பெரியார், அம்பேத்கர் கூட ஈழத்திற்கு தேவைப்படுபவர்கள் இல்லை !

கருணாநிதியின் மறைவையடுத்து நாம் சில விமர்சனங்களை முன் வைத்த போது பல தமிழக நண்பர்கள் வந்து டிசைன் டிசைனாகச் சண்டை போட்டார்கள்..

அதில் ஒரு நண்பரின் முழக்கம் இது..” இது பார்ப்பானுக்கும் எங்களுக்குமிடையிலான யுத்தம். ஈழத் தமிழர் தலையிட வேண்டாம். திமுகவால்தான் பார்ப்பானை வீழ்த்த முடியும். தமிழகத்திலிருந்து மட்டுமல்ல ஈழத்திலிருந்தும் பார்ப்பனை விரட்ட உங்களுக்கும் சேர்த்து நாம் போராடுகிறோம்” என்றார்.

எனக்கு பத்து சுனாமி ஒன்றாக அடித்தது போலாகிவிட்டது.

திமுக பார்ப்பானோடு யுத்தம் புரிகிறதா? அல்லது விளக்கு பிடிக்கிறதா? என்ற விளையாட்டுக்குள் நாம் வரவில்லை..

அடப்பாவிகளா? ஈழத்திலே எங்கேயடா பார்ப்பான்?

இருக்கிறதே நாலு பிராமணர்கள்..அவர்களும் பூசை வைச்சமா! பொங்கல் சாப்பிட்டமா! என்று இருக்கிறார்கள்.

பூசை வைக்கிற உரிமைக்குக் கூட அவர்களோடு போராட முடியாது. காரணம், ஈழத்தில் ஆலயங்களில் பூசை செய்பவர்கள் 90 விழுக்காடு சைவ மரபில் வந்த அர்ச்சகர்களே..

போதாததற்கு கதிர்காமம், செல்வச் சந்நிதி உட்பட பல தொன்ம ஆலயங்களில் பூசை செய்பவர்கள் மீனவ சமுதாயத்திலிருந்து வந்தவர்கள்.
அவர்களை ‘கப்புறாளை’என்போம்.

அதனால்தானே பெரியார், அம்பேத்கர் கூட ஈழத்திற்கு தேவைப்படுபவர்கள் இல்லை என்கிறோம்.

வரலாறு தெரியாமல் தரப்படுகிற ஆதரவு கூட ஆபத்தானது.

அதற்கு இதுவொரு உதாரணம்.

புரட்சியாளன் – கோட்பாட்டாளன்.

தலைவர் பிரபாகரன் தவிர்ந்து ஈழத்தில் ஆயுதப்போராட்டத்தை முன்னெடுத்த அனைத்து தலைவர்களும் தமது போராட்டத்தை எதோ ஒரு வகையில் உலகின் ஏதோ ஒரு போராட்டத்துடன் அடையாள்ப்படுத்தும் முனைப்பில் இருந்தார்கள். அந்தந்த போராட்ட தலைவர்களுடன் தம்மை அடையாளப்படுத்தவும் புகுந்தார்கள். ஒரு சில தலைவர்கள் இன்னும் ஒரு படி மேலே அந்தந்த தலைவர்கள் போல் புகைப்படம் எடுத்தும் மகிழ்ந்தார்கள்.

மக்களுக்கும் சீனப் புரட்சி, ரஸ்யப்புரட்சி, தொடக்கம் கியூபா போராட்டம், வியட்னாம் போராட்டம் வரை வகுப்பெடுத்தார்கள். கொம்மியூனிசம், மார்க்கிசம் தொடங்கி உலகின் அனைத்து தத்துவங்களும் கோட்பாடுகளும் அவர்கள் பேராட்டத்தை வழி நடத்துவதாக பறை சாற்றினார்கள்.

இது தவறல்ல. ஆனால் அவர்கள் தமக்கு என்று தனித்துவமான வழிமுறையை கடைப்பிடிக்காமல் இதற்குள்ளேயே தேங்கி நின்றதுதான் அவர்கள் செய்த வரலாற்று தவறு. அதுதான் பின்னாளில் தமது நோக்கத்தையே மறந்து அரசுகளின் கைப்பாவைகளாகி அழிந்தும் போனார்கள்.

பிரபாகரன் ஏனைய தலைவர்களிடமிருந்து வேறுபடும் இடம் இதுதான். அவர் தனது போராட்ட வழிமுறைகளை உலக பேராட்டங்களிலிருந்தோ தத்துவங்களிலிருந்தோ தேடவில்லை.. மாறாக மக்கள் தொகுதிக்குள் அதை தேடினார். அப்போதே அவர் தனித்துவமான ஒரு கோட்பாட்டை உருவாக்கும் ஆளுமையாக உருவெடுத்துவிட்டார்.

இதன் வழி தனித்துவமான ஒரு புரட்சியாளனாக உலகிற்கு அறிமுகமான பிரபாகரன் நந்திக்கடலில் வைத்து ஒரு நவீன கோட்பாட்டாளனாகவும் தன்னை மறு அறிமுகம் செய்கிறார். முள்ளிவாய்க்கால் வரை புரட்சியாளனாக பயணித்த அவர் நந்திக்கடல் நோக்கி பயணித்தபோதே அந்த வடிவ மாற்றம் நிகழ்ந்து விடுகிறது.

முள்ளிவாய்க்கால் மற்றும் நந்திக்கடல் என்பது ஒரு கிட்டத்தட்ட ஒரு நிலப்பரப்பை குறிக்கும் இருவேறு பெயர்கள். ஒரு அங்குலம்தான் இந்த இரு நிலத்தையும் துண்டாடுகிறது. ஆனால் அரசியல்ரீதியாகவும் வரலாற்றுரீதியாகவும் முற்றிலும் வேறுபட்ட செய்தியை இந்த நிலங்கள் பதிவு செய்கின்றன.
பெயருக்கேற்றாற் போல் முள்ளி ‘வாய்க்கால்’ ஒரு தேங்கிய அரசியலையும் நந்திக்’கடல்’ எல்லைகளற்று பரந்து விரியும் அரசியலையும் முன்மொழிகின்றன.

இது புரியாமல் கடந்த ஏழு ஆண்டுகளாக நாம் முள்ளி’வாய்க்காலோடு’ தேங்கி நிற்கிறோம். ஆனால் நாம் விடுதலையை தேட வேண்டிய இடம் நந்தி ‘கடலில்’ தான் கிடக்கிறது. எமக்கு மட்டுமல்ல போராடும் இனங்கள் நவீன அரசுகளை எதிர்கொள்ளும் சூக்குமத்தை விழுங்கியபடி ‘நந்திக்கடல்’ அமைதியாகக் கிடக்கிறது.
ஒரு கோட்பாட்டாளன் உருவான கதையின் பின்புலம் இது. வரலாறு ”பிரபாகரனியம்’ என்று அதை பதிவு செய்து கொள்கிறதுப

பரனி

மீள்பதிவு

Comments are closed.

Up ↑