பிரான்ஸில் சிங்கள கைக்கூலிகள் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி தளபதி பரிதி வீரச்சாவு

தளபதி பரிதி இன்று பிரான்ஸில் இனந்தெரியாதோர் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி வீரச்சாவடைந்துள்ளார். பரிதி என்றழைக்கப்படும் நடராசா மதீந்தரன் என்ற இயற்பெயரைக் கொண்டவரே இவ்வாறு வீரச்சாவடைந்துள்ளார்.

தமிழீழ விடுதலைப்புலிகளின் மூத்த தளபதிகளில் ஒருவரும், பிரான்ஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு பொறுப்பாளருமான பரிதி அவர்கள் சிறீலங்கா புலனாய்வுத் துறையினரின் நயவஞ்சக துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி வீரச்சாவடைந்துள்ளார்.

சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற பாரிஸ் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்,

கடந்த வருடமும் இதே காலப்பகுதியிலேயே பரிதி பிரான்சில் வைத்து இவ்வாறு இனந்தெரியாத நயவஞ்சகரினால் கத்திக் குத்துக்குள்ளானார்.

இரவுவேளை இவர் அலுவலகத்தில் இருந்து வெளியே வந்தபோது அங்கே காத்திருந்த சிலர் இவரை கத்தியால் வெட்டியும் குத்தியும் உள்ளனர். மிகவும் ஆபத்தான நிலையில் அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்ததும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இன்றும் இரவுவேளை அனுவலகத்தில் இருந்து வெளியேவந்தபோது நயவஞ்சகரினால் சூட்டுக்குள்ளாகி வீரச்சாவடைந்துள்ளார்.

எனவே அன்றும் இன்றும் இவரை இலக்கு வைத்து தாக்கியவர்கள் ஒரு குழுக்கள் தான் என அறியமுடிகின்றது.

மாவீரர் நாள் நெருங்கிவரும் இவ்வேளையில் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் பொறுப்பாளர் வீரச்சாவடைந்தமை ஈழத் தமிழர் மத்தியில் பேரிழப்பு ஆகும்.

*********

நிலத்திலும் புலத்திலும் போராடிய புலிவீரன் மாவீரர் பரிதி அவர்களுக்கு டென்மார்க் வாழ் தமிழ் மக்களின் வீரவணக்கம் .

தமிழீழ விடுதலைப் புலிகளின் முகமாக 25 வருடங்களுக்கும் மேலாக மக்களோடு மக்களாய் நின்று நிலத்திலும் புலத்திலும் களமாடிய மாவீரர் பரிதி சிறீலங்கா அரசின் புலனாய்வுத்துறையின் நயவஞ்சகச் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி இன்று மாலை வீரமரணம் தழுவிக் கொண்டார் .

முள்ளிவாய்க்காலில் தமிழினம் முடிந்தது என்று கங்கணம் கட்டிய சிங்களத்துக்கு புலம்பெயர் நாட்டில் பொங்கி எழுந்த இனமான ஈழத்தமிழர்களின் முகமாக விளங்கியவர் தான் மாவீரர் பரிதி .

தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் தூணாக துணிவுடன் சிறை சென்றும் விடுதலையை மூச்சாக கொண்டு அயராது போராடிவர் தான் மாவீரர் பரிதி .சிங்கள அரசின் கைக்கூலிகள் பலதடவை மாவீரர் பரிதியை கொல்வதற்கு முயற்சித்து வந்தது அனைவரும் அறிந்தவிடயம் . அவ் வகையில் இன்று மாவீரர் பரிதி அவர்கள் சிறீலங்கா அரசின் புலனாய்வுத்துறையின் திட்டமிட்ட நயவஞ்சகச் செயலால் வீரமரணம் அடைந்ததை அறிந்து எமது வீரவணக்கத்தை தெரிவித்துக் கொள்கின்றோம்.

