தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் 6 ம் ஆண்டு நினைவில்

தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் 6 ம் ஆண்டு நினைவில்

தேசத்தின் குரல் தமிழீழ தேசத்திற்கே இட்டுநிரப்பமுடியாத பேரிழப்பு –  தேசியத் தலைவரின் அறிக்கை


தலைமைச்செயலகம்,
தமிழீழ விடுதலைப் புலிகள்,
தமிழீழம்
2006-12-14

எமது சுதந்திர இயக்கத்தின் அரசியல் இராஜதந்திர நகர்வுகளில் எனக்குப் பக்கபலமாக இருந்து செயற்பட்ட எமது தேசத்தின் ஒளிவிளக்கு இன்று அணைந்துவிட்டது. ஆலோசனை வேண்டி, ஆறுதல் தேடி ஓடுவதற்கு பாலாண்ணை இன்று என்னுடன் இல்லை. இவரது மறைவு எனக்கு மாத்திரமல்ல தமிழீழ தேசத்திற்கே இட்டுநிரப்பமுடியாத பேரிழப்பு.

பிறப்பிற்கும் இறப்பிற்கும் இடையே விரியும் காலமாக மனிதவாழ்வு நிலைக்கிறது. இந்த வாழ்வுக்காலம் எல்லா மனிதர்களுக்கும் ஒரேமாதிரியாக, ஒத்ததாக, ஒருசீராக அமைவதில்லை. காலச்சீரற்றதாக ஒருவருக்குக் கூடி, மற்றவருக்குக் குறுகி, இன்னொருவருக்கு அதிகம் நெடுத்து கூடிக்குறைந்து செல்கிறது. துரதிஸ்டவசமாக, பாலாண்ணையினது வாழ்வு இடைநடுவில் நின்றுபோய்விட்டது. தீவிரம்பெற்றுள்ள எமது விடுதலைப்போருக்கு அவர் நிறையப் பணிகளை ஆற்றவேண்டியிருக்கின்ற தருணத்தில் அவருக்கு மரணம் சம்பவித்திருக்கிறது. இதனை என்னால் ஏற்றுக்கொள்ளமுடியவில்லை. துயரத்தின் சுமை என் ஆன்மாவை அழுத்துகிறது. என் உள்ளத்தை உடைத்து, நெஞ்சத்தைப் பிளக்கிறது. கட்டுக்கடங்காத காட்டாறு போல சீறிப்பாயும் உணர்ச்சிப் பெருவெள்ளத்தை என்னால் வார்த்தைகளால் கொட்டமுடியாது. மனித மொழியில் இதற்கு இடமுமில்லை.

பழக ஆரம்பித்த நாள் முதலே எமக்கிடையே ஒரு இனம்புரியாத புரிந்துணர்வு ஏற்பட்டது. அந்தப் புரிந்துணர்வால் எழும் பற்றுறவால் பிணைந்துகொண்டு, எமது உறவு நல்லுறவாக வளர்ந்து நட்புறவாகப் பரிணமித்தது. சிந்தனையாலும் செயலாலும் ஒன்றுபட்ட மனிதர்களின் சங்கமமாக அந்த உறவு மலர்ந்தது. தினம்தினம் நாம் பகிர்ந்துகொண்ட வாழ்பனுபவத்தில் வலிமைபெற்று வளர்ந்தது. சாதாரண மனித உறவுகளிலிருந்து இது முற்றிலும் வேறுபட்டது. காலத்தால் கனிந்து, வரலாற்றால் வடிவம் பெற்ற ஒரு அலாதியான இலட்சிய உறவு அது.

பாலாண்ணையை நான் ஆழமாக நேசித்தேன். விடுதலை இயக்கம் என்ற மாபெரும் குடும்பத்தில் ஒரு மூத்த தலைமகனாக பிதாமகனாக மூன்று தசாப்தங்கள் வாழ்ந்தவர் அவர். நானும் அவரை அப்படித்தான் நோக்கினேன். ஒரு குடும்பமாக ஒன்றுசேர்ந்து ஒத்திசைவாக ஒன்றித்திருந்த நாட்களில் அவர் ஒரு சாதாரண மனிதப்பிறவி அல்ல என்பதைக் கண்டுகொண்டேன். மோசமாகச் சுகவீனமுற்று தினம்தினம் சாவோடு போராடியபோதும், தாங்கமுடியாத உடல்உபாதைகளால் வருந்தியபோதும், தளர்ந்துபோகாத உறுதிப்பாடு அவரிடம் இருந்தது. அவரின் இந்த இலட்சிய உறுதி எனது நெஞ்சத்தைத் தொட்டுநின்றது. அவர் துன்பத்தால் துவண்டபோதெல்லாம் எனது ஆன்மாவும் கலங்கியழுதது.

