புலிகளின் வேவு வாழ்க்கையை கண்முன் நிறுத்தும் அப்பால் ஒரு நிலம் !

புதிதாக ஒரு கதைக்களனைத் தேர்ந்தெடுக்கும்போதே, ஒரு நாவல் பாதி வெற்றியடைந்து விடுகிறது. சொல்ல வந்ததை சரியாகச் சொல்லி விட்டால் முழு வெற்றியையும் பெற்று விடுகிறது. பல எழுத்தாளர்கள் புதியதொரு கதைக்களனைத் தேர்ந்தெடுத்துவிட்டு, சொல்லும் முறையில் கோட்டை விட்டு விடுவார்கள். ஆனால், கதைக்களன், சொல்லும் முறை இரண்டிலும் கோட்டை கட்டியிருக்கிறார் குணா.கவியழகன்.

கிளிநொச்சியை சிங்களர்களிடமிருந்து மீட்க, புலிகள் மேற்கொண்ட வேவு நடவடிக்கைகள்தான் கதையின் களம். இதைச் சுற்றி விடுதலைப் புலிகளின் அன்றாட வாழ்க்கை, பயிற்சி முறைகள், இயக்க செயல்பாட்டு முறைகள், போர்க்குணம், போரினால் அலைக்கழிந்த எளிய மனிதர்களின் வாழ்க்கை ஆகியவற்றை மிக நெருக்கமாக நம்முன் காட்சிப்படுத்துகிறார் குணா.கவியழகன்.

குணா.கவியழகனின் வார்த்தைகளில் பெருமிதமோ, மிகைப்படுத்தலோ இல்லை. அந்தப் போராளிகளின் வாழ்க்கைக்குள் நம்மைக் கைபிடித்து அழைத்துச் செல்கிறார். ஆங்கிலப் போர்ப் படங்களில் வரும் போர் வீரர்கள் போல் அசகாய சூரர்களாகவோ, நாடி நரம்பெல்லாம் தேசபக்தி புடைத்து, எதிரிகளை நிலைகுலையச் செய்யும் வீராதி வீரர்களாகவோ இல்லாமல், இயல்பான மனிதர்களாக விடுதலைப் புலிகளை உலவ விட்டிருக்கிறார்.

அமைப்பில் இளையவர்கள் சேர்வதற்கான காரணம், போருக்கான நியாயம், சிங்களப் படையினரும், புலிகளும் ஒருவர் மீது ஒருவர் வைத்திருந்த மதிப்பீடுகள் என பல செய்திகளை குணா.கவியழகன் மிக நுட்பமாக சொல்லிச் செல்கிறார்.

நாவலின் அமைப்பும், போக்கும் நம்மைக் கட்டிப் போடுகிறது. எந்தவொரு இடத்திலும் தொய்வு இல்லை. தேவையான அளவு விவரணைகளும், வர்ணிப்புகளும் எளிதாக நம்மை நாவலுக்குள் உள்ளிழுத்துக் கொள்கின்றன.

இலக்கியம் என்ற பெயரில், விலைக்கு வாங்கப்பட்ட எழுத்தாளர்களால் விடுதலைப் புலிகளைப் பற்றிய எதிர்மறையான செய்திகளே தமிழ் இலக்கியமாக அதிகம் பரப்பப்பட்டு வந்த சூழலில், இந்நாவல் இரண்டு முக்கியமான செய்திகளைத் தொட்டுச் செல்கிறது. ஒன்று, புலிகள் இயக்கத்துக்கும் மக்களுக்கும் இடையே இருந்த நெருக்கம். மற்றொன்று, போரினால் சிதைந்த மக்களின் வாழ்க்கையை சீர்படுத்த, முறையானதொரு அரசு போன்று புலிகள் இயக்கம் காட்டிய அக்கறை.

