எதிரியும் புகழும் தலைவர் பிரபாகரன்!

விடுதலைப்புலிகளுக்கும் சிறீலங்கா அரசிற்கும் இடையிலான போர் முடிவுற்ற பின்னர் விடுதலைப் புலிகளின் தலைவரான பிரபாகரன் இலங்கையின் மூவின அரசியல் தலைவர்கள் மத்தியில் அன்றும் இன்றும் என்றும் தனித்துவமானவராகவே காணப்படுகிறார்.kamal-gunaratne-about-prabakaran-english

வன்னியில் இறுதிப் போரின் போது விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டதாக இரானுவத்தினரால் வீடியோ ஆதாரம் வெளியிடப்பட்டது.

ஆயினும் யுத்த வெற்றி பற்றி உரையாற்றிய போதும் அரசு தரப்பிலோ இராணுவ தரப்பிலோ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் பற்றி எக்கருத்தையும் வெளியிடவில்லை. அத்தோடு தமிழ் மக்கள் இன்றும் அவர் உயிருடன் இருப்பதாக நம்புகின்றனர், இருக்கவேண்டும் என பிரார்த்திக்கின்றனர்.

30 வருட விடுதலைப் போராட்டமானது தமிழர் சார்பில் சாதக, பாதக விடயங்களை கொண்டிருந்தாலும் தமிழ் மக்கள் மத்தியில் மதிக்கப்பட்ட உறுதிமிக்க தலைவராக பிரபாகரன் எப்போதும் நிமிர்ந்து நிற்கிறார். அத்துடன் விடுதலை போராட்டதிற்கு தமிழ் மக்கள் ஆதரவழித்து உறுதுணையாகவும் நின்றனர்.

தென்னிலங்கையில் பிரபாகரன் பயங்கரவாத இனவெறி பிடித்த தலைவராக ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் சுகந்திரக்கட்சி ஆட்சியாளர்களாலும் கடும்போக்கு சிங்கள இனவாதிகளாலும் சித்தரிக்கப்பட்டார். தென்னிலங்கை மக்களும் அதனை அப்படியே நம்பினார்கள். மேற்குலகமும், இந்தியாவும் அப்படியே நம்பின.

தமிழினத்தின் தலைவரான பிரபாகரனது தலைமைத்துவம் மிகச்சிறப்பானதாக இருந்ததாக இராணுவத்திலிருந்து ஓய்வுபெற்ற தளபதியான மேஜர் ஜெனரல் கமால் குனரத்ன புகழ்ந்துரைத்திருக்கின்றார்.

இந்த மாதம் ஆறாம் திகதி பதவியிலிருந்து ஒய்வுபெற்றுள்ள மேஜர் ஜெனரல் கமால் குணவர்த்தன 800 பக்கங்கள் அடங்கிய “நந்திக் கடலுக்கான பாதை” என்ற நூலினை எழுதி வெளியிட்டார். இது சம்பந்தமாக வழங்கிய நேர்காணல் ஒன்றிலேயே பிரபாகரன் பற்றிய உள்ளார்ந்த பல விடயங்களை சொல்லி இருந்தார். போர் முடிவடைந்த பின்னர் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனைப் பற்றி பல நாட்டுப் பிரமுகர்கள் தங்களது கருத்துக்களை அவ்வப்போது வெளியிட்டு வருகின்றனர்.

இலங்கையின் ஆட்சிப்பீடத்தில் இருந்த ஆட்சியாளருக்கு சவாலாகவும், படைத்தலைவர்களுக்கு அச்சுறுத்தும் வகையிலும் அவருடைய ஆளுமை வெளிப்பட்டு இருந்தது. நோர்வே நாட்டின் முன்னாள் அமைச்சரான எரிக்சொல் ஹெய்ம் கடந்த 2014ம் ஆண்டில் விடுதலைப் புலிகள் குறித்து வெளியிட்ட கருத்தில், விடுதலைப்புலிகளின் வளர்ச்சிக்கு நோர்வே அரசு பல்வேறு உதவிகளை வழங்கி வந்தது. விடுதலைப்புலிகளின் போராட்டம் தமிழ் மக்களின் விடுதலைக்காக முன்னெடுக்கப்பட்ட போராட்டமாகும்.