எமது இயக்கத்தின் வளர்ச்சியிலும் அதன் இன்றைய விரிவாக்கத்திலும் பாலாண்ணைக்கு ஒரு நிரந்தரமான இடம் இருக்கிறது. ஒரு மூத்த அரசியல் போராளியாக, ஒரு மதியுரைஞராக, ஒரு தத்துவாசிரியராக எல்லாவற்றுக்கும் மேலாக எனது உற்ற நண்பனாக இருந்து எனக்கு ஊக்கமும் உத்வேகமும் அளித்தவர். ஆலோசனையும் ஆறுதலும் தந்தவர். எனது உணர்வுகளைப் பகிர்ந்துகொண்டு, எனது பழுக்களையும் பங்கிட்டுக்கொண்டவர். எமது விடுதலை இயக்கம் தோற்றம்பெற்ற ஆரம்பகாலம் முதல் என்னோடு இருந்து, எல்லாச் சோதனைகளையும் வேதனைகளையும் சவால்களையும் சங்கடங்களையும் தாங்கிக்கொண்டவர். எமது அரசியல் இராஜதந்திர முன்னெடுப்புக்களுக்கு மூலாதாரமாக, முன்னால் நின்று செயற்பட்டவர்.

ஈழத்தமிழினம் பெருமைகொள்ளும் வகையில் அரசியல் உலகிலும் இராஜதந்திர உலகிலும் அளப்பெரும் சாதனைகள் புரிந்து, எமது தேசசுதந்திரப் போராட்டத்தை உலக அரங்கில் முன்னிறுத்திய பாலாண்ணையின் மாபெரும் போராட்டப்பணிக்கு மதிப்பளித்து தேசத்தின் குரல் என்ற மாபெரும் கௌரவப்பட்டத்தை அவருக்கு வழங்குவதில் நான் பெருமையடைகிறேன். பாலாண்ணை உண்மையில் எம்மைவிட்டுப் போகவில்லை. அவர் எமது நினைவலைகளில் என்றும் நீங்காத நினைவுகளாக நிலைத்து நிற்பார்.

புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்

வே. பிரபாகரன்
தலைவர்
தமிழீழ விடுதலைப் புலிகள்

***
Pictures-தேசத்தின் குரல்/anton balasingam

****

வீரவரலாறு காணொளி

  1. மரணத்தின் பின்பும் வாழும் தேசத்தின் குரல்
  2.  வரலாற்றினுள் வெடித்தெழுந்தவர் அன்ரன் பாலசிங்கம்
  3. என்றும் ஒளி வீசும் தத்துவ விளக்கு! வழிகாட்டிய விழிச்சுடர் அன்ரன் பாலசிங்கம்!
  4. “தேசியத்தின் குரல்” கலாநிதி அன்டன் பாலசிங்கம் 4ம் ஆண்டு வீரவணக்கம்
  5. சபைகளை வென்ற சாணக்கியன் தேசத்தின் குரல் -புதுவையின் குரலில்
  6. இன்றைய தருணத்தில் தேவைப்படுகின்ற ‘தேசத்தின் குரல்’
  7. தேசத்தின் குரலுக்கு வீர வணக்கம்

—————————————————-

 Dr. Balasingham Last Speech at Alexandra Palace London

 

பாலா அண்ணா!

மூன்று தசாப்தங்களாக எங்களின் இலக்குக்கும் சர்வதேச செல்நெறிக்கும் இடையேயான இடைவெளியில் போர்புரிந்த போர் வீரன் பாலா அண்ணா போய்விட்டார்!

தமிழீழ விடுதலைப் போரின் மொழிக்கும் – சர்வதேச உறவாடலுக்கும் வடிவம் கொடுத்த தேசியதலைவர் பிரபாகரனின் மூத்த தோழன் பாலா அண்ணாவை சாவு பிரித்துவிட்டது!

தன்னுடலால் அழிந்து – அழியாத தமிழீழ விடுதலை வரலாற்றில் பாலா அண்ணா இடம்பிடித்துவிட்டார்.

சாவும் – இழப்பும் தமிழீழ மக்களின் சமகால வரலாற்றில் செறிவான தினசரி நிகழ்வாகியுள்ள போதும் இந்த மனிதரின் சாவு இதயத்தினுள் ஒரு இடைவெளியினை ஏற்படுத்துகின்றது.

