ஈகத்தின் முதல் வித்து லெப். சங்கர்…., உன் வீரச்சாவும் அதன் பின்பான தமிழர் வரலாறும்!

praba heros day 2

ஈகத்தின் முதல் வித்து லெப். சங்கர். அப்போது ஓரிரு வாரங்களுக்கு முன்னர்தான் சீலன் புலேந்திரனின் காயங்களுக்கு மருந்து (பெத்தடீன், சொசியின்) வாங்க பணத்துக்காக எத்தனையோ வீடுகள் ஏறி, இறங்கி ஏமாறி ஏமாற்றப்பட்டு ஒரு வழியாக 3200ரூபா பிடித்து சீலன், புலேந்திரனுக்கு சிகிச்சை கொடுத்து வண்டியேற்றி, அண்ணையிட்டை தமிழ்நாட்டுக்கு அனுப்பி காலை மாலை இரவு வெள்ளாப்புறம் என்று பேதமின்றி விழித்தபடி திரிந்து கொஞ்சம் ஓய்வாக உணரும்பொழுதில் சங்கருக்கு காயம்…

ஆனால் சீலன், புலேந்திரனின் காயங்கள் போலில்லாமல் இது கொஞ்சம் வித்தியாசம். சீலன், புலேந்திரனுக்கு ரிபீட்டர் வெடி.பல சிறிய சன்னங்கள் புகுந்த காயம். சங்கருக்கு தானியங்கி துப்பாக்கி காயம்.

படுக்கையில் இரத்தம் இழந்து சோர்ந்து கிடந்தாலும் அரைகுறை நினைவுகளில் கதைத்தபடி இருந்த சங்கர் அந்த நேரத்திலும் இயக்கத்தின் ஆயுதம் பற்றியும் இனி செய்ய வேண்டியதுகள் பற்றியும் ஏதேதோ கதைத்தபடி.

சீலன் காயப்பட்ட பிறகு அமைப்பின் தாக்குதற்பிரிவு பொறுப்பாளனாக சங்கரை தலைவர் தெரிவு செய்திருந்ததால் சங்கரின் பொறுப்புகள் அதிகம்.அந்த நேரத்தில் தாக்குதற்பிரிவு பொறுப்பு என்பது தலைவருக்கு அடுத்தபடியாக அமைப்பின் தளபதி போன்ற ஒரு பொறுப்பு.

தலைவர் சில போராளிகள் பற்றி அதிகம் யோசிக்காமல் நித்திரை கொள்ள கூடியதாக இருந்தது என்றால் அது சங்கர், சீலன், புலேந்திரன், பண்டிதர் போன்றவர்களையே சொல்லலாம்.

எந்த சூழ்நிலையிலும் இவர்கள் சுயமாக முடிவெடுத்து எந்த நிலைமையையும் சமாளிக்ககூடியவர்கள் என்று தலைவர் நம்பிக்கை கொண்டிருந்தது இவர்கள்மீது.

காயத்துடன் அணுங்கியபடி இருந்த சங்கரை பார்த்தபோது ஈரச் சாக்கு ஒன்றால் இதயத்தை அழுத்தி மூடியதுபோல ஒரு இனம்புரியாத கவலை மனசை நோகச்செய்தது.

அடுத்த ஓட்டத்துக்கு தயரானோம். சீலன், புலேந்திரன் காயமடைந்தபோது சங்கர் ஓடித்திரிந்தது போல இம்முறை லாலா ரஞ்சன் அந்த இடத்துக்கு வந்தான். சீலன், புலேந்திரனுக்கு சிகிச்சை அளித்த மருத்துவரை இம்முறையும் அழைப்பது சாத்தியம் இல்லை.

ஆனாலும் முதலுதவியும் வலியில் இருந்து நிவாரணம் பெறும் சிகிச்சையும் மிக அவசரமாக சங்கருக்கு தேவைப்பட்டது. அதே பெத்தடீன்,சொசியின் ஊசிகள்,காயம் தொற்று ஏற்படாமல் மருந்துகள்.

இம்முறையும் பணத்துக்கு தெரிந்தவர்கள் ஒவ்வொருவராக கையை காலை பிடித்து ஏற்பாடாச்சு. அடுத்து சங்கரை மதுரைக்கு கொண்டு போகவேணும். தலைவர் அங்கு ஒரு வழக்கின் பிணையில் நின்றிருந்த நேரம்.