பயங்கரவாதம் உலக நாடுகளுக்கு சவாலாக இருந்ததாகவும், பன்னாட்டுச் சட்டத்திட்ட ஒழுங்குகளின் படி அதனை அழித்தொழிப்பதே வரலாறாகும். அதனையே உலகநாடுகள் செய்துள்ளன. பிரபாகரனின் போர்த் தந்திரோபாயங்களை ஒப்பிட்டுப் பார்க்கின்றபோது தனது தனிநாட்டுக்கான உறுதியிலிருந்து இறுதி நிமிடம்வரை அவர் மாறவில்லை.

ஆகவே அவர் அரசிற்கு விலைபோகாத மாபெரும் தலைவர் என தமிழ் மக்களால் போற்றப்படுவதாக தெரிவித்திருந்தார்.

முன்னாள் ஐனாதிபதி மகிந்தவின் சகோதரரும் முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய கருத்து தெரிவிக்கையில் தமிழ் மக்களின் கதாநாயகனாகவே பிரபாகரன் இருக்கிறார் என்கிறார். முன்னால் இராணுவத் தளபதியும் அமைச்சருமான சரத் பொன்சேகோ குறிப்பிடுகையில் மகிந்தவைப்போல் பிரபாகரன் கொடூரமானவர் இல்லை எனக் குறிப்பிடுகிறார்.

மேலும் முன்னாள் இந்திய இரானுவத்தின் உயரதிகாரியான கேணல் ஹரிகரன் பிரபாகரனின் போர்த் திறமைகளை சில வருடங்களுக்கு முதல் புகழ்ந்திருந்தார்.

போர் முடிந்த பின்னரான கடந்த ஏழு ஆண்டுகளாக பிரபாகரன் குறித்தும், விடுதலைப்புலிகள் அமைப்பு குறித்தும் அதன் லட்சியங்கள் குறித்தும் மகிந்த தரப்பினர்கள் மட்டுமன்றி ஏனைய அரசியல், படைத்துறைத் தரப்பினரும் விமர்சனங்களை முன்வைத்த வண்ணம் உள்ளனர்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழ்த் தேசிய மக்கள் முன்னனி, தமிழ் மக்கள் பேரவை போன்ற தமிழ் அமைப்புக்கள் மட்டுமன்றி தென்னிலங்கையின் இருபெரும் அரசியற்கட்சிகளின் வடக்கு கிழக்கு பிரமுகர்களும், சர்வதேச தமிழ்ப் பிரதிநிதிகளும் குறிப்பாக தமிழ்நாட்டில் சீமான், வைக்கோ, நெடூமாறன் போன்ற தமிழ்த்தேசிய பரப்பில் வெளிப்படையாக கருத்துக்களை முன்வைப்பவர்களும் பிரபாகரனை ஒரு கருவியாகவே பார்க்கின்றனர் அல்லது தமது அரசியலுக்கு அவரது பெயரை பயன்படுத்துகிறார்கள்.

இலங்கை அரசியலில் எவர் வேண்டுமானாலும் பிரபாகரனது பெயரை கையில் எடுக்கலாம். அது வேறு விடயம். விடுதலைப்புலிகளும் அதன் தலைமையும் எவ்வாறு செல்வாக்கு பெற்றிருக்கின்றது என்பதை தேர்தல் காலங்களில் பார்க்கலாம். தமிழ்த் தலைமைகள் பிரபாகரனை போற்றிப்பாடி வாக்குப்பிச்சை எடுப்பார்கள். தென்னிலங்கை அரசியல்வாதிகள் பிரபாகரனை தூற்றி வாக்குப்பிச்சை எடுப்பார்கள். பிரபாகரனை வைத்து எந்த அளவுக்கெல்லாம் அரசியல் நடத்தமுடியுமோ அந்த அளவிற்கு நாட்டின் இன்றைய அரசியல் நடைபெறுகிறது.