மூன்று தசாப்தங்களாக எங்கள் தேசிய விடுதலை இலட்சியத்திற்கு உழைத்தவர்!
மூன்று தசாப்தங்களாக எங்கள் தேசியத்தின் குரலாகப் பேசியவர்!
மூன்று தசாப்தங்களாக எங்கள் தலைவரின் சகாவாக வாழ்ந்தவர்!
மூன்று தசாப்தங்களாக எங்களின் இலக்குக்கும் சர்வதேச செல்நெறிக்கும் இடையேயான இடைவெளியில் போர்புரிந்தவர்!
மூன்று தசாப்தங்களாக எழுத்தால் எங்களை புதுப்பித்தவர்!
மூன்று தசாப்தங்களாக பேச்சால் எங்களை உயிர்ப்பித்தவர்!

இந்தகைய மூன்று தாசாப்த சரித்திரத்தின் வரலாற்றுப் பாத்திரத்தை எங்களிமிருந்து இயற்கை பறித்த உண்மையை ஏற்றுக் கொள்ள இதயம் தயங்குகின்றது.

தமிழர் விடுதலைப் போரிற்கு பாலா அண்ணரின் பங்களிப்பு என்ன என்ற கேள்வி அர்த்தமற்றது. ஏனெனில் அவர் விடுதலைப் போரிற்குள் முழுமையாக வாழந்தவர் என்பதில் அனைத்துமே அடங்கிவிடுகின்றது. ஆனாலும்;, பாலா அண்ணா என்றால் அவரது ஆழமான எழுத்தும் – நிறைவான பேச்சுமே எங்கள் நினைவில் பதிவாகியுள்ளது.

தமிழர் விடுதலை இயக்கத்தின் தத்துவப் பேராசானாக அனைவராலும் அவர் மதிக்கப்பட்டார். தமிழீழ தேசிய விடுதலை தொடர்பாக 1970களில் எழுத ஆரம்பித்தார். தேசிய சுயநிர்ணய உரிமை தொடர்பான அனைத்துலக விவாதப் தேடலுக்குள் தமிழீழ விடுதலையின் நியாயங்களை இணைத்து விவாதித்தார். தமிழீழ விடுதலைப் போரின் நியாயங்களுக்குள் நிலவிய உலக முற்போக்கு விசையின் கூறுகளை எடுத்து விளக்கினார் சிங்கள அடக்குமுறையினுள் பொதிந்து கிடந்த வெறுக்கத்தக்க பெருந்தேசியவாத இருளை சுட்டிக்காட்டினார்.

தனது இயல்பான – செழுமையான அரசியல் மொழியூடாக போராளிகளையும், மக்களையும் தேசத்தையும் அரசியல் வழியில் பயிற்றுவித்தார். தேசிய மாவீரர் நாளில் தேசிய தலைவர் ஆற்றும் உரையின் விரிவாக்கவுரையை சுமார் 5 வருடங்களாக தொடர்ந்து இலண்டனில் மேற்கொண்ட போது மற்றுமொரு புதிய தளத்திற்கு புலிகள் இயக்கத்தின் புலத்து அரசியல் தொடர்பாடலை நகர்த்தினாhர்.

விடுதலைப் போராட்ட அரசியலும், சர்வதேச இராஐதந்திரத்திற்கும் இடையேயுள்ள இடைவெளியினை அளந்து – அளந்து கடந்து செல்ல பாலா அண்ணா கடுமையாக உழைத்தார்.

அமெரிக்க வெளிவிவகார பிரதியமைச்சர் றிச்சட் ஆமிர்ரெஐ;, பிரித்தானிய சர்வதேச உதவிகளுக்கான அமைச்சர் உட்பட பலர் முன்னே நோர்வே ஒஸ்லோ கொடைவழங்கும் நாடுகளுக்கான சிறப்பு மாநாட்டில் பாலா அண்ணாவின் இந்த சூட்சுமத்தின் அளவீடு வெளிப்படையாவே இருந்தது. சிங்களம் எங்களுக்கு ஏற்படுத்திய பேரழிவை அவர் பட்டியலிட்டு, விடுதலைப் போரின் நியாயங்களையும், தர்க்க விளக்கங்களையும் இராஐதந்திர வரம்புகளை மீறாது பாலா அண்ணா வெளிப்படுத்திய போது அது வரலாற்றில் எமக்கான குரலாகவும் – மைல்கல்லாக அமைந்தது.

பாலா அண்ணாவின் பயணத்தில் எதிர்ப்பட்ட முக்கிய பதிவுகள் தமிழீழ விடுதலையின் முக்கிய பதிவுகளாகவும் உள்ளன.