மதுரைகாவல் நிலையத்தில் கையெழுத்து, மாலை 6 மணிக்கு பிறகு குறித்த முகவரியில் நின்றாக வேண்டும் என்ற நிபந்தனைகளுடன். இருபத்திஏழு நாட்களுக்கு முன்னர் (நவம்பர் 27 1982) சீலன் புலேந்திரன் காயமடைந்தபோது,

சரஸ்வதி பூசையில் மூன்று பேருக்கு காயம் என்று மதுரைக்கு தந்தி ஒன்றை தபால்நிலையத்தில் இருந்து அனுப்ப வந்த சங்கரின் காயம்பற்றி இம்முறை அனுப்ப வேண்டிய நிலை.

மதுரையில் பொன்னம்மான்,கிட்டு போன்றவர்கள் தலைவருக்கு அருகிலேயே இருக்கிறார்கள்.

சங்கரை அனுப்பினால் எப்படியும் நல்ல சிகிச்சை கிடைத்துவிடும் என்பதில் நம்பிக்கை இருந்தது.சங்கரின் காயம் ஒன்றும் உயிர் உறுப்புகளை சேதமடைய வைத்திருக்கவில்லை என்பது ஒரு ஆறதலாக இருந்தது.

எப்படி கடல்தாண்டி அனுப்புவது. பின்பொருநாள் பெரும்கடல்படையை,பெரும் பெரும் ஆற்றலான கடல்சார் வீரர்களை கொண்டு வளர்ந்த எங்கள் அமைப்பிடம் அப்போது கடல் தாண்ட எதுவுமே இல்லை.

வெளி இணைப்பு இயந்திரம், படகு, படகு செலுத்துபவர் என்று ஏராளம்.இவை எல்லாம் ஏற்பாடு செய்தாலும்கூட படகு கடல் தாண்டி கோடிக்கரைக்கு போக பெற்றோல் வேண்டும்.பணத்துக்கு எங்கே போவது…

பண்டிதர் தான் படகு எரிபொருளுக்கு பணத்துக்கு அலைந்து பிடிப்பேன் என்றான். ஒரு படகுசெலுத்துபவரை ஏற்பாடு செய்யும்படி லாலாவுக்கும் எனக்கும் சொன்னான்.

நிறைய இடங்களில் ஏமாற்றம்.ஏதாவது சாக்கு போக்குகள்தான்.ஒரு படகுசெலுத்துபரை இறுதியாக அணுகி கெஞ்சி மண்டாடி நிலைமை சொல்லி சம்மதிக்க வைத்தோம்.

அவரை யாழ் சென்ரல் கல்லூரி மைதானத்தடிக்கு மாலை 3மணிக்கு வரச்சொல்லி லாலா நானும் காத்திருந்தோம்.சந்திக்க நேரமும் இடமும் சொல்லி காத்திருப்பது அந்த நேரத்தில் மிகமிக ஆபத்தான வேலை.

அப்போது சிங்களபடையில் பிரிகேடியர் (பின்னர் மேஜர் ஜெனரல்)பொறுப்பில் இருந்த சரத்முனசிங்க தலைமையில் ஒரு பெரும் புலனாய்வு பிரிவு தாயகம் எங்கும் தன் வலையை அகல விரித்திருந்த நேரமது.

படகோட்டி வரும்வழியில் பிடிபட்டால் எப்படியும் கூட்டிக்கொண்டுவருவார் என்ற ஆயத்தத்துடனேயே காத்திருக்க பழகி விட்டிருந்தோம்.மைதானத்தின் ஒரு முனையில் கண்ணுக்கு தெரியும் தூரத்தில் லாலா மறுமுனையில் நான்.

மாலை 6மணிவரை படகோட்டி வரவில்லை.எல்லாம் ஏற்பாடாகியும் படகை செலுத்த ஒருவர் தேவை என்று அலைந்து இன்னுமொருவரை ஏற்பாடு செய்து நவம்பர் 24 சங்கரை அனுப்பும்போது அவனின் காயமும் அவனின் அணுங்கலும் நோவும் அதிகமாகி விட்டிருந்தன.

சங்கருடன் சென்ற போராளி சங்கரை கோடிக்கரையில் இறக்கி அங்கு ஒரு வீட்டில் படுக்கவைத்துவிட்டு பேரூந்துபிடித்து மதுரைக்கு போய் விடயத்தை சொல்லி அழைத்து வரும்போது நவம்பர் 25 மாலை ஆகிவிட்டிருந்தது.

