மலேசியா சிறையில் உயிரிழந்தவர் முன்னாள் போராளி


மலேசியாவில் இருந்து கப்பல் மூலம் மூன்றாம் தரப்பு நாட்டிற்கு செல்ல முயன்று, மலேசிய குடிவரவு திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு மரணமடைந்த இலங்கை அகதி முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர் என தெரியவந்துள்ளது.

மன்னார் மாவட்டத்தின் மடு பிரதேச சபைக்குட்பட்ட பெரியபண்டிவிரிச்சான் பகுதியை சேர்ந்த 30 வயதுடைய ஜீட் மயூரன் சில தினங்களுக்கு முன் மலேசிய குடிவரவு திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில் மரணமடைந்துள்ளார்.

இவருக்கு மூச்சுத் திணறல் பிரச்சினைகள் இருந்ததாகவும் அதுவே இவரது மரணத்துக்கு காரணம் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

குறித்த நபர் 2010 ஆம் ஆண்டு காலப்பகுதியிலேயே மலேசியாவிற்கு சென்று தஞ்சம் கோரியவராவார். இவரைப் போன்று 3000-க்கும் அதிகமான அகதிகள் மலேசியாவில் தஞ்சமடைந்துள்ளனர்.

இந்நிலையில் குறித்த ஜீட் மயூரன் கடந்த 2009 ஆம் ஆண்டு காலப்பகுதியில் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பில் உறுப்பினராக செயற்பட்டுள்ளதாக அறிய முடிவதோடு, இவரின் மரணம் தொடர்பில் சந்தேகங்களும் எழுப்பப்பட்டுள்ளது.