முன்னாள் போராளிகளின் அவலநிலை -5 !

தமிழ இனத்திற்காக தம்மை அர்ப்பணித்தவர்கள்..
அனைவராலும் கைவிடப்பட்ட நிலையில்…
வலி சுமந்தவர்கள், வாழ வழியின்றி வாடுகின்ற சோகம்.. என் இனமே என் சனமே..!!

நன்றி
IBC Tamil

*
நாட்டுக்காகப் போராடி சற்கர நாற்காலியே வாழ்க்கையாகிப்போன எங்களுடன் ஒரு நிமிடம் பேசமுடியாதவர்களா எங்கள் மக்கள் பிரதிநிதிகள்?

கடந்த 24ஆம் திகதி கிளிநொச்சியில் நடைபெற்ற மாவட்ட ஒருங்கிணைப்புக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக உயிரிழை என்ற அமைப்பினர் சென்றிருந்தனர்.

யுத்தத்தில் ஈடுபட்டு, முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்டு இடுப்புக்குக் கீழ் இயங்காதவர்களை உள்ளடக்கிய அமைப்பே உயிரிழை அமைப்பாகும்.

இவர்கள் மருத்துவ வசதியுடன் தங்கியிருப்பதற்கான இல்லம் ஒன்றினை அமைப்பதற்கு அனுமதி பெறும் நோக்கிலேயே மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்திற்குச் சென்றனர்.

உயிரிழை அமைப்பின் சாா்பாக அதன் செயலாளா் சு.இருதயராஜாவும் அவருக்கு உதவியாக ஒரு இளைஞனும் மாவட்டச் செயலகத்திற்கு சென்றிருந்த நிலையில் மாவட்டச் செயலக நிா்வாகம் அவா்களை முன் அனுமதி பெறாமல் கூட்ட மண்டபத்திற்குள் அனுமதிக்க முடியாது என மறுத்துவிட்ட நிலையில் அவா்கள் தகவலை தங்களின் நிா்வாகத்திற்கு தெரியப்படுத்தி விட்டு தாங்கள் கொண்டு சென்ற கோரிக்கை கடிதத்தோடு மாவட்ட செயலக வாசலில் சக்கர நாற்காயில் கூட்டத்திற்கு சமூகமளிக்கும் மக்கள் பிரதிநிதிகளுக்கு வழங்க காத்திருந்தனா்.

இதன்போது, முதலாவதாக வடக்குமாகாண கல்வி அமைச்சர் கூட்டத்திற்கு சமூகமளித்திருந்தபோது சற்கர நாற்காலியிலிருந்து கோரிக்கைக் கடிதத்தை நீட்டியபோது ஆ… என்ன? எனக் கேட்டுவிட்டு பிரத்தியேகச் செயலாளரைப் பெற்றுக்கொள்ளுமாறு கூறிவிட்டுச் சென்றுள்ளார்.

அடுத்த இணைத்தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் சமூகமளித்தபோது, அவரிடம் தமக்கு கூட்டத்தில் கலந்துகொள்வதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளமை தொடர்பாகத் தெரியப்படுத்தினோம். அத்துடன் தமக்கு கூட்டத்தில் அனுமதி மறுக்கப்பட்டமை தொடர்பாக தொலைபேசியூடாகவும் தெரியப்படுத்தியிருந்தோம். ஆனால் நாம் வாசலில் காத்திருந்தபோது அவர் எம்மைக் கணக்கிலெடுக்காது சென்றுவிட்டார்.

அடுத்தாக வடக்கு மாகாண முதலமைச்சா் சமூகமளித்த போது வாசலில் நின்று கோரிக்கை கடிதத்தை கொடுத்துள்ளனா் அவரும் நடந்தவாறே பாா்கி்றேன் என்று கூறியபடி தனது பிரத்தியேக செயலாளரிடம் கடிதத்தை கொடுக்குமாறு கூறியவாறே மண்டபத்துள் பிரவேசித்தார்.

அடுத்ததாக இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் பிரவேசித்தபோது அவரிடமும் கோரிக்கைக் கடிதத்தை நீட்டியபோது அதனைப் பெற்றுக்கொண்ட அவர் சில நிமிடங்கள் உரையாடிவிட்டு அவர்களது தொலைபேசி இலக்கத்தைப் பெற்றுச் சென்றார்.

அடுத்ததாக அங்கஜன் இராமநாதன் பிரவேசித்தபோது அவரிடமும் கோரிக்கைக் கடிதம் வழங்கியபோது அவர் நீண்டநேரம் உரையாடிவிட்டு நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்துவிட்டுச் சென்றுவிட்டார்.

தாம் யாரையெல்லாம் நம்பி அங்கு சென்றோமோ அவர்கள் தம்மை மதிக்காது அவமதித்துள்ளதாகக் கவலை வெளியிட்டுள்ளனர்.

‘நாட்டுக்காக போராடி முள்ளம் தண்டு வடம் பாதிக்கப்பட்டு இடுப்புக்கு கீழ் இயங்காது சக்கர நாற்காலியே வாழ்க்கை என்று இருக்கின்ற எங்களுடன் பொறுமையாக ஒரு நிமிடம் கூட பேச முடியாதவா்களா எங்களின் பிரதிநிதிகள்’ என பாதிக்கப்பட்டவர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.