விடுதலை வேட்கையின் குறியீடானவர் தமிழீழத் தேசியத் தலைவர்

உலகில் உரிமைக்காகப் போராடும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் விடுதலை வேட்கையின் குறியீடானவர் தமிழீழத் தேசியத் தலைவர் : பிரதமர் வி.உருத்திரகுமாரன் !

praba birthday wishesதமிழ் மக்களின் மனங்களில் நீக்கமற நிறைந்திருக்கும் தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்கள், ஈழத்தமிழ் மக்களுக்கு மட்டுமல்ல, உலகத் தமிழ் மக்களுக்கும், ஏன் உலகில் உரிமைக்காகப் போராடும் அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் விடுதலை வேட்கையின் குறியீடாக அவர் மிளிர்கிறார் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்களின் 61 வது பிறந்தநாளினையொட்டி உலகத் தமிழ் மக்கள் காட்டும் எழுச்;சியான வெளிப்பாடுகளுடன் நாடுகடந்த தமிழீழ அரசாங்கமும் தன்னை இணைத்துக் கொள்கிறது என பிரதமர் அவர்களினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது :

தேசியத் தலைவர் அவர்கள் தமிழ் மக்களின் மனங்களில் நீக்கமற நிறைந்திருக்கிறார். ஈழத்தமிழ் மக்களுக்கு மட்டுமல்ல, உலகத் தமிழ் மக்களுக்கும், ஏன் உலகில் உரிமைக்காகப் போராடும் அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் விடுதலை வேட்கையின் குறியீடாக அவர் மிளிர்கிறார்.

அடக்குமுறையாளன் எத்தகைய வலுவுள்ளவனாக இருந்தாலும், எவ்வளவு கொடூரமானவனாக இருந்தாலும், அடக்குமுறையை எதிர்த்து அச்சமின்றிப் போரிடுவதற்கு மக்கள் வீரத்துடன் நிமிர வேண்டும் என்பதனைத் தேசியத் தலைவர் அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் உறுதியாக வெளிப்படுத்தியிருக்கிறார்.

ஆயுதம் தாங்கிய விடுதலைப் போராட்டம் என்பது தேசியத் தலைவரின் வார்த்தைகளில் கூறுவதாயின் நெருப்பாற்றை நீந்திக் கடப்பது போன்றது. அளப்பரிய வீரத்தையும், ஈடில்லா ஈகத்தையும் கொண்டு வளர்த்தெடுக்கப்பட வேண்டியது. எத்தனையோ வேதனைகளையும், சோதனைகளையும், துரோகங்களையும் தாண்டிப் பயணிக்க வேண்டியதொன்று. சின்னம் சிறிய தேசமான தமிழீழ தேசம் தன்னிலும் ஆறு மடங்கு கூடுதலான மக்கள் தொகையைக் கொண்ட சிங்கள தேசத்தின் அரசை எதிர்த்து மட்டுல்ல, தமது பிராந்திய நலன்களுக்காகவும், புவிசார் நலன்களுக்காகவும் சிறிலங்கா அரசைத் தாங்கி நின்ற பலம் மிக்க அரசுகளை எதிர்த்தும் போராட வேண்டிய போராட்டமாக மாறிப் போனதொன்று. இத்தகையதோர் சூழலில், போராட்டத்தை முன்னோக்கி நகர்த்த தேசியத் தலைவர் அவர்கள் மேற்கொண்ட நடவடிக்கைகளும், காட்டிய வீரமும் மதிநுட்பமும் வரலாற்றில் நிலைத்து நிற்கப் போவவை.

உலக வல்லரசுகளின் பெருந்துணையுடன் தமிழீழ மக்களை இனஅழிப்புச் செய்தவாறு சிங்களம் செய்த ஆக்கிரமிப்பை உறுதியுடன் எதிர்த்துப் போராடி, உலகில் போராடும் மக்கள் பெறவேண்டிய சரணடையாத உறுதியைத் தேசியத் தலைவர் வெளிப்படுத்தினார். எமது எதிர்காலத் தலைமுறைக்கு காலத்துக்கு ஏற்ற வகையில் போராட்ட வடிவங்கள் மாறலாம், இலட்சியம் மாறாது என்ற செய்தியை அறிவித்தார்.

ஆயுதப் போராட்டத்தின் போது எடுக்கப்பட்ட முடிவுகள் தவறு எனத் தெரிந்த போது அதற்காக மன்னிப்புக் கோரவும் அவற்றை இயன்றளவுக்கு மாற்றியமைக்கவும் தேசியத் தலைவர் தயாராக இருந்தவர்.

ஆயுதப்பாவனை குறித்தும் அவரிடம் ஓர் அறம் இருந்தது. தேசியத் தலைவர் எல்லாவற்றுக்கும் மேலாகத் தமிழ் மக்களின் விடுதலையை நேசித்தவர். அதற்கான விடுதலைப் போராட்டத்தை அளப்பரும் தியாகங்களுடன் முன்னெடுத்தவர். அவரது பார்வையில் விடுதலைக்குத் தடையாக இருக்கும் எவற்றையும் அகற்றி விடுதல் அவசியம் எனக் கருதியவர். தமிழ் மக்களின் விடுதலை எனும் ஒரு பெரும் பொது நன்மையினை அடைவதனை இலக்காகக் கொண்டே, இப் பொதுநன்மையின்பால் நம்பிக்கை கொண்டே, தேசியத் தலைவர் அவர்கள் எல்லா முடிவுகளையும் எடுத்தார். விடுதலை என்ற பொது நன்மையே தேசியத் தலைவரின் அறமாக இருந்தது. தேசியத் தலைவரின் இவ் அணுகுமுறையுடன் முரண்படுபவர்கள்கூடப் போராட்டத்தின் மீதும் விடுதலையின் மீதும் தேசியத் தலைவர் கொண்டிருந்த பற்றுறுதியை மதிக்கவே செய்வர்.

தேசியத் தலைவரின் 61 வது பிறந்த நாள் நிகழ்வை நாம் அடையாளப்படுத்தும் இதேவேளை தேசியத் தலைவர் அவர்கள் கூறிய அறிவுரைகளையும் பின்பற்றுபவர்களாக இருக்க வேண்டும். நான் பெரிது நீ பெரிது என்றில்லாது நாடே பெரிது என நாம் அனைவரும் செயற்பட உறுதி எடுத்துக் கொள்வோமாக!

தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்.

இவ்வாறு பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்களினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாதம் ஊடகசேவை