ் மக்களிடம் கொண்டு சேர்த்தது தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பு. இதனால் தான், எத்தகைய இழப்புகளையும், பின்னடைவுகளையும் சந்தித்த போதும், தமிழீழ மக்கள் தமது இலட்சியமான ஈழவிடுதலையை சமரசமின்றி விட்டுக்கொடுக்காமல் போராடுகின்றனர்.

ஆனால், இன்றைய தமிழ்நாட்டு மக்களின் நிலையோ அப்படியல்ல. இந்திய அரசின் அரைகுறை சனநாயக கங்காணி ஆட்சியும், அதன் ஊதுகுழல் ஓட்டுப் பொறுக்கிக் கட்சிகளும் தமிழ்நாட்டு மக்களை மயக்கத்திலேயே ஆழ்த்தி வைத்துள்ளன. உரிமைகள் பறிக்கப்பட்ட போது குமுறி எழும் தமிழ்நாட்டுத் தமிழர்களை ஒரு சில நாடாளுமன்ற சீட்டுகளாலும், பதவிகளாலும் வீழ்த்திவிட முடியும் என்ற துணிவு ஆரிய இந்திய ஆளும் வர்க்கத்திற்கு எப்போதும் உண்டு. ஆனால், இதெல்லாம் கடந்த காலம் தான்.

இந்திய அரசின் திமிர்த்தனத்தை உடைத்தெறியக் கிளம்பியுள்ள புதிய தலைமுறை இளந்தமிழர்களின் காலமிது. மூவர் தூக்கை நீக்கவும், கூடங்குள அணுமின் நிலைய எதிர்ப்பிலும் மக்கள் காட்டுகின்ற வீரியம், இந்திய அரசிற்கு எதிரான போராட்டமாக வளர்ந்து வருகின்ற காலமிது. இன்றைய போராட்டத் தமிழகத்தின் மக்கள், தம் வரலாற்றைத் தேடும் பயணத்தை வேகப்படுத்தியிருக்கிற கால கட்டமும் இதுதான்.

இந்நேரத்தில், தம் வரலாற்று மரபையும் பெருமிதங்களையும் தமிழ் மக்களுக்கு உணர்த்தும் இலக்கிய வடிவங்கள் காலத்தின் தேவைகள். இத்தேவையை உணர்ந்ததால் தானோ என்னவோ, ஊரைக் கொள்ளையடித்து ‘உழைத்து’ சம்பாதித்த பணத்தில், பொழுதுபோக்காக படமெடுத்து, வரலாற்றைத் திரித்துக் கூறி போலித் தமிழ்ப் பெருமிதத்தை உருவாக்கும் படங்களும் வருகின்றன. நல்லவேளை ‘பாலை’ அப்படிப்பட்ட படமாக வரவில்லை!

ஆண்களுக்கு நிகராக போருக்கு தயாராகும் வீரத்தமிழ்ப் பெண்களையும், தம் இனக்குழுவிற்கு ஆபத்து நேரும் போது வில்லெடுத்து களத்திற்கு வந்து நிற்கும் சங்ககால சிறுவர் கூட்டத்தையும் ‘பாலை’ அடையாளம் காட்டியிருக்கிறது. பெண்களை வீட்டுக்குள் அடைத்து வைத்திருக்கும் மரபை தமிழினம் கொண்டிருக்கவில்லை என்ற உண்மையும் இதில் நிலைநாட்டப்பட்டுள்ளது. திரைத்துறையில் இதுவரையில் எவ்வகையிலும் இடம்பெறாத, பார்ப்பனியத்தால் ஒதுக்கி வைக்கப்பட்ட பழந்தமிழ்க்குடியான இருளர் சமூகப் பெண்கள் பலரும் இப்படத்தில் முக்கியப் பாத்திரங்களை ஏற்று நடித்திருப்பதையும் குறிப்பிட விரும்புகிறேன்.

போர் என்றால் எதிரியைத் தாக்குவதல்ல எதிரியை வீழ்த்துவது’ என முல்லைக்குடி முதுவன் கூறும் போதும், ‘தலைவர் எங்கே தலைவர் எங்கே என தேடாதீர்… எதிரியை எங்கே எதிரி எங்கே என அவனைத் தேடுங்கள்’ என்று பொருள் படும்படி முல்லைக்குடித் தலைவர் விருத்திரன் தனது வீரர்களுக்கு போர்க்களத்தில் கூறும் போதும், இவ்வார்த்தைகள் இன்றைய உலகத் தமிழ் மக்களுக்கும் தேவைப்படுகின்ற வரிகளாக முன்னிற்கின்றன.

