வலிமை மிகு தியாகத்தை யாராலும் தோற்கடிக்க முடியாது!

தியாகி திலீபனின் 29-வது ஆண்டு நினைவு தினம் இன்றாகும். தமிழினத்தின் வாழ்வுக்காக ஊண் உறக்கம் மறந்து தன்னுயிரை ஆகுதியாக்கிய ஒரு தியாகியின் எண்ணங்கள், சிந்தனைகள், நோக்கங்கள் ஒருபோதும் வீண்போகாது என்பது சர்வநிச்சயம்.Lt Col Thileepan

ஒரு காலத்தில் இந்திய தேசத்தின் விடுதலைக்காக மகாத்மா காந்தி உண்ணா நோன்பு இருந்தார். அந்தத் தியாகம் பாரத தேசத்துக்கு விடுதலையைப் பெற்றுக் கொடுத்தது.

பிரித்தானியக் காலனித்துவத்துக்கு எதிராக சத்தியவழியில் போராடிய காந்தியின் சிலை இன்று பிரித்தானிய மண்ணில் நிறுவப்பட்டுள்ளது.

எந்த நாட்டுக்கு எதிராக மகாத்மா காந்தி நாற்பது நாட்கள் உண்ணாவிரதம் இருந்தாரோ அந்த நாடு இன்று காந்தியின் உருவச் சிலையை தன் நாட்டில் நிறுவி காந்தியத்துக்கு – அகிம்சைக்கு மதிப்பளித்துள்ளது.

மகாத்மா காந்திக்கு இப்போது பிரித்தானியா வழங்கிய கெளரவத்தை அன்று யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்.

ஆனால் இன்று மகாத்மா காந்தியின் உருவச் சிலை இலண்டனில் நிர்மாணிக்கப்பட்டுள்ளதாயின் அதற்குள் இருக்கக் கூடிய ஆன்மிக தத்துவங்கள், தியாகத்தின் பெறுமதிகள் என்பவற்றை நாம் உணர்ந்தாக வேண்டும்.

இதே போன்றுதான் தியாகி திலீபனின் தியாகமும் இந்த இலங்கை மண்ணில் என்றோ ஒரு காலத்தில் போற்றப்படும். இந்த நாட்டின் தென்பகுதியில் கூட தியாகி திலீபனின் சிலை நிறுவப்படும். பாடப் புத்தகங்களில் திலீபன் என்ற தியாகியின் வரலாறு இந்த நாட்டின் மாணவர்களால் படிக்கப்படும்.

இதை நாம் இப்போது கூறும் போது இது நடக்கக் கூடிய விடயமா? என்று பலரும் கேட்கலாம். ஆனால் என்றோ ஒரு காலத்தில் நாம் கூறிய மேற்போந்த விடயங்கள் நடந்தேயாகும்.

இதைச் சொல்லும் போது இதற்கு ஏதேனும் சான்றாதாரங்கள் உண்டா? என்று கேள்வி எழுப்பப்படலாம். இதற்கான பதில் மெளனமாகவே இருக்கும். ஆனால் உலகில் எந்தத் தியாகமும் வீண்போனதாகச் சரித்திரம் இல்லை.அதேபோல எந்த நடிப்புகளும், போலித்தனங்களும் நீண்ட காலம் நிலைத்ததான வரலாறுகளும் இல்லை.

தியாகி திலீபனின் தியாகத்தை இந்த நாட்டின் அனைத்து மாணவர்களும் கற்கின்ற காலம் வரு கின்றபோது இப்படியொரு தியாகி இருந்தாரா? என்று கேள்வி எழுப்பும் அந்த மாணவர்கள், அந்தத் தியாகியின் தியாகத்தை இலங்கை ஆட்சியாளர்கள் போற்றத் தவறியது மகா தவறு என்றும் குற்றம் சாட்டும். ஆக, தியாகி திலீபன் காலத்தில் நாமும் வாழந்தோம் என்ற பெருமை எமக்குரியது.

எவராலும் நினைக்க முடியாத தியாகம். அதிலும் தன் தமிழ் மக்கள் வாழ வேண்டும். அவர்கள் சுதந்திரமாக வாழ்வதற்காக தன்னுயிரை ஆகுதியாக்க வேண்டும் என்ற நினைப்பும் அந்த நினைப்பை நினைவுபடுத்துவது என்பதும் சாதாரணமானவர்களால் நினைத்துக்கூட பார்க்க முடியாத விடயமாகும்.