எமது மக்கள் சிங்கள இனவாத அரக்கர்களால் கொன்று குவிக்கப்படும்போது , முழு உலகமுமே கவலை கொள்ளலாம் கண்டனங்கள் தெரிவிக்கலாம் , கண்ணீர் வடிக்கலாம் .ஆயினும் , எமது மக்களைப் பாதுகாத்து அவர்களது விடுதலையை வென்றெடுக்கும் மாபெரும் பொறுப்பு , விடுதலைப் போராளிகளாகிய எம்முடையது எனும் தேசியத் தலைவரின் கட்டளைக்கு செயல்வடிவம் கொடுத்த மாவீரன் பரிதியின் நினைவுகள் அணையாச் சுடராக, விடுதலைத் தீயாக தொடரும் எமது விடுதலைப் போராட்டத்திற்கு வலுச்சேர்க்கும் என்பது நிச்சயம் .

மாவீரர் பரிதி அவர்களை இழந்து நிற்கும் அவர் குடும்பத்தினர்க்கு எமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றோம் .

தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்

****

தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த தளபதியும் மற்றும் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு பிரான்ஸ் கிளையின் பொறுப்பாளருமான தளபதி பரிதி (நடராஜா மதீந்திரன்) அவர்கள் 08.11.2012 பிரான்ஸ் தலைநகரில் வீரச்சாவைத் தழுவிக்கொண்டார்.

தளபதி பரிதி அவர்கள் தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களின் வழிகாட்டலில் தன்னை முழுமையாக இணைத்துக்கொண்டு தாயகத்திலும் புலம்பெயர் தேசத்திலும் செயற்பட்ட ஒரு மூத்த தளபதி ஆவார். தமிழீழம் நோக்கியதான போhராட்ட வடிவம் மாறிய போதிலும் தன்னை அதற்கமைய மாற்றி புலம்பெயர் தமிழருடன் இணைந்து பல இடர்களுக்கு மத்தியிலும் செயற்பட்டு வந்தார். மேலும் தமிழீழத் தேசியத் தலைவரின் சிந்தனைக்கு இணங்க தமிழீழம் நோக்கிய பாதையில் இளையோரின் பங்கு இன்றியமையாத ஒன்று என்பதை நன்கு அறிந்து பணியாற்றியவர்.

கடந்த சில வருடங்களாக புலம்பெயர் தேசத்தில் தமிழ்த் தேசிய பணிச்செயற்பாட்டாளர்களை அழிப்பதற்கான நடவடிக்கையை இலங்கை அரசு முன்னெடுத்து வருகிறது. அதன் முதற்கட்டமாக சுமார் ஒரு வருடத்துக்கு முன்னர் தளபதி பரிதி அவர்கள் மேல் நடாத்திய கொலைமுயற்சி இங்கு குறிப்பிடதக்கது. அதன் பின்னரும் அஞ்சாது தனது தாயகப்பணியைத் தொடர்ந்து வந்த தளபதி பரிதி அவர்கள் 08.11.2012 அன்று சிங்கள இனவாதக் காடையர்களால் படுகொலை செய்யப்பட்டார்.

தமிழரின் இறுதியும் அறுதியுமான முடிவாம் தமிழீழம் எனும் இலக்கை நோக்கி பயணிக்கும் பாதையில் வழிமாறாது ஒன்றிணைந்து பயணிப்பது காலத்தின் தேவையாகும். எமது போராட்டமானது புலம்பெயர் தேசத்தில் தமிழின உணர்வாளர்களால் அமைதியான மற்றும் சனநாயக முறையில் முன்னெடுக்கப்படும் இக்காலத்தில் இலங்கை அரசின் இவ் எல்லை மீறிய படுகொலையை தமிழ் இளையோர் அமைப்பாகிய நாங்கள் கண்டிப்பதுடன் இக்கொலைக்கான நீதியை சர்வதேசத்தின் முன் கோரி நிற்போம்.

One thought on “பிரான்ஸில் சிங்கள கைக்கூலிகள் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி தளபதி பரிதி வீரச்சாவு

Comments are closed.