மதுரைக்கு சங்கரை கொண்டுபோகும்போதே ஓரளவுக்கு நிலைமை கடினமாக இருந்தது.காயத்தை மூடி தைத்தபோது அதற்குள் ஏற்பட்ட தொற்று அவனின் உடல்முழுதும் பரவிவிட்டிருந்தது.

மதுரையின் ஒரு சின்னஞ்சிறிய தனியார் மருத்துவஅறைக்குள் சங்கரின் இறுதி கணங்கள் ஆரம்பமாகின. மிக கடினமான இறுக்கமான கணங்கள் அவையாக இருந்தது என்று பின்பொருநாள் நாடுதிரும்பிய கிட்டு சொல்லியிருந்தான்.

காப்பாற்ற ஏதேனும் வழி தேடி தலைவர் ஏங்கிய பொழுதுகள் அவை.நோவும் அணுங்கலும் உடல் முழுதும் தொற்றிவிட்ட காயதொற்றும் சங்கரை வாட்டிய போதும் அவன் தாயகவிடுதலை, அமைப்பின் அடுத்த கட்டம்,தலைவரின் பங்கு, தலைவர்மீதான விசுவாசம் மரியாதை என்று ஏதேதோ கதைத்தபடியே இருந்தானாம்.

அவனுடன் இறுதிகாலங்களில் வெடிகுண்டு, வெடிமருந்துகலவை என்று எப்போதும் ஒரு விஞ்ஞான சோதனை நடாத்தி கொண்டிருந்த அப்பையா அண்ணையும் அவனருகில். அவன் நேசித்த பெருந்தலைவன்,

அவன் கூடப்பழகி உயிராக இருந்த தோழர்கள் என்று எல்லோரும் சுற்றி இருக்க அவனின் இறுதிமூச்சுகள் வெளிவரத்தொடங்கின. நிலைமையினை உணர்ந்த தலைவர் கிட்டுவை அழைத்து சங்கரை கிட்டுவின் மடியில் தலைவைக்க விட்டு அந்த அறையில் சங்கரையே உற்றுப்பார்த்தபடி.

ஒருபொழுதில் 17வயது இளைஞனாக கப்டன் பண்டிதரால்(பண்டிதர்,சங்கர்,பழனி(குமரப்பாவுடன் வீரச்சாவடைந்தவர்) ஐடியா வாசு எல்லோரும் ஒரு வகுப்பு சிதம்பராவில்) தன்னிடம் அழைத்துவரப்பட்ட போராளி இப்போது தன் 21வயதில் இறுதிமூச்சை விட்டுக்கொண்டு தாயககனவுடன் சாவுக்குள் நுழைகின்றானே என்ற துயர் அவருக்கு.

இரவும் பகலும் பிரியாவிடை சொல்லிடும் ஒரு பொழுதில் நவம்பர் 27ல் சங்கர்,சுரேஸ் என்ற பெயர்களால் அமைப்புக்குள் அழைக்கப்பட்ட எங்கள் உயிர்த்தோழன் வீரச்சாவை தழுவி கொள்கின்றான்.

ஓங்கி அழவும் முடியாது.பாடைகட்டி ஊர்வலமாக கொண்டு எரியூட்டவும் முடியாது.

மதுரை அடங்கிய ஒரு பின்னிரவு பொழுதில் இரவு 11மணிக்கு பின்னர் ஒரு பத்துக்கும் உட்பட்டவர்கள் (இயக்கஉறுப்பினர்கள், இயக்க ஆதரவாளர்கள்) சங்கரை கொண்டுசென்று மயானம் ஒன்றில் கிடத்தி சங்கருக்கு அவனின் பிரியமான தோழமை அப்பையா கையால் தீயிட நெருப்புக்குள் மறைந்துபோனான்.

சங்கரின் வீரச்சாவுச்சேதி தாயகத்தின் போராளிகளுக்கு மறுநாளே அறிவிக்கப்பட்டது. ஆனால் எவரும் இதனை பற்றி மூச்சுவிடக்கூடாது என்றும் அறிவிக்கும் சாதக நிலைமை ஒன்று ஏற்படும்போது தலைமை அறிக்கும் என்பதும் அந்த செய்தியுடனே இணைந்து.

அடுத்த கட்டமாக சங்கரின் புகைப்படம் எதுவுமே அமைப்பிடம் இல்லை. அவன் மரணப்படுக்கையில் கிடந்த நேரத்தில் எடுத்த படம் ஒன்றுதான் அமைப்பிடம் இருந்தது.