அந்தளவிற்கு திலீபனின் தியாகம் போற்றுதலுக்குரியது. எதிர்காலத்து சந்ததி இப்படியொரு தியாகத்தை யாரும் செய்ய முடியுமா? என்று கேட் கின்ற அளவில் தியாகி திலீபனின் தியாகம் போற்றப்படும்; வழிபடப்படும். இது உண்மை.

ஒட்டுமொத்தத்தில் தூய சிந்தனையுடன் கூடிய தியாகங்கள் ஒருபோதும் தோற்றுப் போவதில்லை. அவை உயிர்ப்புப் பெற்று நீடூழி வாழ்பவை. அந்த உயிர்ப்புக்கு முற்பட்ட காலம் உயிர்ப்புக்கான உறங்கு நிலையாகவே இருக்கும்.

உலக வரலாற்றின் உன்னத தியாகி லெப்.கேணல் திலீபனின் நினைவு நாள் இன்றாகும்

ஈகச்சுடர் லெப்டினன்ட் கேணல் திலீபனின் 29ஆம் ஆண்டு நினைவுநாள் இன்றாகும். இந்திய அமைதிப்படைக்கு எதிராக ஐந்தம்சக் கோரிக்கையினை முன்வைத்து சாகும்வரை உண்ணா நோன்பிருந்து காந்தி தேசத்தின் அஹிம்சையையும் தாண்டி வானுயர்ந்த நிலை அடைந்த இராசையா பார்த்தீபன் என்று அழைக்கப்படும் லெப்டினன்ட் கேணல் திலீபனின் 29ஆம் ஆண்டு நீங்கா நினைவுகள் இன்றைய தினம் தமிழர் தேசம் எங்கும் உணர்வு பூர்வமாக அனுஷ்டிக்கப்படவுள்ளன.

தந்தை செல்வாவின் அகிம் சைப் போராட்டம் தோல்வியடைந்த பின்பு இலங்கைத் தமிழர்கள் ஆயுத போராட்டத்தைக்கையில் எடுத்தனர்.
ஆரம்பத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் இணைந்து ஆயுத போராட்டத்தில் ஈடுபட்ட திலீபன் 1987 ஆம் ஆண்டு செப்ரெம்பர் 15 ஆம் திகதி ஐந்து கோரிக்கைளை முன்வைத்து உண்ணா விரதம் இருந்தார்.

கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரை தண்ணீர் அருந்தவும் போவதில்லை என்று அறிவித்தார். ஆனால் அந்த கோரிக்கைகள் நிறைவேற்றப்படாததால் உண்ணாவிரதத்தின் பன்னிரெண்டாம் நாளான செப்ரெம்பர் 26 ஆம் திகதி 1987 இல் இறந்தார்.

திலீபன் முன்வைத்த ஐந்து கோரிக்கைகள்
1). மீளக்குடியமர்தல் என்ற பெயரில் இலங்கைத்தீவின் வடக்கு கிழக்கு மாகாணங்களில் புதிதாக திட்டமிடப்படும் குடியேற்றங்களைத் தடுத்து நிறுத்தவேண்டும்.
2). சிறைக் கூடங்களிலும் இராணுவ பொலிஸ் தடுப்பு முகாம்களிலும் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியற் கைதிகள் யாவரும் விடுதலை செய்யப்படவேண்டும்.
3). அவசரகாலச் சட்டம் முழுமையாக நீக்கப்பட வேண்டும்.
4). ஊர்காவல் படையினருக்கு வழங்கப்பட்ட ஆயுதங்கள் முற்றாகக் களையப்படவேண்டும்.
5). தமிழர் பிரதேசங்களில் புதிதாக பொலிஸ் நிலையங்களைத் திறப்பதற்கு மேற்கொள்ளப்படும் நட வடிக்கைகள் முற்றாக நிறுத்தப்பட வேண்டும் எனக் கோரியிருந்தார்.