அவ்வப்போது பாலை முதுவன் உதிர்க்கும் வசனங்கள் அனைத்தும் மனதில் நிற்பவையாக உள்ளன. அவர் தனது மகன் இறந்த கதையை யதார்த்தமாகக் கூறும் போது நெஞ்சில் ‘பாலை’யின் கொடூரத்தை உணர வைக்கிறார். கதைப்படி அவர் கூறுகின்ற ‘பாலை’ என்ற வாழ்விடப்பரப்பு, தற்போது சோமாலியாவில் நிகழ்ந்து வரும் வரலாறு காணாத பெரும் பஞ்சத்தைப் போன்றது என உணர முடிகின்றது. உடன்போக்கு, ஆநிரைக் கவர்தல், திருமண முறை, யானைகளை விரட்ட கவன்கல் எரிதல், புகை மூலம் பேசும் முறை என சங்ககால வாழ்வியல் பதிவுகள் படமெங்கும் சிதறிக் கிடக்கின்றன.

நான்கடி தூரத்தில் யார் வருகிறார்கள் எனத் தெரிந்து கொள்வதற்கே நாம் படாதுபாடு படுகின்ற இதே இனத்தில் தான், நாற்பதடி தூரத்தில் எத்தனை வண்டிகள் வருகின்றன, எத்தனை பேர் வருகின்றனர் என்று கணக்கிட்டுச் சொல்லும் அளவிற்கு மக்கள் தமது அறிவை வளர்த்து வைத்திருந்தனர் என நினைக்கும் போது பெருமையும், ஏக்கப் பெரு மூச்சும் இயல்பாக எழுகின்றன.

கதை, வசனம், பாடல் வரிகள் உள்ளிட்ட எழுத்துப் பணிகளும், இசை, ஒளிப்பதிவு உள்ளிட்ட தொழில்நுட்பப் பணிகளும் செம்மையுற செய்யப்பட்டிருக்கின்றன. திரைத்துறையை முற்றிலும் சாராத புதிய இளைஞர்களை நடிக்க வைத்து, பாலை படம் தனிமுத்திரையும் பதித்திருக்கிறது.

paalai_623

படத்தின் இறுதியில், ‘நாம் வாழும் இந்த மண் நம் முன்னோர்களால் எதிரிகளிடமிருந்து மீட்கப்பட்ட மண்’ என்று கதைநாயகி காயாம்பூ கூறும் போது, இப்படம் இன்றைய இளைஞர்களுக்கு நம் போராட்ட வரலாற்றை உணர்த்துவதற்காக கிடைத்த ஓர் நல்வாய்ப்பு என்றே தோன்றுகிறது.

இப்படத்தின் படப்பிடிப்பு நடந்த விதம், அங்கு பலமுறை நான் நேரில் சென்றதால் எனக்கு நன்றாகவேத் தெரியும். சென்னை திருவல்லிக்கேணி மேன்சன் அறைகளில் பேச்சலர் இளைஞர்கள் குழுவாக குழுமியிருப்பதைப் போல, தஞ்சாவூர் ஆச்சாம்பட்டியில் அமைந்திருந்த வேளாண் பண்ணைக்கு நடுவில் அமைந்திருந்த ஒரே அறை கொண்ட ஓர் குடிசை வீட்டில், படக்குழுவினர் இரத்திரி பகலாக அங்கேயே உண்டு, உறங்கி, ஒன்றாகக் கலந்து பேசி ‘படப்பிடிப்பு’ என்பதை ஓர் தொழிலாகவோ, வேலையாகவோ கருதாமல், அதை ஓர் ‘வாழ்முறை’யாக மாற்றியிருந்தனர். இனஉணர்வுடனும், அர்ப்பணிப்புடனும் கூடிய உழைப்பு தான் இப்படவெற்றியின் ஆணிவேர்!

நம் தமிழ்ச் சமூகத்தின் பெருமிதங்களைளும், மரபுகளையும் கூறி, தமிழ் மக்களை அடிமை மனநிலையிலிருந்து விடுவித்து, போர்க்குணமிக்கப் படையாக மக்களை மாற்றுவதற்குக் கிடைத்த ஓர் ஆயுதம் தான் ‘பாலை’ திரைப்படம். ‘பாலை’ படத்தை ஓர் பொழுது போக்குத் திரைப்படமாக பார்க்காமல், நம் இன்றைய தலைமுறையினருக்கு தமிழ் இனத்தின் கடந்த கால வரலாற்றைக் கூறும் பாடமாக நாம் பார்க்க வேண்டும். இப்படம் வணிக ரீதியாகத் தோல்வியைத் தழுவினால், தமிழ் இனம் குறித்தும் வரலாறு குறித்தும் பிற்காலத்தில் எந்தவொரு படங்களும் திரையில் வராமல் தடுக்கும்

டேம்-999 போன்ற தமிழ் இனத்திற்கு எதிரான படங்களுக்குக் கிடைத்த திரையரங்குகளில் 25 விழுக்காடு கூட, சங்ககால தமிழ் இனத்தின் பெருமைகளைப் பேசும் இப்படத்திற்கு கிடைக்கவில்லை என இயக்குநர் ம.செந்தமிழன் ஊடகங்களுக்குக் கடிதம் எழுதிய போது இன்றைய தமிழ் இனத்தின் அவலநிலையை இன்னுமொருமுறை நம்மால் உணரமுடிந்தது.

