கல்லறையிலும் நிம்மதியாய் உறங்கவிடாக் கயவர் கொண்ட நாடு !

ltte-cemetriesஇன்று மாவீரர் நாள். தமிழ் மக்களின் விடுதலைக்காக தம் அருமந்த உயிரைத் தியாகம் செய்தவர்களை நினைவுகூருகின்ற நாள்.

மாவீரர் துயிலும் இல்லங்களில் விளக்கேற்றி அவர்களை நினைவுகூருகின்ற அந்த நாளுக்கும் தடை விதிக்கப்பட்டது.

மாவீரர்கள் துயிலும் இல்லங்களைத் தகர்த்தெறிந்து அந்த நினைவுகளுக்கே இடமிருக்கக் கூடாது என்று நினைத்த கயவர்கள் வாழும் இந்த நாட்டில் கல்லறையில் கூட நிம்மதியாக இருக்க முடியாது என்றாயிற்று.

துட்டகைமுனுவின் பரம்பரை என்று மார்தட்டுகின்றவர்கள் எல்லாளன் மன்னனை வணங்கிச் செல்ல வேண்டும் என்ற கட்டளை பிறப்பித்த துட்டகைமுனுவின் பரம்பரையாயின் மாவீரர் துயிலும் கல்ல றைகளை உடைத்தெறிந்தது ஏன்? போரில் விழுப்புண் அடைந்து உயிர் துறந்தவனை மாவீரனாகப் போற் றும் பண்பாடு உலகம் முழுமைக்கும் உரியது.

எனினும் அந்தப் பண்பாடு இலங்கையில் தமிழர்களுக்கு மட்டும் மறுக்கப்பட்டது ஏன்? என்று கேட்பதற்கு இன்று யாருமே நமக்கு இல்லை என்றாயிற்று.

தமிழர்கள் தங்கள் உரிமைக்காகப் போராடவேண்டிய சூழ்நிலையைத் தோற்றுவித்தவர்கள் யார் என்பதை மறந்து அல்லது அதுபற்றி அறிந்து கொள்ளாமல் தமிழ் இளைஞர்கள் அரசுக்கு எதிராக ஆயுதம் ஏந்தினார்கள் என்று கூறுவது எந்தவகையிலும் நியாயமாகாது.

காலத்துக்குக் காலம் இந்த நாட்டில் தமிழ் மக்கள் பேரினவாதிகளால் கொன்றொழிக்கப்பட்டனர். தமிழ் அரசியல் தலைவர்கள் இதுபற்றி இலங்கைப் பாராளுமன்றத்தில் குரல் கொடுத்தனர். அகிம்சை வழியில் போராட்டம் நடத்தினர்.

தந்தை செல்வநாயகம் அவர்கள் இலங்கைப் பாராளுமன்றத்தில் மிகத் தெளிவாகக் கூறினார். தமிழர்களின் பிரச்சினைக்குத் தீர்வு காணத் தவறினால் தமிழ் இளைஞர்கள் ஆயுதம் ஏந்திப் போராடுவார்கள் என்று தந்தை செல்வநாயகத்தின் தீர்க்க தரிசனத்தை அன்றைய சிங்கள் ஆட்சியாளர்கள் ஏற்றிருந்தால் அதைக் கவனத்தில் எடுத்து சீர்படுத்தியிருந்தால் இந்த நாட்டில் மிகப்பெரிய மனித அழிவுகள் இடம்பெறாமல் இருந்திருக்கும்.

நாட்டில் நடந்த யுத்தத்தில் தமிழ், சிங்கள, முஸ்லிம் மக்கள் உயிரிழக்க வேண்டியதாயிற்று என்ற நிலைமை ஏற்படுவதற்கு அடிப்படைக் காரணம் சிங்கள ஆட்சியாளர்கள் என்பது மறுக்க முடியாத உண்மை.

மாவீரர்கள் விடுதலைப் புலிகள் என்று கூறுவோர் மாவீரர்களை – விடுதலைப் புலிகளை உருவாக்கிய வர்கள் சிங்கள ஆட்சியாளர்கள் என்பதை மறந்து விடக்கூடாது.

விடுதலைப் புலிகள் இருந்த காலத்தில் அவர்களுடன் பேசி வடக்கையும் கிழக்கையும் இணைக்கவும் பொலிஸ், காணி அதிகாரங்களைத் தரவும் தயாராக இருந்த இலங்கை ஆட்சியாளர்கள் இன்று அதனை வழங்க மறுக்கின்றனர்.

இப்போது விடுதலைப் புலிகள் இல்லை. அப்படியானால் ஏன்? தமிழ் மக்களுக்கு உரிமை கொடுக்க வேண்டும் என்று இந்த நாட்டை ஆட்சி செய்தவர்கள் கேட்கிறார்கள் என்றால்,

தமிழர்கள் ஆயுதம் ஏந்தினால்தான் நாங்கள் உரிமை கொடுப்போம் என்ற மனநிலை பேரினவாதிகளிடம் இன்னமும் இருப்பது உறுதியாகிறதல்லவா?

தங்களைத் திருத்தி இந்த நாட்டில் இன ஒற்றுமையை ஏற்படுத்த விரும்பாத பேரினவாத ஆட்சியா ளர்களின் கடைகெட்ட வேலைதான் மாவீரர் துயிலும் இல்லங்களைத் தகர்த்தெறிந்த அநியாயம்.

மாவீரர்கள் கல்லறையில் இல்லை. தமிழ் மக்களின் இதயவறைகளில் – ஒவ்வொரு மூச்சிலும் வாழ்கின்றார்கள் என்பதே உண்மை.

இதை உணராதவர் தியாகம் உணராதவர்கள் என்பதே பொருளாகும்.

வலம்புரி