திம்புவில் இந்தியா தனது நலன்களை மட்டும் பேச முயன்ற போது எதிர்த்து நின்று தமிழீழ மக்களின் நியாயத்தினைப் பேசிய குற்றத்திற்காகப் புலிகளை தண்டிக்க விரும்பிய இந்திய மத்தியஅரசு 1985ல் பாலா அண்ணரை நாடு கடத்தியது.

இந்தியா இராணுவத்தின் கோரப் பிடியில் தமிழீழ தேசம் தள்ளாடிய போது சிறீலங்காவுடன் புலிகள் மேற்கொண்ட சாதுரியமான இராஐதந்திர ஆட்டத்தினை நேர்த்தியாக முன்னெடுத்து – 1990ல் இந்தியாவினை நேரடியான இராணுவ முரண்பாட்டிலிருந்து விலக்கிய நுட்பமான நடவடிக்கையிலும் பாலா அண்ணார் இருந்தார்.

பின்னர் சந்திரிகா அம்மையார் சர்வதேச சக்திகளின் ஆதரவுடன் நடாத்திய போர் தோற்ற போது, தமிழர்கள் ஈட்டிய வெற்றியிலிருந்து அதே சர்வதேச சக்திகளுடனான தொடர்பாடலை பாலா அண்ணா 2002 முதல் மேற்கொண்டார். கட்டுப்பாட்டுப் பகுதிகளை ஏற்றுக்கொள்ளும் சர்வதேச ஏற்றுக்கொள்கையுடன் கூடிய போர்நிறுத்த உடன்பாட்டினை புலிகள் தரப்பில் நின்று வரைவதில் பாலா அண்ணாவின் பங்கே முக்கியமாகவிருந்தது இருந்தது என முன்னாள் சனதிபதி சந்திரிகா முதல் விமல்வீரவம்ச வரை குத்திமுழங்கும் போது பாலா அண்ணரின் இயல்பான நக்கல் சிரிப்பில் ஒரு வியூக சிந்தனை இருந்தது.

பாலா அண்ணா வெறுமனே அரசியல் சிந்தனைகளை மட்டும் கொண்ட விடுதலைப் போரளியல்ல. அவர் மனித வாழ்வின் பல்வேறு வி;டயங்களையும் அலசிப் பேசும் அலாதியான சிந்தனையாளன். இந்திய சிந்தனையாளர் கிருஸ்ணமூர்த்தி தொட்டு பலவித வாழ்வியல் சிந்தனையாளர்களைப் பற்றிப் பேசினார் – எழுதினார். சிறந்த இலக்கியங்களைப் வாசித்தார் – விவாதித்தார். கவிதைகளை இரசித்தார். நிறைய புதியபுதிய எழுத்துக்களை வாசித்து காலத்துடன் தன்னைப் புதுப்பித்து – நடைபயில வைத்தார்.

தனக்கு சாவு நிச்சயம் என்பதை உணர்ந்த காலத்தில் கூட அவர் மக்களிற்கு இன்னமும் விடிவு கிட்டவில்லையே என்கின்ற ஏக்கத்துடன்தான் நாள்களை கடத்தினார். இறப்பதற்கு முன்னர் பாலா அண்ணர் தனது மரணத்தை பின்வருமாறு வர்ணித்தார்: ‘’18000 மேற்பட்ட போராளிகளினை சந்திக்கும் பயணத்தில் உள்ளேன்’’

இன்று எங்கள் மாவீரர்கள் பாலா அண்ணரை ஆரத்தழுவி வரவேற்று அவரது சிந்தனை அனுபவங்களை அவருக்கேயுரிய செழுமையான மொழியில் கேட்கையில் நாங்கள் அவரது மரணம் தந்த துன்பத்தினுள் வெறுமையாகி நிற்கின்றோம்.

பாலா அண்ணாவின் வாழ்வும் – தேடலும் சத்தியவேட்கை நிரம்பியது. மக்களையும் – மண்ணையும் நேசித்த மனிதனின் தேடலாகவும் வாழ்வாகவும் அது இருந்தது. அந்த மக்களின் வாழ்வை மீட்பதும் வாழ்விப்பதுதே பாலா அண்ணரின் இறுதி நினைவுக்கு நாங்கள் செய்யும் நினைவு வணக்கமாக இருக்கட்டும்.

பாலா அண்ணா! – Nathan, Geneva, 14 December 2006

———————–

தேசத்தின் குரல் இரங்கல் செய்திகள்

2 thoughts on “தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் 6 ம் ஆண்டு நினைவில்

Comments are closed.