இந் நிலையில் தாயகத்திலும் புலம்பெயர் நாடுகளில் தியாக தீபம் திலீபனின் நினைவு தினம் இன் றையதினம் உணர்வுபூர்வமான முறையில் நடைபெறுவதற்கு ஏற்பாடாகியுள்ளது.

திலீபன் ஒரு ஈடுஇணையற்ற மகத்தான தியாகத்தை புரிந்தான். அவனது மரணம் ஒரு மாபெரும் வரலாற்று நிகழ்வு. தமிழீழ போராட்ட வரலாற்றில் ஒருபுரட்சிகரமான திருப்பத்தை ஏற்படுத்திய நிகழ்ச்சி. தமிழீழ தேசிய ஆன்மாவை தட்டி எழுப்பிய நிகழ்ச்சி. பாரத நாட்டை விஞ்சிய அகிம்சை பேரெழுச்சி.

உலகத்தின் மனட்சாட்சியை தீண்டி விட்ட நிகழ்ச்சி. அவனது இறப்பு தமிழ் மக்கள் எல்லோரையும் எழுச்சி கொள்ளசெய்த ஒரு புரட்சிகர நிகழ்ச்சியாக அமைந்தது. திலீபன் உங்களுக்காக இறந்தான் உங்கள் உரிமைக்காக இறந்தான். உங்கள் மண்ணுக்காக இறந்தான். உங்கள் பாதுகாப்பிற்காக சுதந்திரத்திற்காக கௌரவத்திற்காக இறந்தான். தான் நேசித்த மக்களுக்காக, தான் நேசித்த மண்ணுக்காக ஒருவன் எத்தகைய உயர்ந்த உன்னத தியாகத்தை செய்யமுடியுமோ அந்த அற்புதமான
அர்ப்பணிப்பைத்தான் அவன் செய்திருக்கின்றான்.

ஒரு உயிர் உன்னதமானது என்பதை நான் அறிவேன். ஆனால் உயிரினும் உன்னதமானது எமது உரிமை. எமது சுதந்திரம் எமது கௌரவம் என்றும் ஈகச்சுடர் லெப்ரினன்ட் கேணல் திலீபன் நினைவாக தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் தெரிவித்திருந்தார். இத்தகைய அர்ப்பணிப்புள்ள ஒரு மாவீரனின் நினைவு தினம் இன்றைய தினம் புலத்திலும் தமிழர் தாயகம் எங்கும் உணர்வு பூர்வமாக நினைவு கூரப்படவுள்ளது.

வலம்புரி


தியாக தீபத்துக்கு யாழ். பல்கலையிலும் உணர்வுபூர்வ அஞ்சலி

தியாகத் தீபம் திலீபனின் 29ஆவது ஆண்டு நினைவு தினம் இன்று திங்கட்கிழமை யாழ். பல்கலைக்கழக முன்றலில் இடம்பெற்றது.

இன்று காலை திலீபனின் திருவுருவப்படம் வைக்கப்பட்டு பல்கலைக்கழக மாணவர்களும், விரிவுரையாளர்களும் இணைந்து மாலை அணிவித்து, ஈகைச் சுடரேற்றி நினைவு நிகழ்வை ஆரம்பித்தனர்.

இதில், மாணவ மாணவிகள் மெழுகுவர்த்தி ஏற்றி தமது உணர்வு பூர்வ அஞ்சலிகளைச் செலுத்தினர்.

இதன் போது யாழ்.பல்கலைக்கழக முன்னாள் மருத்துவ பீட மாணவரான தியாகத் தீபம் திலீபனுக்கு அதிகளவானோர் கலந்து கொண்டு தமது அஞ்சலியை செலுத்தியமை குறிப்பிடத்தக்கது.

தமிழ் மக்கள் தமக்குரிய அனைத்து உரிமைகளையும் பெற்றுத் தாயக மண்ணில் தலை நிமிர்ந்து வாழ்வதை உறுதி செய்யும் பொருட்டு நீர் ஆகாரம் ஏதுமின்றி 12 தினங்கள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி தன் இன்னுயிரை அர்ப்பணித்த தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் யாழ் பிராந்திய அரசியல்துறைப் பொறுப்பாளர் திலீபனின் நினைவு தினம் யாழில் இன்று இடம்பெற்று வருகின்றது.