இப்படத்தை திரையிடுவதற்குக் கிடைத்துள்ள சொற்பத் திரையரங்குகளுக்குக் கூட இது போன்ற பணமுதலைகள் நெருக்கடிகளும், மிரட்டல்களும் விடுத்து இப்படத்தை ஓட விடாமல் செய்வதற்கான முயற்சிகளில் இறங்கினர். தன் காலில் விழாத சிறு தயாரிப்பாளர்கள் எவருமே இத்துறையில் பிழைக்கவோ, காலூன்றவோ முடியாது என்ற ஆதிக்க நிலையை மட்டுமே விரும்புகின்ற பணமுதலைகளை மீது நாம் தாக்குதல் தொடுப்பதற்கு, “பாலை” போன்ற நல்லத் திரைப்படங்கள் தான் சரியான ஆயுதங்கள்!

பணமுதலைகளும், பன்னாட்டு நிறுவனங்களும் ஆக்கிமித்துள்ள தமிழ்த் திரையுலகில் தனியொருக் குழுவாக ‘பாலை’ படக்குழுவினர் முத்திரைப் பதிக்க நிற்பது கூட ஓர் வகையிலான அரசியல் போராட்டம் தான்! ‘பாலை’ படக்குழுவினரின் இப்போராட்டத்தில் நாமும் பங்கெடுப்போம். தமிழ் இனத்தின் போராட்ட மரபை உணர்த்தும் ‘பாலை’ போன்ற படங்களின் வெற்றி தான், நாம் அடுத்த தலைமுறைக்கு நம் போராட்டத்தை கையளிப்பதில் நமக்குக் கிடைக்கும் வெற்றி! நம் குடும்பங்களையும், சொந்தங்களையும் இப்படத்திற்கு கூட்டம் கூட்டமாக அழைத்துச் செல்வோம். நம் குடும்பங்களை அரசியல்படுத்துவோம்! ‘பாலை’ திரைப்படத்தை பணமுதலைகளுக்கு எதிரான ஆயுதமாக்குவோம்!

– க.அருணபாரதி ( arunabharthi@gmail.com)

****

எளியோர் செய்த போர்! பாலை திரைப்படம் உருவான கதையை விவரிக்கிறார்…

அதன் இயக்குனர் ம. செந்தமிழன் ////23 April 2012

இந்தப் படத்துக்காக தனது பல ஆண்டுகள் அனுபவம் மிக்க பத்திரிகைப் பணியை, குமுதம் இதழ் பணியை, விட்டு விலகினார் துணை இயக்குனர் வெற்றிவேல். மேலும் பலர் தம் வேலைகளை உதறினர். அந்தப் பட்டியல் பெரிது. இன்றும் நாங்கள் அதே உறுதியுடன் நிற்கிறோம்.

திரையரங்குகளில் இடம் மறுக்கப்பட்ட பின்னரும் நாங்கள் ஓயவில்லை. குறுவட்டுகளை வெளியிட்டோம். ஆயிரக் கணக்கில் விற்கின்றன. இதோ இப்போது அடுத்த கட்டமாக தர மேம்பாடு செய்யப்பட்ட குறுவட்டுகளை, பாலையின் தயாரிப்புக் காட்சிகள் அடங்கிய ஆவணப் படம் ஒன்றுடன் சேர்த்து வெளியிட உள்ளோம்.

இந்த விற்பனையின் வருவாயின் ஒரு பங்கைத்தான், சறுக்கல் பாறை தொல் தமிழர்களுக்கான கிராமம் உருவாக்கப் பயன்படுத்துகிறோம்.


பாலை யில் நாங்கள் பல்வேறு நெருக்கடிகளைக் கடந்து தப்பிப் பிழைத்து, அடுத்த படத்துக்கான தயாரிப்பில் இறங்கியுள்ளதற்கான காரணம் ஒன்று உண்டு. தயாரிப்பு முறையில் நாங்கள் உருவாக்கிய தொழில் நுட்ப நடவடிக்கைகள் மிகவும் சிக்கனமானவை.

