சத்தியப்புதல்வா!…. சரித்திரம் திரும்பும்!….

praba birthday wish 2015

தலைவா!…தவப்புதல்வா!…

இடையிடையே குமுறிஎழுந்த
எரிமலை உண்டுதான்
இன உணர்வால் குமுறிஎழுந்த
எரிமலை நீங்கள் தான்
வரும்பகையை முடித்து நீங்கள்
வழிகள் காட்டிநீர் தமிழன்
வளமாக வாழ்வதற்காய்
தனிஈழம் நோக்கிநீர்!…

ஈழம் நோக்கும் உங்கள் முடிவில்
இன்னல் உண்டுதான்
இனிமையான தமிழ்ஈழம்கண்டால்
இன்பம் உண்டுதான்
மாலை நேரச் சூரியனும் சிவந்தே
போகின்றான் பின்
காலை வந்தே புதுக்கதிர்களாய்
அள்ளித்தருகின்றான்!…

அள்ளித்தரும் சூரியனும் நீங்களும்
ஒன்றுதான் என
அன்னைத்தமிழ் எங்களுக்கு
சொல்லித்தருகிறாள்
சிவந்துபோன ஈழமண்ணில்
நாளை விடியல்தான்-உங்கள்
தெளிந்த கண்ணில் அதனைநாங்கள்
இன்று காண்கின்றோம்!….

உங்களுக்குத் தெரியுமா!…

இன்றுகாணும் உங்களில் ஏதோ
ஒளிந்து உள்ளது
தமிழ்ஈழம் என்று வந்தபோது
அது நிமிர்ந்து கொண்டது
வென்றுவரும் புலிகளுக்கு
வேதம் சொன்னவர் நீங்கள் ஏன்
வேர்ப்பலாவை போலத்தானே-மிக
இனிமையானவர்வ!….

வேர்ப்பலாவின் இனிமைக்குத்தான்
என்ன காரணம் அது
வேருக்கள்ளே பழுப்பதுதான் பலர்
சொன்னகாரணம்
வெற்றிதரும் உங்கள் வேரை நானும்
தேடினேன்
வீரம் விளையும் தமிழீழமண்ணில்
புதையல் தேடினேன்!…praba poem

புதையல் தேடும் எனதுஉடல்
புல்லரித்தது
புதிது புதிதாய் வரலா(று) எனக்கு
வழியைச் சொன்னது
தேடிதேடி அடிக்கும்அலை உங்கள்
மண்ணைச் சொன்னது
தேசமெல்லாம் “வல்வெட்டித்துறை”
என்றே பெயரைச்சொன்னது!….

நீங்கள் வந்தவழி!….

வல்வை மண்ணின் பெயரைத்தேட
வழிகள் விரிந்தன
வழியில் எல்லாம் நீங்கள்வந்த
சுவடுதெரிந்தன
வங்கம்வெல்லும் உங்கள்குலமோ
பெரும் வணிகப்பரம்பரை
அதுகப்பல்கட்டி கடல்கடக்கும்
கலையில் சிறந்தது!….

கடல்கடந்து நாடுகளை கண்டு
கொள்வதும்
பண்டங்களை மாற்றிவந்து மக்கள்
பசிகள் தீர்ப்பதும்
தங்களின் கடமையென்றே
எண்ணித் துணிபவர்
எதிரேவரும் அலைகளிலே
ஏறி நடக்கின்றார்!….

ஏறிநடக்கும் இவர்களுக்கு
இயற்கை நண்பனாவான்
இரவும்பகலும் துணிவுடனே எந்த
திசையுமிவர் போவார்
மாரிமழை என்றபோதும் ஓய்து
போகமாட்டார்
ஓயாதஅலைகள் என்றேஉறுதியோடு
போவார்!….

நீங்கள் கரிகாலனா?….இல்லை

ஓயாத அலைபோல வரலாறும்
மாறும்
காணாமல் போனவை மீண்டும்
கருவாகி மீளும்
கரிகாலன் ஆண்டதை எவரும்
கண்டவர் இல்லை – புதுக்
கரிகாலனாக உங்களைக் காண்கின்ற
வரைக்கும்!….

கரிகாலன் என்றே புனைபெயரை
வைத்தீர்கள்
அவன் போல கடலில் கலங்களும்
விட்டீர்கள்
பதினாறுவயதினில் புதுவழியொன்று
கண்டீர்கள்
வலுவுள்ளபுலியாகி பெரும்வரலாறு
படைத்தீர்கள்!….

வரலாறு படைக்கின்ற நீங்கள்
எங்கள் சொந்தம்
வரப்போகும் தமிழீழத்தின்
தத்துவமுற்றம்
அழியாதபுகழோடு ஆண்டவன்
ஒருவன் –
அவன் அனுரதபுரத்தின்
ஈழாழமன்னன்!….

ஆம் நீங்கள்தான் ஈழாழன்!….

ஈழாழமன்னன் எவருக்கும்
வள்ளல்
கல்லறையானபின் ஏலார
தெய்வம் – அவன்
தூபியை கடப்பவர் தலை
சாய்த்திடவேண்டும்
மௌனம்தான் அதன்முன்
கோலோச்சவேண்டும்!….

மௌனங்கள் கருக்கோள்ளும்
மாவீரர்நாளை
எங்கள் மண்ணிற்கு தந்த
மன்னவன் நீங்கள் தான்
நீங்கள் கருவானகாலம் ஈழாழன்
கல்லறையோரம்
ஓ இது கற்பனையில்ல
எத்துணை உண்மை!….

எத்துணை உண்மைகள் புதையுண்டு
போனதோ?
இப்படி எத்துணையுண்மைகள் புதையலாய்
மீளுமோ – உங்கள்
மஞ்சள்பெட்டியும் – ஈழாழன்
மாளிகைமணியும்
ஒன்றெனக்கண்டேன் இன்னும்தொடர்வேன்
சத்தியப்புதல்வா சரித்திரம் திரும்பும்!….

வாய்மையுடன் வரலாற்றைத்தேடும்
வர்ணகுலத்தான்

தலைவர் பிரபாகரனின் ஐம்பதாவது பிறந்தநாளுக்காக எழுதப்பட்டு அவரிடம் கை அளிக்கப்பட்டபோது அவர்வியந்து பாராட்டிய இக்கவிதை இங்கே நன்றியுடன் மீளவும் மறுபிரசுரம் செய்யப் படுகின்றது.

நன்றி – வர்ணகுலத்தான்