சங்கரின் மைத்தனரான தாடி என்பரிடம் கம்பர்மலையில் சங்கரின் சில பாஸ்போர்ட் அளவு படங்கள் இருக்கின்றன என்பதை முன்னமே சங்கர் சொல்லி இருந்தான்.

சங்கரின் மைத்துனனான தாடி என்பவரிடம் கம்பர்மலைக்கு சென்று நானும் பண்டிதரும் இன்னுமொரு ஆதரவாளரும் சென்று சங்கரை பயிற்சிக்காக லெபனான் அனுப்புவதற்கு அவனுக்கு பாஸ்போர்ட் எடுக்கவேணும் அவனின் பாஸ்போர்ட் புகைப்படம் அவனின் வீட்டில் இருக்கு அதனை எடுத்து தரும்படி கேட்டோம்.

ஏன் சங்கரையே கூட்டிக்கொண்டு போய் புகைப்பட ஸ்ரூடியோவில் புகைப்படம் எடுக்கலாம்தானே என்று சங்கரின் மைத்துனன் தாடி திரும்ப எங்களை கேட்டபோது எதுவுமே சொல்ல வரவில்லை.

ஆனாலும் சுதாகரித்து பதில் சொல்லி அவனிடம் சங்கரின் புகைப்பபடங்களை வாங்கி கொண்டுவந்து அவன் தலைமறைந்ததும் சைக்கிளை ஒரு ஓரத்தில் நிறுத்தி விட்டு சங்கரின் புகைப்படத்தை பார்த்து பண்டிதர் கேவிகேவி அழுததது வாழ்வின் இறுதி கணம்வரைக்கும் மறைந்துபோகாது.

எப்டியானவன் சங்கர்,எல்லா வேலைகளையும் மிக இலகுவாக,மிகமிக வேகமாக பழகி செய்ய கூடியவன்.

பண்ணையில் புளியங்குளத்தில் நெல்லு சூடு அடிப்பது என்றாலும் அதனையும அழகாக ஆறதலாக நிதானமாக சிதறாமல் செய்வான் சங்கர்.ஒரு உடுப்பு போடுவது என்றாலும் அவனின் கவனம் அதில் இருக்கும்.

எல்லாவற்றிலும் மேலாக எந்தவொரு பாதுகாப்பு கருவிகளும் இல்லாத அந்த பொழுதுகளில் குண்டுகள், செய்வதும் அதனை பொருத்துவதும் சங்கருக்கு கைவந்த கலை.

சங்கரும் அப்பையா அண்ணையும் இணைந்து செய்த பார்சல் வெடிகுண்டுகள் இருபது அந்தநேரம் சிங்களதேசத்தை அலறி அடித்து நித்திரை குலைய வைத்தது.(அது புங்கங்குளத்தில் புகையிரத தபால்பெட்டிக்குள் வெடித்தாலும்கூட)

சங்கர் எப்போதும் அமைப்பை மக்கள்மத்தியில் பரவலாக கொண்டு போகவேணும் என்ற பெரும் முயற்சியில் திரிந்தபடியே இருப்பான். இதற்காகவே நிறைய படிப்பான்.

உண்மை மனிதனின் கதை,அதிகாலையின் அமைதியில் போன்ற போர்க்கால இலக்கியங்களை மட்டும் இல்லாமல் எல்லாவற்றையும் ஒரு வரலாற்று பின்ணணியுடன் பார்க்கும் ஒரு பார்வையை தரும் அரசியல் புத்தகங்களையும் அவன் விரும்பி படிப்பான். எல்லாவற்றிலும் பார்க்க அவன் ஓய்வற்ற ஒரு உழைப்பாளன்.

ஓய்வு என்பதே அவன் களைத்து தூங்கும்பொழுது மட்டுமே. விடிந்தால் அவனின் நாள் எத்தனை சந்திப்புகள், முன்னெடுப்புகள், முயற்சிகள்,
வேலைகள் என்று ஓடும். அவனது சைக்கிளும் அவனுக்கு ஈடுகொடுத்து உழைக்கும்.

அவன் வீரச்சாவடைவதற்கு சரியாக ஒருமாதம் முன்பு அக்டோபர் 27ம்திகதி சாகவச்சேரி சிறீலங்கா சாவல்நிலைய தகர்ப்பு தாக்குதலில் ஒரு பகுதிக்கு சங்கரையே சீலன் தாக்குதற்பொறுப்பாக நியமித்திருந்தான்.