இயக்கத்தில் சேர்ந்த வீரர்களின் குடும்பங்களை, தங்களது குடும்பமாகவே புலிகள் அனைவரும் கருதியது; அந்தப் பக்கமாக செல்லும் புலிகள், அந்த வீரர்களின் வீடுகளுக்கு சென்று வருவது, குடும்பத்தினரும் தங்களது பிள்ளைகள் போலவே, புலிகள் அனைவரையும் பாவித்து உணவு வழங்குவது; புலிகள் பெறும் சிறுவெற்றியைக் கூட மக்கள் அனைவரும் கொண்டாடிக் களிப்பது, போரினால் இடம்பெயர்ந்தவர்களுக்கு நிலம் வழங்குதல், தொழில் வாய்ப்பு நல்குதல், குழந்தைகளுக்கு படிக்க வசதி ஏற்படுத்திக் கொடுத்தல் ஆகியவற்றில் புலிகள் காட்டிய அக்கறை, இயக்கத்தில் இருந்த கட்டுப்பாடுகள், ஒழுக்க விதிகள் வளர்ச்சிப் போக்கில் படிப்படியான மாற்றம் பெறுவது ஆகியவை மிக அழகாக சித்தரிக்கப்பட்டிருக்கின்றன.

பிரமிப்பை ஏற்படுத்தும் இன்னொரு விஷயம், ஓர் அமைப்பாக புலிகள் செயல்பட்ட விதம். கட்டளைப் படிநிலை, குறைந்த படைக்கருவிகள், வீரர்கள் இருந்தாலும் இலக்கை அடைவதில் புலிகளின் திட்டமிடல், வீணாக ஓர் உயிரிழப்பு நேர்ந்துவிடக் கூடாது என்பதில் இயக்கம் காட்டிய அக்கறை, உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்பதில் புலிகள் காட்டிய தீவிரம், ஒவ்வொரு படைப்பிரிவுக்கும் வழங்கப்பட்ட சிறப்பான பயிற்சி, போரில் சாதித்துக் காட்டியவர்களுக்கு வழங்கப்பட்ட மரியாதை, பதவி உயர்வு, காயமடைந்த வீரர்களுக்கு இயக்கம் வழங்கிய மாற்றுப் பணிகள் என நாவலில் ஆங்காங்கே தொட்டுக் காட்டப்படும் செய்திகள், உலகின் சிறந்ததொரு இராணுவ அமைப்பாக புலிகள் இயக்கம் வளர்ந்திருந்ததைக் காட்டுகிறது.

போர் இலக்கியத்தில் மட்டுமல்ல, தமிழ் இலக்கியத்திலும் உன்னதமான ஒரு நாவலாக ‘அப்பால் ஒரு நிலம்’ அமைந்திருக்கிறது. குணா.கவியழகனுக்கு எழுத்து நன்கு வசப்பட்டிருக்கிறது. தனது எழுத்தின் மூலம் நாவலின் முதல் பக்கத்திலிருந்து இறுதிப் பக்கம் வரை வாசகனை தனது கட்டுக்குள் வைத்திருக்கும் சூட்சுமம் அவருக்குத் தெரிந்திருக்கிறது. காதல், வீரம், பாசம், தியாகம், நட்பு என அனைத்து உணர்வுகளையும் தனது எழுத்தின் வழி வாசகனுக்குக் கடத்தத் தெரிந்திருக்கிறது. எந்த இடத்தில் விவரிக்க வேண்டும், எந்த இடத்தில் குறிப்பால் உணர்த்த வேண்டும், எந்த இடத்தில் சொல்லாமல் புரிய வைக்க வேண்டும் என்பதும் அவருக்குத் தெரிந்திருக்கிறது.

வேவுப் படை குறித்தே இவ்வளவு நுட்பமான செய்திகளையும், சம்பவங்களையும் குணா.கவியழகனால் தர முடிகின்றது என்றால், அவரிடம் சொல்வதற்கு இன்னும் நிறைய இருக்கிறது என்பதை உணர முடிகிறது. வயதிலும் இளையவர் என்பதால், அவரிடம் இன்னும் இதுபோன்ற பல நாவல்களை எதிர்பார்க்கலாம். மூன்று நாவல்களிலேயே தமிழ் இலக்கியப் பரப்பில் அழுத்தமான முத்திரையைப் பதித்துவிட்ட குணா.கவியழகன், அடுத்தடுத்து வரும் படைப்புகளில் சிகரம் தொட்ட தமிழ்ப் படைப்பாளிகளில் ஒருவராக இருப்பார் என்பதில் எந்தவொரு சந்தேகமும் இல்லை.

