வீர முகங்களை அக்கினி ஒளியில் வணங்கித் துதிக்கும் புனித நாள்

“புலம்பெயர்ந்து வாழும் மக்களுக்கும் தாயக மக்களுக்குமிடையிலான உறவுப் பாலத்தை உடைத்து தமிழீழ விடுதலைப் போராட்டத்தை நசுக்கிவிட சிங்களப் பேரினவாதம் முயற்சித்து வருகின்றது” – தேசியத் தலைவரின் 2007ஆம் ஆண்டு மாவீரர் நாள் உரையின் ஒருபகுதி இது.

விண்ணிலும் மண்ணிலும் போராடி கடலிலும் கரையிலும் களமாடி, விளைநிலத்துக்காக வித்தாகிப் போன புனிதர்களை நினைவுகூர்ந்து ஒன்றாக அவர்களுக்கு வணக்கம் செலுத்தும் நாள் நவம்பர் 27.
தமிழீழ விடுதலைக்காக தம்முயிரை அர்ப்பணம் செய்த மாவீரர்களுக்கான உயரிய நாள் இது.

maveerar day 2014
இந்தியப் படைகளின் ஆக்கிரமிப்பில் தமிழீழம் சிக்கியிருந்த வேளையில், உக்கிர போர் நடந்துகொண்டிருந்த போது நவம்பர் 27ஆம் நாள் தேசியத் தலைவரால் மாவீரர்களுக்கான நாள் பிரகடனம் செய்யப்பட்டது.

1989 நவம்பர் 27இல் வன்னியின் அடர்ந்த காடொன்றுக்குள் கந்தகத்தைக் கழுத்தில் சுமந்தவாறு, முதலாவது மாவீரர் நாள் உரையை தேசியத் தலைவர் நிகழ்த்தினார்.
“விடுதலைப் போராட்டத்தில் தலைவர்களை மட்டும் பிரித்து அவர்களது செயற்பாடுகளை மட்டும் பெரிதாகப் பார்க்கக் கூடாது என்பதற்காகவும், சகல போராளிகளும் சமம் என்ற நோக்கத்துடன் இந்த நாளை நாம் தேர்ந்தெடுத்தோம்” என்று தமது முதலாவது மாவீரர் நாள் உரையில் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள் குறிப்பிட்டது வரலாற்று முக்கியத்துவமானது.
முதலாவது மாவீரர் நாள் அன்று பிரகடனப்படுத்தப்பட்டபோது அந்த மறவர்களின் எண்ணிக்கை 1,207 ஆகவே இருந்தது.

முப்பதாண்டு கால வரலாற்றைக் கொண்ட தமிழீழப் போர் முள்ளிவாய்க்காலில் 2009 மே மாதம் மௌனிக்கப்பட்ட வேளையில், நாற்பதாயிரத்துக்கும் அதிகமான போராளிகள் தங்களின் விலைமதிப்பற்ற இன்னுயிரை தமிழீழ மண்ணுக்காக ஈகம் செய்து வீரகாவியம் படைத்துள்ளனர்.

“எங்கள் சுதந்திர இயக்கத்தின் தூண்களாக இருக்கும் மாவீரர்களே! உங்கள் இரத்தத்தால் எங்கள் விடுதலை வரலாறு மகத்துவம் பெறுகின்றது. உங்கள் இலட்சிய நெருப்பால் எங்கள் போராட்டம் புனிதம் பெறுகின்றது. உங்கள் தியாகத்தால் எங்கள் தேசியம் உருவாக்கம் பெறுகின்றது. உங்கள் நினைவுகளால் எங்கள் உறுதி வைரம் பெறுகின்றது” என்று மாவீரர்களின் தியாகத்தை விழித்துக் கூறியுள்ளார் தேசியத் தலைவர்.

