உயிரை அர்ப்பணித்த கடமை வீரன் .!

“குழந்தையொன்றை காப்பாற்றும் முயற்சியில் குணேஸ்வரன் உயிரிழந்தார்”

2005/01/23 ஆம் நாள், ஈழநாதம் பத்திரிகையில் வந்த பதிவு குணேசின் கதையை சொல்லிநின்றது.

“சுனாமி அடித்தபோது, குணேஸ் அண்ணை மரத்தில் ஏறிவிட்டார். ஒரு தாயும் பிள்ளையும் தண்ணீரில் தத்தளிப்பதை கண்டு, அவர்களை காப்பாற்ற இறங்கிப் போனார்…திரும்பி வரவில்லை!!” அப்பேரிடரில் உயிர்தப்பிய உடன் பணியாளரின் கூற்று இது.

வாழ்நாள் முழுவதும் மக்களுக்காகவே வாழ்ந்து, இறுதியில் மக்களுக்காகவே தனது உயிரையும் துறந்த குணேஸ்வரன், யாழ் மாவட்டம், வடமராட்சியின் தொண்டைமானாறு கெருடாவில் என்ற கிராமத்தில் , கந்தசாமி,தெய்வேந்திரராணி தம்பதியினருக்கு மகனாக, 1972/11/30 ஆம் நாள் பிறந்தார்.யாழ்/தொண்டைமானாறு வீரகத்திப்பிள்ளை மகாவித்தியாலயத்தில் இணைந்து பள்ளிப்படிப்புகளை நிறைவு செய்திருந்தார்.
தமிழ் மக்களின் விடுதலைக்காக போராடிய தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் மீது ஆழமான பற்றும், நம்பிக்கையும் கொண்டிருந்த இவர், தனது பள்ளிப்பருவம் முதலாகவே, விடுதலைப் புலிகளின் ஆதரவாளராக செயற்பட்டு வந்தார்.

1991 ஆம் ஆண்டு,தமிழீழ காவல்துறை ஆரம்பிக்கப்பட்ட வேளை, வடமராட்சி அரசியல்துறையினரூடாக தமிழீழ காவல்துறை பயிற்சிக்காக அனுப்பி வைக்கப் பட்டிருந்தார். பயிற்சியில் இணைக்கப்பட்ட இவருக்கு 19ஆம் எண் வழங்கப்பட்டிருந்தது. பயிற்சிகளின் முடிவில்,காவல்துறை உறுப்பினராக கடமைகளை ஆரம்பித்த இவர், யாழ்ப்பாணம், முல்லைத்தீவு மற்றும் திருமலை மாவட்டங்களில் இயங்கிய தமிழீழ காவல்துறையின் காவல் பணிமனைகளில் பணியாற்றியிருந்தார்.

பின்னர் பதவிநிலை உயர்வுபெற்று ஒட்டுசுட்டான் காவல் பணிமனை பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார். நெருக்கடி மிக்க போர்க்காலத்தில், ஒட்டுசுட்டான், முத்து ஐயன்கட்டு பகுதி மக்களுக்கு இவர் ஆற்றிய சேவை எல்லோராலும் வியந்து பார்க்கப்பட்டது. நிர்வாகத்தின் பாராட்டுகளையும் பெற்றுக் கொண்டார்.
இவ்வேளையில், முல்லைத்தீவு காவல் பணிமனைக்கு, மக்களுடன் நல்லுறவை பேணக்கூடிய, ஒரு காவல் பணிமனை பொறுப்பாளரை அனுப்பிவைக்கும்படி, கடற்புலிகளின் சிறப்புத்தளபதி திரு.சூசை அவர்களால் கேட்டுக்கொள்ளப்பட்டதற்கமைய, காவல்துறை பொறுப்பாளராக இருந்த திரு.நடேசன் அவர்களால் தெரிவு செய்து அனுப்பி வைக்கப் பட்டிருந்தார் குணேஸ்வரன்.

முல்லைத்தீவிலும் தனது சிறப்பான அணுகுமுறைகள் மூலம் மக்களினதும், போராளிகளினதும் பேரன்பை பெற்றிருந்தார்.
25/12/2004 நத்தார் தினமன்று மாலை, முல்லைத்தீவு சென்று, குணேஸ்வரனை சந்தித்து, நத்தார் தின நிலைமைகள் தொடர்பில் ஆராய்ந்திருந்தேன்.
மறுநாள் காலை, முல்லைத்தீவிற்குள் கடல் புகுந்துவிட்டதாக அறிந்து, விரைந்து சென்று பார்த்த போது எல்லாமே அழிந்துபோயிருந்தது. உயிரற்ற உடல்களே எங்கும் காணப்பட்டன. காயமடைந்தவர்கள் துடித்துக்கொண்டிருந்தனர். அவற்றில் ஒன்றாக, குணேசின் உயிரற்ற உடலும், ஒரு குழந்தையின் உடலைப் பற்றிப் பிடித்த படியே காணப் பட்டிருந்தது.

அப்பேரிடரில், தேவப்பிரியா, ஜெகதீஸ்ஸ்வரி ஆகிய இன்னுமிரண்டு காவல்துறை பெண் உறுப்பினர்களும் சாவடைந்திருந்தனர்.
கடமையின் போதான சாவு என்பதால், குணேஸ்வரனுக்கு காவல்துறை ஆய்வாளர் நிலை வழங்கி மதிப்பளிக்க பட்டிருந்தது.
ஆண்டுகள் பல கடந்தாலும், ஆழிப்பேரலையில் உயிரிழந்த நம்மவர்களை மறக்க முடியவில்லை. இப்பேரிடரில் இறந்த அனைவரையும் மனதில் நிறுத்தி அவர்களுக்காக தலை சாய்த்து வணக்கம் செலுத்துகின்றேன்.

– இ.ரஞ்சித்குமார்
23/12/2019