அப்பால் ஒரு நிலம்
குணா.கவியழகன்
வெளியீடு: தமிழினி பதிப்பகம்,
25-ஏ, தரைத்தளம், முதல் பகுதி, ஸ்பென்சர் பிளாஸா,
769, அண்ணா சாலை, சென்னை – 2. தொலைபேசி: 044-28490027
பக்கம் – 269, விலை – ரூ.240

– கீற்று நந்தன்

துயர் கவிந்த சரிதையில் அழுத்தி பதியும் நிழல் – அப்பால் ஒரு நிலம்

குணா கவியழகனின் நஞ்சுண்ட காடு, விடமேறிய கனவு முதலான நாவல்களைக் கடந்து வெளிவந்த நாவலே அப்பால் ஒரு நிலம். ஈழத்தின் ஆனையிறவு, பரந்தன், கிளிநொச்சியின் வன்னிக்களமுனை அப்பட்டமாக வெளிப்படுத்தும் இந்நாவல் வேவுகாரர்களின் வாழ்வை உணர்வின் தளத்தில் சித்திரிக்கிறது. செங்கையாழியானின் ‘சாம்பவி’ வேவு புலிகளை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட முதல் ஈழத்து நாவல் என்றாலும் அதில் யதார்த்தம் இருக்கவில்லை. உணர்வின் கூர்மையை விட கதை சொல்லியின் கற்பனையே அதில் விஞ்சி நின்றது. குணா கவியழகனின் இந்நாவல் சம்பவங்களின் வாயிலாக மக்களின், போராளிகளின் அனுபவங்களை உணர்வுத் தளத்தில் சித்திரிக்கிறது. வேவுப் போராளி ஏனைய போராளிகளில் வித்தியாசமானவன். அவனின் சிந்தனை மற்றவர்களின் சிந்தனைகளைப் போலிருக்காது. அவன் தனித்துவமானவன். தனக்கென எல்லைகளை வகுத்துக் கொண்டவன். போருக்கு பழக்கப்பட்டவன். துன்பங்களைச் சுமந்தவன். காதலை, காமத்தை கடந்து எதிர்காலத்தைச் சிந்திப்பவன். குடும்ப உறவுகளை கடந்து சிந்திப்பவன். தன்னலமற்றவன். தாயக வேட்கைமிக்கவன்.

இவ்வுணர்வுகளின் வடிவமே நாவலில் வரும் மணி இ வீரா என்ற போராளிகள்.

கிளிநொச்சி களமுனைக்கு சென்று வேவு நடவடிக்கையின் போது போராளிகள் படும் அல்லல்களை குணா கவியழகன் உணர்வு பூர்வமாகவும் இதய சுத்தியோடும் விபரிக்கிறார். களமுனைகளும் போராளிகளின் தலைவர்கள் வகுக்கும் வியூகங்களும் குணா கவியழகன் மூளையின் செயற்றிரன் கொண்டு படைக்கப்பட்டாலும் வீரனின் தாயார் வதனா, மணியின் காதலி அருளினி முதலான பாத்திரங்கள் குணா கவியழகன் உணர்வின் மையத்தில் எழும் பாத்திரங்கள்.

வேவுக்கு போகும் முன் தாயைச் சந்திக்க வரும் வீரா அத்தாயின் அன்புக்குள் கட்டுண்டு தன்னை இழக்கிறான். அவன் தங்கியிருக்கும் மூன்று நாளில் தாய் கஸ்டப்படக்கூடாது என நினைத்து அவளின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றும் சராசரி மகனாக செயற்படுகின்றான். இது வீராவின் வாழ்க்கையன்று. களத்தில் தம்மைக் காவு கொடுக்க முன் தாய் வீடு சென்று தம் இன்னுயிரை நீத்த போராளிகளின் வாழ்க்கை. நேசத்தின் ஆழ் சுளிப்பிலில் இருந்து விடுபட்டு களத்துக்கு செல்ல முற்படும் தம்மகவுக்கு எழைத்தாய் கொடுக்கும் சிற்றூண்டிகள் தம்மகனுக்கு மட்டுமானதல்ல. அவன் முகாமில் தங்கியிருக்கும் ஏனைய போராளிகளுக்குமானவை. என்பதை இந்நவீனம் மக்களின் நுண்ணுணர்வுத் தடத்தில் விபரிக்கிறது.