மாவீரர்கள் பாதம் பதித்த தமிழ் மண் புனிதம் பெற்றது. வீர உணர்வு செறிந்தது. தமிழீழ இலட்சியப் பற்றை இடைவிடாது அள்ளித் தெளித்தது.
நீரிலும் நெருப்பிலும் தமிழினத்தையும் அவர்களின் மண்ணையும் காத்து நின்ற காவல் தெய்வங்களின் வீரத்துக்கு எல்லை கிடையாது.
விடுதலைப் போராட்டம் என்பது அக்கினிக் குழம்பில் நடந்து, நெருப்பு நதிகளில் நீந்தி, தீயில் மூழ்கியெழும் பெரும் பயணம்.
இது ஒரு விளையாட்டுப் போட்டியன்று. மண்ணுக்காகவும் மக்களுக்காகவும் இரவும் பகலும் இளைக்காது நடத்திய வீரப்போர்.
ரிஷிமூலம், நதிமூலம், வம்சமூலம், சான்றோர்மூலம் எனும் நால்வகை மூலங்களாலும் அடையாளம் காண முடியாத தமிழ் மறவர், விடுதலை வேள்வியில் தம்மை ஈகம் செய்ததால் எம்முள் ஒளி பரப்பி நிற்கின்றனர்.

தேசியத் தலைவர் இதனையே தமது வரிகளில், “தமிழீழத் தாய்நாட்டின் விடிவுக்காக தங்கள் இன்னுயிரை ஈகம் செய்து எமது இதயமெங்கும் நிறைந்திருக்கும் எம்முயிர் வீரர்கள் நாம் நினைவுகூர்ந்து கௌரவிக்கும் நாள் இது. எமது தேசம் விடுதலை பெற்று, எமது மக்கள் சுதந்திரமாக தன்மானத்துடன் வாழவேண்டும் என்ற சத்திய இலட்சியத்துக்காக மடிந்த எமது மாவீரர்களை எமது நெஞ்சப் பசுமையில் நிறுத்திக்கொள்ளும் தேசிய நாள்” என்று 2008 மாவீரர் நாள் உரையில் முத்தாரம் வைத்துள்ளார்.

தமிழீழ விடுதலைப் போராட்ட ஆரம்ப நாட்களில் தன்னையும் ஒருவனாக இணைத்து, 1982 நவம்பர் 27 நாளன்று சிங்களப் படையுடனான மோதலில் களப்பலியானவன் லெப். சங்கர்.
தமிழீழப் போரில் முதலில் வித்தாகிப் போனவனின் நாளையே தேசியத் தலைவர் மாவீரர் நாளாகத் தெரிந்தெடுத்தது, உலக வீரர்கள் வரலாற்றில் சிறப்புப் பெருமை மிக்கது.
கார்த்திகை மாதத்தை ‘அழல்சேல் குட்டம்’ என்று ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்றான சிலப்பதிகாரம் வர்ணிக்கிறது.

கார்த்திகை என்றால் அழல் என்றும், எரி என்றும் பொருள் தருவது. இறைவனை நெருப்பு வடிவில் உருவகித்து வணங்குவது தமிழர் மரபு.
பஞ்சபூதங்களின் வடிவில் நின்று உலகை இயக்குவதை அக்கினி ஒளியில் காணலாம் என்பதே இதன் அர்த்தம்.
ஒளியூட்டும் உயரிய வழிபாட்டுக்கான கார்த்திகை மாதமே மாவீரர்கள் மாதமாகி, அந்த வீரத் திலகங்களுக்கு ஒளியேற்றும் நாளாக அமைந்திருப்பது உயர்ந்த உத்தமமானது.

உலக மாகா யுத்தங்களின்போது மரணித்த போர் வீரர்களுக்கு தனித்தனியாகக் கல்லறை அமைக்கப்படுவதில்லை. ஒட்டுமொத்தமாக ஒற்றை நினைவுச் சின்னம் மட்டுமே அமைக்கப்படும்.
அதுமட்டுமன்றி, போர் நடைபெற்றுக்கொண்டிருக்கும் காலத்திலும் போருக்கான நினைவுச் சின்னம் எந்த நாட்டிலும் அமைக்கப்படவில்லை.
ஆனால், தமிழீழ விடுதலைப் போரில் ஒவ்வொரு மாவீரர்களுக்கும் போர் நடந்துகொண்டிருக்கும்போதே தனித்தனியாகக் கல்லறைகள் அமைக்கப்பட்டு, அதன்மீது நடுகல் நாட்டி, பண்டைய தமிழர் வழிபாட்டுக்கு மீண்டும் உயிர்கொடுத்தவர்கள் தமிழீழ விடுதலைப் புலிகள்.