அப்போது அமைப்பிடம் இருந்த ஆயுதங்களில் ஆகக்கூடிய வலுவுள்ளதான கெக்ளர் அன்ட் கொச் ஜி3 சங்கரிடமே அந்த தாக்குதலில். சிங்களபேரினவாதம் தமிழர் தாயகத்தை அடிமைப்படுத்தி ஆளுவதன் ஒரு அடையாளமாக விளங்குவது சிங்களதலைநகருக்கும் யாழ்ப்பாணத்துக்கும் இடையிலான பெருந்தெரு ஏ9 ஆகும்.

அந்த பெருவீதியில் ஒரு தமிழ் இளைஞன் தானியங்கி துப்பாக்கியுடன் நின்றிருந்த முதல் பொழுதின் பெருமை சங்கருக்கு உரியது. அது சிங்களதேசத்து இனிவரப்போகும் காலத்தில் இவனைப்போல ஆயிரம் ஆயிரம் தமிழ் மனிதர்கள் ஆயுதங்களுடன் எழுந்துவருவர் என்ற செய்தியை அப்போது சொல்லாமல் சொல்லிற்று.

சங்கர் என்ற அந்த வீரனின் சாவு உடனடியாக இயக்கத்தை ஒரு உலுப்பு உலுப்பி விட்டிருந்தாலும்கூட தலைவரும், ஏனைய போராளிகளும் சங்கரின் மரணத்தின் மூலம் முன்னர் இருந்ததைவிட பல்மடங்கு அதிகமான உறுதியும் வேகமும் கொண்டனர்.

காயம் ஆறி தாயகம் திரும்பி சீலன், புலேந்திரனிலும் இதனை காணக்கூடியதாக இருந்தது. அதனை போலவே சங்கரை அவனின் இறுதி கணத்தில் தன் மடிமீது வைத்திருந்த கிட்டுவுக்குள் சங்கர் வீரச்சாவு மலையளவு உறுதியையும், பொறுப்பையும் கொடுத்திருந்ததை பின்பொருநாள் அவன் பொலிகை கடற்கரையில் 1983ஆரம்பத்தில் வந்து இறங்கியபோது உணரமுடிந்தது.

சங்கரின் போராட்ட வாழ்வு தமிழீழ விடுதலை வரலாற்றை பல படிகள் பல பரிமாணங்கள் உயர்த்தி செல்ல வைத்தது போலவே அவனின் முதற்சாவு இனி எந்த கணத்திலும் தளரோம்.

எந்த நிலையிலும் தாயகஇலட்சியத்தை கைவிடோம் என்ற ஓர்மத்தை போராளிகளுள் இறக்கிவிட்டு சென்றது.

அவன் மரணித்து ஒரு வருடத்துக்கு பின்னர் தாயகசுவர்கள் எங்கும் சங்கரின் வீரமரண செய்தியை எழுதி சங்கரின் வீட்டுக்கு சென்று அவன் எரிந்து எஞ்சிய சாம்பல் அடங்கிய செம்பையும்,

அவனின் மரணப்படுக்கை புகைப்படத்தையும் கொடுத்து திரும்பும்போது அவனுடன் உலாவிய அந்த தெருக்கள், சைக்கிளில் அவனுடன் திரிந்த ஒழுங்கைகள் எல்லாம் அவனது முகமாக தெரிந்தது.தாயகம் முழுதும்.

அவன் இறுதியாக படித்துக்கொண்டிருந்த ” ஒரு உண்மை மனிதனின் கதை ” என்ற ருஸ்ய போர்க்கால பெரும் இலக்கியமொன்றின் நாயகன் அலக்ஸெய் போல கால்களை இழந்து காடுகளுள் ஊர்ந்து மனோதைரியத்துடன்,

சாப்பாடு இன்றி பனியை கரைத்து குடித்து முகாம்திரும்பி தன் கால்களை இழந்தபின்பும் செயற்கைகால் பொருத்தி போர்விமானம் ஏறியது போலவே காயத்துடன்,

நினைவு மங்க மங்க இரத்தம் வழிய ஓடிவந்து அமைப்பின் ஆயுதத்தை ஒப்படைத்து வீழ்ந்த சங்கர் இனிவரும் எந்த காலத்திலும் தமிழர் நினைவெங்கும் நிறைந்திருப்பான்.

அவனையும் அவனுடைய பாதையில் வீரச்சாவடைந்த அனைத்து மாவீரர்களும் தமிழர்களின் இனிவரும் எந்தவொரு சமூக அரசியல் மாற்றத்தினதும் மூல இயங்குசக்திகளாக வழிகாட்டுவர்.

ச.ச.முத்து