இங்கேயுள்ள வணிக ’முன்னோடிகள்’ எவ்வளவு அடித்தாலும் தாங்கிக் கொண்டு படத்தை வெளியிட்டு வருவாய் ஈட்டும் வகையிலான நுட்பங்களைக் கடைபிடித்தோம்.
ஒப்பனைக் கலைஞர்கள், நடனக் கலைஞர்கள், சண்டைப் பயிற்சியாளர்கள், செட் இயக்குனர், ஆடை வடிவமைப்பாளர் உள்ளிட்ட அனைவருமே பாலையில் என் குழுவினர் மட்டுமே. இவர்களில் ஒருவருக்கும் எந்த படப் பிடிப்பையும் வேடிக்கை பார்த்த அனுபவம் கூட இல்லை. சங்ககால மாட்டு வண்டி செய்ய, உள்ளூர் ஆசாரியாரை அணுகினோம். முல்லை நில சீறூர் குடிசைகள், வட்ட வடிவில் இருக்கும். அவ்வாறான வட்ட வடிவ வீடுகளை எனது குழுவினரே வடிவமைத்து, உள்ளூர் முதியவர்களிடமும், சில பழங்குடி மக்களிடமும் குறிப்புகள் கேட்டு, உள்ளூர் தொழிலாளர்களைக் கொண்டு கட்டினார்கள். படத்தில் காட்டப்பட்ட எந்த வீடும் வெறும் ‘செட்’ அல்ல. அவை உண்மையான வீடுகள். நாங்கள் அங்கு தங்குவோம்.

நடனம் அமைக்க, பூம் பூம் மாட்டுக்காரர்களையும், இருளர்களையும் பயன்படுத்தினேன். அவர்களுக்குத்தான் உண்மையான பழங்கால நடனம் தெரியும். சண்டைக் காட்சிகளை, குத்து, சிலம்பம் முறையாகப் பயின்ற இளைஞர்கள் அமைத்தார்கள்.

படம் முழுக்க 5டி, 7டி, 60டி ஆகிய மூன்று புகைப்பட கேமிராக்களால் எடுக்கப்பட்டது. இவற்றுக்குப் பயன்படுத்தப்பட்ட லென்சுகள் கூட, சினிமா லென்சுகள் அல்ல, வெறும் புகைப்பட லென்சுகளே.

கிராமங்களில் திருமண வீடுகளில் பயன்படுத்தப்படும் இரண்டு ஹாலோஜன் லைட்டுகளே படம் முழுக்கப் பயன்படுத்தப்பட்டன. அவற்றின் ஒரு நாள் வாடகை தலா 50 ரூபாய். மிகச் சில காட்சிகளுக்குப் பயன்படுத்தப்பட்ட சாஃப்ட் பாக்ஸ் லைட்டுகளையும் நாங்களே 23 ஆயிரம் ரூபாய்க்கு வாங்கிக் கொண்டோம். இல்லையென்றால், அதன் வாடகையும் அதைப் பராமரிக்கும் யூனியன் தொழிலாளர் ஊதியமும் அதன் விலையைப் போல பல மடங்கு எகிறும்.

மாலை நேரக் காட்சிகளை, எங்கள் கார்களின் முன் விளக்குகளை ஒளிர விட்டுத்தான் படம் பிடித்தோம். ‘யாதோ யாதோ’ பாடலில் காயாம்பூ ‘முட்டுவேன் கொல் கூவுவேன் கொல்’ என காமத்தால் உருகும் நடன அசைவுகள் இரவு 7 மணிக்கு ஷம்முவின் இன்னோவா கார் லைட்டுகளின் வெளிச்சத்தில் படம் பிடிக்கப்பட்டவை.
படத்தின் எடிட்டிங் முழுமையும் லேப் டாப்பில் மட்டுமே செய்யப்பட்டன. ஒரு ஷாட்டைக் கூட நாங்கள் எடிட்டிங் ஸ்டுடியோவில் செய்யவில்லை என்பதைப் பெருமையுடன் அறிவிக்கிறேன். ஸ்டுடியோக்களில் பெரிய திரையில் படத்தை ஓட விட்டு, துல்லியமாக, ஒரு விநாடியின் 24ன் ஒரு பங்கான ஃபிரேமை மதிப்பிட்டு எடிட் செய்வதே உலக வழக்கம். ஆனால், லேப் டாப்பின் இரண்டே இரண்டு அங்குல சின்னஞ் சிறு திரையில் மட்டுமே பார்த்துத்தான் பாலை படம் எடிட் செய்யப்பட்டது.
நாங்கள் எங்கு தங்குகிறோமே அங்கே ஹார்ட் டிஸ்குகளை இணைத்து எடிட் செய்வோம்.

படப்பிடிப்பின் போது, ஷாட்டை இயக்குனர் பார்க்க, மானிட்டர் எனப்படும் தொலைக்காட்சிப் பெட்டி போன்ற ஒன்று பயன்படுத்தப்படுவது வழக்கம். பாலையில், ஒரு ஷாட்டைக் கூட நான் மானிட்டரில் பார்க்கவில்லை. அப்படி ஒரு சாதனத்தை நாங்கள் நினைத்தும் பார்க்கவில்லை. ஃபிரேமிங் அளவுகள், ஷாட்டின் ஆழம், வண்ணக் கலப்பு, ஒளி அளவு, நடிகர்களின் செயல்பாடு, அசைவு உள்ளிட்ட எண்ணற்றவைகளை நேரடியாகப் பார்த்துத்தான் மதிப்பிட்டுப் படமாக்கினேன். அவ்வப்போது ஒளிப்பதிவாளர் தனது கேமிராவின் சில அங்குலங்கள் மட்டுமே தெரியும் திரையில் ஷாட் காட்டுவார். அவரும் மானிட்டர் இல்லாமல் படம் பிடித்தது இன்றைய சூழலில் வியக்கத்தக்க பணிதான் என்பதைத் திரையுலக நண்பர்கள் நன்கு அறிவார்கள்.