ஒரு போராளியின் தாய் ஒரு மகனுக்கு சொந்தமானவல்ல. எல்லா போராளிகளுக்கும் சொந்தமானவள். குணா வெளிப்படுத்தும் வதனா பாத்திரம் வன்னி மண்ணுக்குள் இன்றளவும் நம் கண்முன் உலாவும் உணர்வுபூர்வமான தாய்ப் பாத்திரம். கணவனையிழந்து தம்முறவுகளைப் பலி கொடுத்து காமத்துக்கும் சமூகத்துக்கும் இடையில் அல்லாடும் எத்தனையோ தாய்மார்கள் வதனாவைப் போல் உறவிழந்து அநாதையாய் நிர்க்கதியாய் நிற்கின்றனர்.

தவறுகள், குற்றங்கள் நிகழும் போது போராளிகள் தலைமை குழுக்களால் தண்டிக்கப்படுவார். தம் நிலை, அந்தஸ்து இழந்து சக போராளிகளால் கூட மதிக்கப்படாது நடாத்தப்படுவார். ஆனால் அவர் இயகத்தின் மீது விசுவாநமிக்கவராகவும் தம் தலைமைத்துவத்தின் மீது பாசமுள்ளவராகவும் இருப்பார். இயக்கம் அவரைக் கண்டு கொள்ளாவிட்டாலும் அவரின் மனோநிலை இயக்கம் பற்றியதாகவே இருக்கும். இயக்கத்தில் பால்ராஜ் அண்ணரின் மனோநிலையை ஒத்த ஒரு பாத்திரமாகவே ரோமியோ பாத்திரத்தை குணா கவியழகன் படைத்துள்ளார். போராட்ட வாழ்வுக்கு தம்மை அர்பணித்து நம் கண்முன்னே மடிந்த படைத்தளபதிகளின் நிழல் விம்பமே சேரா, கில்மன் முதலான பாத்திரங்கள். போராட்டம் மீதும் தம் தலைவன் மீதும் தம் போராளிகளின் மீதம் அவர் கொண்டிருந்த ஈடுபாடு என்பது மிகச் சாதரணமானதன்று. அவர்களின் இலட்சியங்கள் உன்னதமானவை. தம்தாய் நிலத்தை உரம் கொள்ளச் செய்பவை.

போராளி ஒருவனின் இழப்பால் குடும்பம் மாத்திரம் துயரை அனுப்பவிப் பதில்லை. அவனோ: ஒத்தியங்கிய போராளிகளும் அவ்விழப்பால் அல்லற்படுகின்றனர். ஒரு போராளியின் இழப்பு குடும்பத்தை மாத்திரமன்றி இயக்கத்தையும் பாதிக்கின்றது என்பதை இதயனின் இழப்புக்கூடாக குணா கவியழகன் வெளிப்படுத்துகிறார்.

இயக்கவாழ்வு என்பது இனிப்பானதல்ல. அது இனிப்பும் கசப்பும் நிறைந்த கூட்டுக்குடும்ப வாழ்வு. இவ்வாழ்வு றாகுலன், கவி, கோபி, மணி, வீரா முதலானவர்களின் முகாம் வாழ்வுக்கூடாக வெளிப்படுத்தப்படுகிறது. குணாகவியழகனின் மூளையால் எழுதப்பட்ட இப்புனைவு ஈழத்தின் வரலாற்றுப் பதிவாக விளங்குகிறது. செய்நேர்த்திமிக்க மொழி உள்ளத்தின் உணர்வுகளுக்கும் போர்கிளர்த்தும் எண்ணங்களுக்கும் உருக்கொடுக்கிறது. ஈழத்தில் பேசப்படாததும் பேச அஞ்சும் விடயங்களைப் பேசும் இப்புனைவு கடந்தகால வாழ்வின் பக்கங்களைப் புரட்டிப் படிக்கின்றது

-சி.ரமேஸ்

http://www.nanilam.com

**

**