தமிழீழத்தின் வடபுலத்தேயுள்ள கோப்பாயில் அமைந்துள்ள இராச பாதையில் உருவான முதலாவது மாவீரர் துயிலும் இல்லத்தில் அமைக்கப்பட்ட சிறப்பு மேடையில் நின்று, 1991ஆம் ஆண்டு, “தாயகக் கனவுடன் சாவினைத் தழுவிய சந்தனப் பேழைகளே” என்ற மாவீரர் பாடல் முதன்முறையாக இசைக்கப்பட்டது.
கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லத்தைத் தொடர்ந்து படிப்படியாக தமிழர் தாயகத்தின் வடக்கிலும் கிழக்கிலும் மாவீரர் துயிலும் இல்லங்கள் நிர்மாணிக்கப்பட்டு அவ்விடங்கள் புனித பூமியாக போற்றித் துதிக்கப்பட்டு வந்தது.

விடுதலைப் போர் என்பதை பயங்கரவாதம் என்று நாமம் சூட்டி விடுதலைப் போர் என்ற புனிதத்தின் மகிமையை அறியாத சிங்கள பௌத்த பேரினவாதம், மாவீரர்களின் துயிலும் இல்லங்களை நிர்மூலமாக்கி, அங்கு படைத் தலைமை அலுவலகங்களையும், பௌத்த விகாரைகளையும் அரச மரங்களையும் அமைத்து வீரப் பிரகடனம் செய்கின்றது.
மண் மகிழ வந்து, அந்த மண்ணுக்காகப் போராடி, கண் நெகிழ வித்தாகிப் போன மாவீரர் துயில்கொள்ளும் பூர்வீக நிலம் தாயக உணர்வின் அடையாளமாக என்றும் நிலைத்து நிற்கும் என்பதைக் காலம் நின்று சொல்லும்.

தாயகத்தின் போராட்டத்துக்கு அன்றும் இன்றும் என்றும் உறுதுணையாக நிற்கும் புலம்பெயர் தமிழர்களை கூறுபோட்டு வேறுபடுத்த சிங்கள அரசு தொடர்ந்து எடுத்துவரும் முயற்சிகளை தேசியத் தலைவர் அவர்கள் தமது 2007ஆம் ஆண்டு மாவீரர் நாள் உரையில் நிதர்சனமாகப் பின்வரும் வார்த்தைகளால் கூறியுள்ளார்.
“புலம்பெயர்ந்து வாழும் எமது மக்கள் தாம் வாழும் நாடுகளில் பலம்பொருந்திய சக்தியாக நின்று தமிழீழ விடுதலைப் போருக்கு உதவி வருவதையும் அரசியல் ஆதரவைத் தேடித் திரட்டி வருவதையும் சிங்கள தேசத்தால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை…

சிங்களப் பேரினவாதத்தின் கோரப் பிடிக்குள் சிக்கி, எம் மக்கள் அழிந்து வருவதையும், அந்தப் பேரழிவைத் தடுக்க புலம்பெயர்ந்த மக்கள் அரசியல் ரீதியாக மேற்கொள்ளும் மனிதாபிமானப் பணிகளையும் சிங்களப் பேரினவாதத்தால் சகிக்க முடியவில்லை…
எனவேதான், புலம்பெயர்ந்து வாழும் மக்களுக்கும் தாயக மக்களுக்குமிடையிலான உறவுப் பாலத்தை உடைத்து தமிழீழ விடுதலைப் போராட்டத்தை நசுக்கிவிட சிங்களப் பேரினவாதம் முயற்சித்து வருகின்றது”.

தேசியத் தலைவரின் தூரப்பார்வையைக் கொண்ட இந்தத் தீர்க்கதரிசனத்தை இன்றும் நாம் புலம்பெயர் மண்ணில் காணக்கூடியதாக உள்ளது.
புகலிட மண்ணில் மாவீரர்கள் என்ற புனிதர்களை தங்களின் சுய தேவைகளுக்காக பயன்படுத்தும் தீய சக்திகளை அடையாளம் கண்டு, சத்திய இலட்சியத் தீயில் தம்மையே அழித்துச் சரித்திரமாக்கிவிட்ட எமது மாவீரர்களின் வழியில் நின்று நாம் செயற்பட வேண்டிய முக்கியமான காலம் இன்றையது.
பனங்காட்டான்