Crane, mini crane, arm, jimmy, track and trolley, dolly ஆகியவை அடிப்படையாகப் பயன்படுத்தப்படும் சாதனங்கள். இவற்றில் வசதிக்கேற்ற அளவுகள் உண்டு. ட்ராலியில் கூட 40 அடி நீளம் உண்டு. நீங்கள் பார்க்கும் எல்லாப் படங்களிலும் இவை பயன்படுத்தப்படுகின்றன. நாங்கள், சொந்தமாக ஒரு track and trolley செய்தோம். அதற்கு 7 ஆயிரம் ரூபாய் செலவானது. அதன் நீளமும் 8 அடி மட்டுமே. மிகச் சில நாட்கள், திருமணத்தில் பயன்படுத்தப்படும் jimmy வாடகைக்கு எடுத்தோம். இரு நாட்கள் arm பயன்படுத்தப்பட்டது. இவைதான் எங்கள் படப்பிடிப்பின் மொத்த சாதனங்கள்.

இவை தொடர்பான நம்பிக்கையை விஜய் ஆம்ஸ்ட்ராங் அளித்தார். அபிநந்தன் அந்த நம்பிக்கைகளைக் கேள்வி கேட்காமல் செயல்பட்டார்.மாட்டு வண்டியின் முகத்தடியில் ஒளிப்பதிவாளர் அமர்ந்து கொண்டு படம் பிடிப்பார். உதவியாளர்கள் வண்டியின் பின் புறத்தைத் தூக்கி இறக்குவார்கள். இதுவே mini crane. ஆலம் விழுதைப் பிடித்துத் தொங்கியபடி top angle படம் பிடிக்கப்பட்டது, குச்சியின் முனையில் கேமராவைக் கட்டி மேலே உயர்த்தி, கீழே இறக்கி jimmy shots எடுக்கப்பட்டன. ’மாயமா போகாதேடா’ பாடலில் காயாம்பூவும் வலனும் ஓடைக் கரையில் படுத்திருக்கும் காட்சி, ஓடையில் கேமரா பயணித்துப் படமாக்கப்பட வேண்டும். குறைந்தபட்சம், 20 அடி crane அல்லது arm வைத்துத்தான் படமாக்குவது வழக்கம். நாங்கள் டயர் ஒன்றின் மீது பலகை போட்டு, அதன் மீது கேமரா வைத்து, அந்த டயரை குலுங்காமல் ஓடையில் தள்ளிச் சென்றுதான் படம் பிடித்தோம்.

ஒரு கூரை வீட்டில் வரிசையாக 40 பேரும் படுத்துக் கிடப்போம். இதுவே எங்கள் தங்குமிடம். அந்த வரிசையில் தயாரிப்பாளர், இயக்குனர், கதாநாயகன், படத் தொகுப்பாளர், நடிகைகள் சிலர் அனைவரும் அடக்கம். சங்கடமும் இல்லை, வருத்தமும் இல்லை. சில லட்சங்கள் பணம் அடங்கிய பை ஒன்றை, எடிட்டர் ரிச்சடிடம் கொடுத்து வைப்பேன். அவர், அந்தப் பையை அதே கூரை வீட்டில் அனைவரும் பார்க்கும் இடத்தில்தான் வைத்திருப்பார். ஒரு ரூபாயும் காணாமல் போகவில்லை.

மிகச் சிலருக்கு மட்டுமே விடுதிகளில் அறை எடுக்கப்பட்டது.
நானும் தயாரிப்பாளரும் என் குழுவினரும் ஏழைகள் அல்லர். ஆனாலும் இவ்வாறான நடைமுறைகளைக் கடைப்பிடித்ததற்குக் காரணம், திரைப்படக் கலை மீது எங்களுக்கு உள்ள காதல் மட்டுமே. கோடிகளைக் கொட்டி, படம் எடுக்கும்போது, பலருக்குப் பதில் சொல்ல வேண்டிய நிலை உருவாகிறது. முடிந்த அளவு சிக்கனமாகவும் நேர்த்தியாகவும் செயல்படும்போது, நம்முடைய சினிமாவிடம் மட்டுமே பேசினால் போதும். பின்னர் நம் சினிமா சமூகத்திடம் பேசிக்கொள்ளும்.

சென்னையில் அலுவலகம் இல்லாத ஒரு சினிமா குழுவினரைப் பார்க்க வேண்டும் என்றால், பாலை குழுவினர் மட்டுமே உங்களுக்குக் காட்சியளிப்பார்கள். இப்போதுதான் தங்கும் வசதிக்காகவும், வேறு சில தொழில் காரணங்களுக்காகவும் அலுவலகம் பார்க்கும் திட்டமே உருவாகியுள்ளது.