பிரபாகரன் தனக்குள்ளேயும் தன்னைச் சுற்றியும் கடுமையான ஒழுக்க நெறிகளை பின்பற்றியிருந்தார். விடுதலைப் புலிகள் இயக்கத்தில் பெண் போராளிகளை கண்ணியத்துடன் நடத்தினார். அவர் அனைத்து போராளிகளையும் ஈழத் திருநாட்டின் பிள்ளைகளாகவும் தனது பிள்ளைகளாகவுமே எண்ணினார். எந்த ஒளிப்படத்திலும் பிரபாகரன் மதுபானக் கோப்பையுடன் நாம் கண்டதில்லை. அவர் ஒழுக்கமான தலைவராக இருந்தார். அவர் உலகத்தலைவர்கள் மத்தியில் தனக்கென்று ஒரு தடம்பதித்திருந்தார். பலரும் கற்கவேண்டிய பண்புகள் அவரிடம் உண்டு. பிரபாகரனின் தலைமைத்துவம் இறுதி நிமிட சமர் வரையில் மிகத் திறமையானதாகவே இருந்தது. அவரிடம் நிறையப் பொறுமை இருந்தது. இதுதான் என முடிவெடுத்தால் அவசரப்படமாட்டார். சரியான தருணம் வரை தனது பயணங்களுக்காகக் காத்திருக்கவே செய்வார்.

தமிழ்த் தலைவர்கள் பயங்கரவாதத் தலைவராக பிரபாகரனை பார்க்கவில்லை. தமது இனத்தின் தலைவராகவே ஒவ்வொரு தமிழரும் பார்த்தனர். பிரபாகரன் ஆயுதம் ஏந்துவதற்கு கடந்தகால சிங்கள ஆட்சியாளர்களே காரணம் என்பதை அவர்கள் தற்போது தெரிந்தும் தெரியாமலும் ஒத்துக்கொண்டு வருவதைக் காணக்கூடியதாக உள்ளது.

பிரபாகரன் உலகின் பார்வையில் முள்ளிவாய்க்கால் போர் முடியும் வரையில் பயங்கரவாதியாகவே இருந்தார். ஒடுக்கப்பட்ட அடக்கப்பட்ட மக்கள் சார்ந்து மேற்குலக நிகழ்ச்சி நிரலோடு அவர் ஒத்தியங்கவில்லை. எவருக்கும் அடிபணிவதில்லை. மற்றவர்களின் பேச்சைக்கேட்டு தன்னினத்தை அடகு வைக்கவில்லை. தன்னை நம்பிய தமிழினத்தை விட்டுக்கொடுக்கவும் இல்லை.

இதைத்தான் “A FLECTING MOMENT IN MY COUNTRY ” என்ற நூலில், பெண்ணிய செயற்பாட்டாளரும் மனித உரிமையாளருமான ந.மாலதி , “பிரபாகரனையும் நெல்சன் மண்டேலாவையும் ஓப்பீடு செய்யமுடியுமா? மேற்குலக நிகழ்ச்சி நிரலோடு பிரபாகரன் ஒத்துப்போகவில்லை. மண்டலோ, பிடல்காஸ்டோ, சேகுவேரா, கோசிமின் போன்ற தலைவர்கள் வரிசையில் பிரபாகரன் தனித்துவமானவர்.

தமிழர்களின் விடுதலைப் போராட்டத்துக்கு மட்டுமல்ல உலகெங்கும் போராடும் இனங்களுக்கு மண்டேலாவின் முன்பாதி வாழ்வுதான் எடுத்துக்காட்டேயொழிய, பின்பாதி வரலாறு அல்ல. ஆனால் பிரபாகரனின் வாழ்வு அப்படிப்பட்டதல்ல. போராடும் இனங்களின் ஆன்மா அது. உலக அரங்கை நிர்மூலம் செய்து அது போராட என்றும் உந்துதலாகவேயிருக்கும் எனவே பிரபாகரனை மண்டேலாவுடன் ஒப்பிடுவது தவறு” என விவரித்துள்ளார்.

இத்தகைய பின்னணியில் மேஐர் கமால் குணவர்த்தன விடுதலைப்புலிகளை அழிப்பதற்கு முன்னிலை வகித்த தளபதி ஆவார். பிரபாகரனை ஒருபுறம் பாராட்டி இருந்தாலும் யுத்தகளத்திலே பிரபாகரனையும் விடுதலைப் புலிகளையும் அழிப்பதற்கு முன்னின்று பாடுபட்டவர் இவராவார்.

கோகுலன்