’தொழில்நுட்ப நேர்த்தியுடன் தயாரிக்கப்பட்ட சினிமா என்றும் நேர்மையான சினிமா’ என்றும் இயக்குனர் பாலுமகேந்திரா, இயக்குனர் தங்கர்பச்சன் உள்ளிட்ட பலர் பாராட்டியுள்ளார்கள். நேற்று கூட திரு.தமிழருவி மணியன் படம் பார்த்துவிட்டு, ‘பாலையில் அற்புதம் நிகழ்த்தப்பட்டுள்ளது செந்தமிழன்’ என்றார். இவை அனைத்துக்கும் திரைப்படம் மீது எங்கள் குழுவினருக்கு உள்ள காதல் மட்டுமே காரணம்.

இந்தப் படத்துக்காக தனது பல ஆண்டுகள் அனுபவம் மிக்க பத்திரிகைப் பணியை, குமுதம் இதழ் பணியை, விட்டு விலகினார் துணை இயக்குனர் வெற்றிவேல். மேலும் பலர் தம் வேலைகளை உதறினர். அந்தப் பட்டியல் பெரிது. இன்றும் நாங்கள் அதே உறுதியுடன் நிற்கிறோம்.

திரையரங்குகளில் இடம் மறுக்கப்பட்ட பின்னரும் நாங்கள் ஓயவில்லை. குறுவட்டுகளை வெளியிட்டோம். ஆயிரக் கணக்கில் விற்கின்றன. இதோ இப்போது அடுத்த கட்டமாக தர மேம்பாடு செய்யப்பட்ட குறுவட்டுகளை, பாலையின் தயாரிப்புக் காட்சிகள் அடங்கிய ஆவணப் படம் ஒன்றுடன் சேர்த்து வெளியிட உள்ளோம்.
இந்த விற்பனையின் வருவாயின் ஒரு பங்கைத்தான், சறுக்கல் பாறை தொல் தமிழர்களுக்கான கிராமம் உருவாக்கப் பயன்படுத்துகிறோம்.

ஒவ்வொரு கதவு மூடப்பட்ட போதும் பல கதவுகள் திறக்கப்படுகின்றன என்ற நம்பிக்கையை முழுமையாகக் கடைபிடிக்கிறோம். அடுத்த படமும் இதே நேர்மையுடன் நேர்த்தியுடன் உருவாகி வருகிறது. ஆனால், இந்த முறை ஒரு வசதி என்னவென்றால், இது முழு நீள நகைச்சுவைப் படம். அதுவும் அடர்ந்த வனப் பகுதியில் பெரும்பகுதி காட்சிகள். ஆதலால், கிளையில்லா மரத்தின் உச்சியில் ஏறி, top angle வைத்தாலும் சிரிப்புக்குப் பஞ்சமிருக்காது.

**************

பாலை முதுவனான பல்கலைக்கழகப் பேராசிரியர்!

 10 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சம்பவங்களை மீண்டும் நினைத்துப் பார்க்கும் போதே சில நினைவுகள் நமக்கு எல்லையில்லா மகிழ்ச்சியை ஏற்படுத்திவிடும். வரலாற்று இதிகாசங்களையும்,புதினங்களும் வெகுஜனத்தை ஈர்ப்பதே இதற்கு சரியான உதாரணமாகும்.

சில வருடங்களின் நினைவுகளே தமிழர் நெஞ்சங்களை எளிதில் கவர்ந்து விடும் நிலையில் ஏறத்தாழ 2300 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த தமிழர்களின் நாகரிகம்,வாழ்க்கைத் தரம் மற்றும் அவர்களின் பிரச்சினைகளை கண் முன்னால் தத்ரூபமாக நிறுத்தினால் அதற்கான வரவேற்பும் சற்று கூடுதலாகவே இருக்கும்.

வழக்கமாக பழைய கால வரலாறு என்றால் பேரரசர்களின் வாழ்க்கையை மட்டுமே திரையில் காட்டிய தமிழ் திரைப்பட வரலாற்றில் முதன்முறையாக பொதுமக்களின் வாழ்ககையை பதிவு செய்யும் திரைப்படமாக ‘பாலை’ என்ற திரைப்படம் வெளியாகியுள்ளது.

இத் திரைப்படத்தின் முக்கிய கதாபாத்திரமான பாலை முதுவனாக பெரியார் பல்கலைக்கழக இதழியல்துறை பேராசிரியர் வை.நடராஜன் நடித்துள்ளார்.

பல்கலைக்கழகப் பேராசிரியர் பாலை முதுவனாக ஆக மாறிய கதை மேலும் சுவாரஸ்யமானது.

படத்தின் இயக்குநர் மா.செந்தமிழனின் மனைவி கே.காந்திமதி பேராசிரியர் நடராஜன் திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைகழகத்தில் பணியாற்றிய போது அவரிடம் பயின்ற மாணவியாவார். பாலை திரைப்படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் புதிதாக ஒருவர் நடித்தால் தான் அதன் ஆளுமையை ரசிகர்கள் எளிதில் புரிந்து கொள்வார்கள் என நினைத்த  இயக்குர் செந்தமிழன் அதற்கேற்ற நடிகரை பல இடங்களிலும் தேடியுள்ளார்.

இரண்டு மாத தேடலுக்கு பின்னர் மனைவி காந்திமதி சொன்ன யோசனையின் பேரில் பேராசிரியர் நடராஜனை இயக்குநர் அணுகியுள்ளார். இதனையடுத்து கொச்சி அருகேயுள்ள அதரப்பள்ளியில் நடத்தப்பட்ட போட்டோ
ஷூட்-ல் நடராஜன் பங்கேற்றுள்ளார்.

கதாபாத்திரத்திற்கேற்ற உயரம்,ஆளுமைத் திறன் நிறைந்த பார்வை ஆகியவற்றின் மூலம் உடனடியாக அவர் தேர்வாகி விட்டார்.

படத்தில் நடித்த அனுபவம் குறித்த பேராசிரியர் வை.நடராஜன் கூறியது:
“2300 ஆண்டுகளுக்கு முன்னர் இருந்த தமிழர் வாழ்க்கையை விவரிக்கும் வகையில் பாலை திரைப்படம் அமைந்ததுள்ளது.ஆயக்குடி,முல்லைக்குடி என்ற இரண்டு இனக்குழுக்களுக்கு இடையிலான மோதல்,அதனால் ஏற்படும் விளைவுகள்தான் படத்தில் காட்சிகளாக உருவாக்கப் பட்டுள்ளது.இதில் முல்லைக்குடியின் கணியான் (பருவநிலைகளை கணித்து கூறுபவர்) பாத்திரத்தில் நான் நடித்துள்ளேன்.

பாலை பருவத்தை ஏற்கனவே பார்த்தவன் என்பதால் பாலை முதுவன் என்று அந்த கதாபாத்திரம் அழைக்கப்படும்.என்னுடைய மாணவியின் கணவர் என்ற முறையில் செந்தமிழன் எனக்கு ஏற்கனவே அறிமுகமானவர்தான்.ஆனால் அவர் திடீரென திரைப்படத்தில் நடிக்க கேட்டது ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.அடுத்த ஒருசில நிமிடங்களில் நடிப்பதற்கு நான் சம்மதம் கூறினாலும்,இதற்காக பல்கலைக்கழகத்தில் முறையான ஒப்புதல் பெற்ற பின்னரே நடிப்பதற்கு சென்றேன்.

படப்பிடிப்பு முழுவதும் தஞ்சாவூர் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் நடைபெற்றது.நாற்பது நாள் நடந்த படிப்பிடிப்பில் பெரும்பாலும் வார விடுமுறை நாள்களில் கலந்து கொண்டேன். படப்பிடிப்பில் என்னுடைய மனைவியுடன் சென்று கொண்டேன். வெயிலுக்கு குடைபிடித்தது உள்பட பல்வேறு வகைகளில் என்னுடைய மனைவி லதா உதவியாக இருந்தார்.

பல்கலைக்கழகத்தில் இதழியல் மற்றும் காட்சித் தொடர்பியல் குறித்த பாடங்களை தியரியாக நாங்கள் சொல்லிக்கொடுக்கிறோம்.தியரியாக சொல்லிக்கொடுத்த பாடங்களுக்கும்,அதை பிராக்டிகல்லாக படப்பிடிப்புத் தளத்தில் பார்ப்பதற்கும் நிறைய வித்தியாசம் உள்ளது.எனினும் ஸ்டில் கேமரா மூலமாகவே படம் எடுக்கப்பட்டதால் பெரிய அளவில் மாறுபட்ட உணர்வு ஏற்படவில்லை.

படத்தில் நடித்ததற்காக சம்பளமாக எதையும் நான் பெற்றுக் கொள்ளவில்லை. எனினும் சங்க காலத்தில் மழை வருவதை உரிய அறிகுறிகள் மூலம் தெரிந்து கொண்டது,போர் தந்திரங்கள்,போரின் போது புகையை எழுப்பி அதன் வாயிலாக தாக்குதலை தொடர்வது போன்ற பண்டைய தமிழரின் வாழக்கையை அறிந்து கொண்டது,தியரியான விஷயங்களை பிராக்டிகலாகப்  பார்த்தது மிகுந்த மகிழ்ச்சிக்குரியதாக இருந்தது” என்று தனது பாலை அனுபவங்களை பேராசிரியர் நடராஜன் நம்மிடம் பகிர்ந்து கொண்டார்.

**********

இப்படியொரு திரைப்படத்தை இயக்கவில்லையே…. பாலுமகேந்திரா

2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழ்நாட்டு வரலாற்றை சித்தரிக்கும் “பாலை” திரைப்படம் நவம்பர் 25 அன்று தமிழகம் முழுவதும் வெளியாகின்றது. இதுவரை மன்னர்களின் வரலாறே தமிழ்நாட்டின் வரலாறு என்றிருந்த தமிழ்த் திரையுலகின் மரபுகளை உடைத்தெறிந்து, முதன் முறையாக 2000ஆண்டுகளுக்கு முந்தைய எளிய தமிழ் மக்களின் வாழ்வியலைப் பற்றி சித்தரிப்பதாக இத்திரைப்படம் அமைந்துள்ளது.

இத்திரைப்படத்தை தமிழ் உணர்வாளரும், ஆய்வாளருமான திரு. ம.செந்தமிழன் இயக்கியுள்ளார். அதோடு படத்தின் பாடல்களையும் அவரே எழுதியுள்ளார். சங்க இலக்கியங்களில் உள்ள குறிப்புகளை சுமார் 6 ஆண்டுகள் ஆய்வு செய்து இத்திரைப்படத்தின் கருவை உருவாக்கியுள்ளதாக அவர் கூறுகிறார். ஏ.ஆர்.ரகுமானிடம் இசைப் பயின்ற திரு. வேத் ஷங்கர், இசையமத்துள்ள படத்தின் பாடல்கள் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன.

தேசிய விருது பெற்ற “போஸ்ட் மேன்” குறும்படத்தின் ஒளிப்பதிவாளரான திரு அபிநந்தன் இராமனுஜம் இப்படத்தின் ஒளிப்பதிவாளர். இவர் எல்.ஜி.பிரசாத் திரைப்பள்ளியின் மாணவர். படத்தொகுப்பாளர் திரு. ரிச்சர்ட் சென்னை திரைப்படப் பள்ளியின் முன்னாள் மாணவராவார். இவர் தொகுத்த பல படங்கள் கோவா திரைப்பட விழாவில் திரையிடப்பட்டுள்ளன.

தஞ்சை, புதுக்கோட்டை சுற்றியுள்ள பல்வேறு இடங்களில் இப்படத்தின் படப்பிடிப்பு நடத்தப்பட்டது. பழங்குடித் தமிழர்களான இருளர்கள், பூம்பூம் மாட்டுக்காரர்கள் பலர் இத்திரைப்படத்தில் முதல் முறையாக திரையில் அவர்களாகவே தோன்றுகின்றனர். படத்தின் கதாநாயகன் சுனில் மற்றும் கதாநாயகி ஷம்மு ஆகியோர் தம் பாத்திரத்தை சிறப்புறச் செய்திருகின்றனர்.

இவ்விருவரைத் தவிர்த்து, படத்தில் நடிக்கும் அனைவரும் திரையுலகம் சாராத நபர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. திரு. நாகை தி.இரவி படத்தை தயாரித்துள்ளார்.கடந்த மாதம் முக்கியப் பிரமுகர்களுக்காக திரையிடப்பட்ட படத்தின் விசேஷ காட்சியைக் கண்ட தமிழ்த் திரையுலகின் முக்கிய இயக்குநர்களான திரு. தங்கர் பச்சான், திரு. வெற்றிமாறன் ஆகியோர் படத்தை வெகுவாகப் பாராட்டினர். தமிழறிஞர் மா.பொ.சி.யின் பெயர்த்தி திருமதி. பரமேஸ்வரி, எழுத்தாளர் யுவபாரதி, பத்திரிக்கையாளர் பாரதி தம்பி உள்ளிட்ட திரளான தமிழ் உணர்வாளர்களும், எழுத்தாளர்களும், ஊடகவியலாளர்களும் இந்நிகழ்வில் கலந்து கொண்டு திரைப்படத்தையும், படக்குழுவினரையும் பாராட்டினர்.

இயக்குநர் பாலு மகேந்திரா படக்குழுவினரை நேரில் தம் இல்லத்திற்கு அழைத்து அவர்களது முயற்சியை பாராட்டினார். தமது 45 ஆண்டுகால திரையுலக வாழ்க்கையில் இப்படியொரு திரைப்படத்தை இயக்கவில்லையே என்றும், இப்படம் உலக வரலாற்றுத் திரைப்படங்களின் வரிசையில் முக்கியப் படமாக அமையும் என்றும் அவர் படக்குழுவினரிடம் தெரிவித்தார்.

சென்னை சாந்தி திரையங்கு உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு நகரங்களிலும் நவம்பர் 25 அன்று இத்திரைப்படம் வெளியாகிறது. தமிழ் மக்களின் வரலாற்றைப் பிரதிபலிக்கும் இத்திரைப்படம் குறித்து, தமிழ் உணர்வாளர்கள் மத்தியில் பெருத்த எதிர்பார்ப்பு நிலவுகின்றது.

*********

 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s